ஒட்டகம் பற்றி அறிந்ததும் அறியாததும்.
ஒட்டகம் பற்றி அறிந்ததும் அறியாததும்.

ஒட்டகம் பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டியாகும். இவை ஆசியா, வடக்கு மற்றும் ஆபிரிக்காவிலுள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. 

ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். இவை பொதுவாக 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழும்.  இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். 

ஒட்டகம் ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது. பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றன.

 நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும். அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும். மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது .

உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது.அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 2.4 மடங்கு விரிந்து இடமளிக்கிறது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை.

ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது . குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 °செல்சியசிலிருந்து 41.7 °செல்சியசிஸ் வரை தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக் கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்க முடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது.

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது .


ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்.


ஓட்டகத்தின் ஈரலானது  யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது. ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.

ஒட்டகத்தின்  பாத அமைப்பு வித்தியாசமானது. வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது. ஒட்டகத்தின்  கால்களில்  மூன்றுமடக்கும் இணைப்புகள் இருக்கும். அதனால்  ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது.

பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருக்கும். 


வேறெந்த விலங்கிற்கும் இல்லாத விசேட மூக்கமைப்பை ஒட்டகம் கொண்டுள்ளது. அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது. 


பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும். அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடமைப்பை இவை கொண்டிருக்கும். அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு. அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது.


மனிதர்கள் ஒட்டகங்களை சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.

பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்றாக  ஒட்டகப் பால் காணப்படுகிறது . ஒரு மனிதனால் சசாதாரணமாக  ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும். அந்தளவிற்ற்கு ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. பசுப்  பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின்-சி அதிகமாகவும் உள்ளது.

ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக சாப்பிடப்பட்டு வருகிறது.  இன்னமும்  , சோமாலியா, சீபூத்தீ, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், எதியோப்பியா, கசக்ஸ்தான் போன்ற பகுதிகளில் ஒட்டக இறைச்சி உண்ணப்படுகிறது. 

ஒட்டகங்கள் உணவும், நீரும் கிடைக்கும் பொழுது தேவைக்கதிகமாக உண்ணும். உண்ட உணவுகளை கொழுப்பாக மாற்றி  அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது. சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும். உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது. ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான  ஒட்டகங்கள் உள்ளன. அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை. 

440 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.