கூட்டமைப்பின் பரிந்துரைகள் ஒதுக்கப்பட்டது

புதிய பயங்கரவாத சட்டவரைவு உருவாக்கத்தில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் – ஆலோசனைகளை கணக்கில் எடுக்காமல், அவற்றை உள்வாங்காமலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

‘பன்னாட்டு வரையறைகளை மீறி புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை – சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பன பாதிப்புறாத வகையில் சட்டம் மீள உருவாக்கப்பட வேண்டும்’ எனக் கோரியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதக் கூட்டத் தொடரில், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, பன்னாட்டுத் தரத்துக்கு இயைபான புதிய சட்டத்தை கொண்டு வர அரசு உறுதியளித்திருந்தது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ள சட்டத்தை விட மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சாடியிருந்தது.

பயங்கரவாதம் என்பதன் வரைவிலக்கணம், சட்டத்தரணிகள் சந்தேக நபர்களை அணுகுவது தொடர்பான சட்ட ஏற்பாடு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பிலான சட்ட ஏற்பாடு, தடுப்புக் காவல் காலம் தொடர்பான சட்ட ஏற்பாடு ஆகிய நான்கு விடயங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தது.

பயங்கரவாதம் என்பதன் வரைவிலக்கணம் தவிர்ந்த ஏனைய மூன்று விடயங்களிலும் மாற்றம் செய்வதற்கு அரசு முதலில் இணங்கியது. பயங்கரவாதம் என்பதன் வரைவிலக்கணம் தொடர்பில் கூட்டமைப்பின் தொடர்ச்சியான அழுத்தங்களால், அந்த வரைவிலக்கணத்தை வரைந்து தருமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பயங்கரவாதம் தொடர்பான வரைவிலக்கண வரைவைப் பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

இந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவுக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வரைவில், கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நான்கு திருத்தங்களில் மூன்று திருத்தங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளது. தடுப்புக் காவல் காலத்தினை மாத்திரம் மாற்றம் செய்த அரசு, ஏனைய மூன்று விடயங்களிலும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தினர், பாதுகாப்புத் தரப்பினரின் நலனை முன்னிறுத்திய அழுத்தத்தை தொடர்ச்சியாக – தொடர்ந்து பிரேரித்ததன் காரணமாகவே அந்த மூன்று திருத்தங்களையும் அரசு கைவிட்டுள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதனையுமே பயங்கரவாதமாக வரைவிலக்கணப்படுத்தும் வகையில் மிக மோசமாகவே, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கே அமைச்சரவை அனுமதியும் வழங்கியுள்ளது.

இதனைக் கண்டித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் நீதித்துறை கொண்டிருந்த இறுக்கமான கட்டுப்பாடுகளை இல்லாமலாக்கும் – சேதமாக்கும் வகையில் புதிய வரைவு அமையப் பெற்றுள்ளது. பொதுமக்களின் சுதந்திரத்தை இது பாதிக்கின்றது. இப்படியான வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் கூட்டமைப்பு அதிர்சியடைகின்றது.

மனித உரிமைக்கு உட்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கு நாம் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம். இதற்காக நாடாளுமன்றில் கூட்டமைப்பு காத்திரமான ஈடுபாட்டைக் காண்பித்து வருகின்றது. பன்னாட்டு ரீதியில் பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்டதை தாண்டியதாக அமையக் கூடும் விதத்தில், புதிய சட்ட ஏற்பாடு அமைந்துள்ளதை கூட்டமைப்பு அவதானித்துள்ளது.

கடந்த ஆட்சியில், அசாத் சாலி, பத்திரிகையாளர் எஸ்.ஜே.திசநாயகம் போன்றோர் மாற்றுக் கருத்துக்களுக்காக தண்டிக்கப்பட்டதைப் போன்ற கட்டுப்பாடுகள் புதிய சட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைவின் வரைவிலக்கணம் தெளிவற்றதாகவும் – உறுதியற்றதாகவும், இலங்கையின் பன்மைத் தன்மை மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுவதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சித்திரவதை, பலவந்தமாக காணமல் ஆக்கப்படுதல், துன்புறுத்தலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான அச்சுறுத்தலை விசாரணை செய்தல் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளின் அடிப்படையில் புதிய சட்டவரைவு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்புக் கோரியுள்ளது.

புதிய சட்டவரைவு, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையிலும், பேச்சு சுதந்திரம், நாட்டின் பன்மைத்துவத்தை திணறடிக்கும் வகையிலும், சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களுக்கு தேவையான ஓட்டைகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. மக்கள் உரிமையின் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்று கூட்டமைப்பு அரசிடம் கோரியுள்ளது.

You might also like