தெரேசா மே – ஸி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு

பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே மற்றும் சீன அரச அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஜி-20 உச்சிமாநாடு ஆரம்பமாகியதன் பின்னர் ஒரு புறத்தே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. பிரிட்டன் மற்றும் சீனாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருநாடுகளுக்கும் இடையில் உள்ள நற்புறவு இவ்வருடத்துடன் 45 ஆண்டுகளை அடைகின்றது. இந்த உறவுகளை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மேன்மேலும் விருத்தி செய்வது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீன அரச தலைவர் “வலுவூட்டப்பட்ட மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பு உறவுகளை மேலும் விருத்தியடைய வைப்பதே எமது நோக்கம்” என தெரிவித்தார்.

பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரேசா மே, “உலகளாவிய ரீதியில் விரிவான மூலோபாய கூட்டுறவை ஊக்குவிக்கும் வகையில் சீனாவுடனான உறவுகள் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பில் சீனாவுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா தயார்”- என்று தெரிவித்தார்.

You might also like