திரை கடலோடியும் திரவியம் தேடுறதை விடவும். அக்கரைப் பச்சை ஆசையைக் காட்டி இக்கரையில் இருந்தே கோடிக்கணக்கில சுருட்டுறதுதான் இப்ப சுகமான வழி. ஏமாறுற ஆக்கள் இருக்கிறவரைக்கும் ஏமாத்துறவையும் இருக்கத்தானே செய்யினம். உந்தப் பொருளாதார நெருக்கடி வந்தபிறகு இஞ்ச இருந்து வெளிநாட்டுக்குப் போற ஆக்களின்ர தொகை கூடிப் போட்டது. எங்க திரும்பினாலும் வெளிநாட்டுக்குப் போற கதையள் தான். இப்பிடி தாங்கள் வெளிநாட்டுக்குப் போக 'ட்ரை' பண்ணுறம் எண்டதை ஒரு பெருமையாச் சொல்லுறவையும் இப்ப கூடிப்போச்சினம். ஆனால் அந்தப்பெருமைக் கதையை வைச்சுத்தான் அவைக்கு தூண்டில் போடுற விளையாட்டும் நடக்குது. விதவிதமான ஏமாத்துகளில் ஒரு வித்தியாசமான ஏமாத்து கிட்டடியில பிடிபட்டது.
யாழ்ப்பாணத்தில இருக்கிற ஒரு சர்வதேச ரீதியான தொண்டு நிறுவனங்களில அதுவும் ஒண்டு. சனங்களுக்குச் சேவை செய்யவெண்டு சமூகத்தில 'சிங்கம்' மாதிரி இருக்கிறவையைச் சேர்த்து இந்தத் தொண்டு நிறுவனம் கனபேருக்கு நிறைய உதவியளைச் செய்து கொண்டு வருகுது. சமூகத்தில பெரும் மட்டங்களில் இருக்கிறவையள் இப்பிடியான அமைப்புகளில இருக்கிறதை ஒரு கௌரவமாவும் நினைக்கிற அளவுக்கு இந்தத் தொண்டு நிறுவனங்களைப் பற்றி சனத்திட்டையும் நல்ல அபிப்பிராயம் இருக்கு. அப்பிடியான சங்கத்துக்கு ஒரு கரும்புள்ளி மாதிரி ஒரு அம்மணி பெரும் விளையாட்டுக் காட்டிப் போட்டா. அந்த அமைப்பில தங்கட கிளையில இருக்கிற இளம் ஆக்களிட்டையும், அந்த தொண்டு நிறுவனம் பற்றி அறிஞ்சவையிட்டையும் 'எங்கட நிறுவனம் வெளிநாட்டு கூட்டத்துக்கு ஆக்களை அனுப்புது. அப்பிடி எங்கட நிறுவனத்தின்ர சார்பில போறமாதிரி உங்கட பேரைப் பதிஞ்சு அனுப்பலாம்" எண்டு முதலாவது தூண்டிலை அவா போடுவாவாம்.
அதுக்கு ஆரும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு 'அப்பிடியோ? எவ்வளவு காசெண்டாலும் தரலாம். என்னையும் அனுப்பி விடுங்கோ'எண்டு கையில காசோட வந்திடுவினமாம். ஆனால் அந்த அம்மணி தன்னை லேசில காட்டிக்குடுக்க மாட்டா. 'இதெல்லாம் தொண்டு. காசுக்காக செய்யிற ஆள் நானில்லை. உங்கட போக்குவரத்து, தங்குமிடம், விசா எண்டு ஒரு பதினைஞ்சு லட்சம் செலவாகும். அதைமட்டும் கட்டி னால் காணும். அப்பிடியே கனடா தான்' எண்டு வெள்ளையும் சொள்ளையுமாக் கதைக்க, எல்லாரும் அதை நம்பிடுவினம். பதினைஞ்சு லட்சத்தோட கனடா போகலாமெண்டா ஆர் தான் அதை நழுவ விடுவினம். 'அக்கா, இந்தாங்கோ காசை வைச்சுக்கொண்டு என்னை உங்கட நிறுவனக் கூட்டத்துக்கு போறமாதிரி அனுப்பி விடுங்கோ' எண்டு கனபேர் கியூவில நிக்கத் தொடங்கியிருக்கினம்.
எல்லாரிட்டையும் வஞ்சகம் இல்லாமல் 'ஒரே காசு ஒரே கனடா' எண்ட கொள்ளையோட 15 லட்சப்படி வாங்கி, கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேலதன்ர எக்க வண்டில போட்டிட்டா. காசை வாங்கிப்போட்டு, சிழமைக் கணக்கா கூட்டத்துக்கு அனுப்பேலையே எண்டு சந்தேகம் வந்த சிலர், அவாவிட்ட காசைக் கேட்டும் பார்த்திருக்கினம். 'மீட்டிங் கான்சல் அடுத்தமுறை நடேக்கேக்க கட்டாயம் அனுப்பவம்' எண்டு அவர் சொன்ன சாட்டை காசைக் குடுத்தவை நம்பத்தயாரில்லை. அதால பொலிஸிட்ட முறைப்பாடு செய்ய. பொலிஸ் விசாரிச்ச விசாரிப்பில் 4 கோடியை ஆட்டையைப் போட்ட கதையை அம்மணி வெளியில கக்கிட்டாவாம். எப்பிடியேல்லாம் ஏமாத்துகினம் எண்டு பாத்தியளே?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.