காணாமல் போவதிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தால் பாதிப்பில்லை!

காணாமல் போவதில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு இராணுவத்தை பாதிக்கும் என கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை.
இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்தார்.

கண்டிக்குச் சென்ற பாதுகாப்புச் செயலர் அங்கு அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயகர்களை சந்தித்து ஆசி பெற்றார். தலதா மாளிகைக்கும் சென்றார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்ட வரைவு இராணுவத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கடந்த வாரத்தில் இது தொடர்பில் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சட்ட வரைவு ஊடாக படையினருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விடயம் உண்மையா? இல்லையா? என்பதை விளக்க நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் இராணுவத்தினர் எந்தவொரு சந்தேகமும் இன்றி அச்சமின்றி இருக்க முடியும் என நான் உறுதிப்படுத்துகின்றேன். இந்த அரசு, அரசதலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் இராணுவத்தினருக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.- என்று பாதுகாப்புச் செயலர் பதிலளித்தார்.

பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பலரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று முன்னாள் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் குற்றஞ்சாட்டியுள்ளரே? என்று அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய அதிகாரி என்ற வகையில் அவசியமான குற்றவியல் விசாரணை நடைபெறுவதை நான் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைபெறுவதை தவிர தேவையற்ற கைதுகள் இடம்பெறாது என்பதை நான் உறுதியாக கூறுகின்றேன்.

தேவையற்ற விதத்தில் எதிர்காலத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கைதுகளை மேற்கொள்ளும் நிலைமை ஒருபோதும் ஏற்பாடாது என நான் நினைக்கின்றேன். அவ்வாறு இடம்பெற்று இருக்குமாயின் உரிய முறையில் நீதிமன்றச் செயற்பாடுகள் ஊடாக அவை முடிவுக்கு கொண்டுவரப்படும். – என்று பாதுகாப்புச் செயலர் கூறினார்.

வடக்கு, கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினரே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் பொலிஸார் கூறுகின்றனரே? எனவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல போதைப்பொருள் எந்தவொரு இடத்தில் இருந்து வந்தாலும் அதனை நிறுத்த வேண்டும். பொலிஸார் மீது குற்றச் சாட்ட வேண்டாம். அது தவறானது. பெருந்தொகையான போதைப் பொருக்களை தடுத்து அவற்றை கொண்டு வந்தவர்களை பொலிஸார் கைதுசெய்வதை நாம் நாளாந்தம் பார்க்கின்றோம். பொலிஸாருடன் இணைந்து ஏனைய பாதுகாப்பு தரப்பினர், எந்தவொரு மாகாணாமாக இருந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் சரி போதைப்பொருளை நிறுத்த வேண்டும் என்ற வியடத்துக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்- என்று கபில வைத்தியரத்ன தெரிவித்தார்.

You might also like