மக்களின் கேள்வி!

புதிய அர­ச­மைப்பு ஒன்றின் உரு­வாக்­கம் பற்­றித் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் நீண்ட காலத்­தின் பின்­னர் வாய் திறந்­தி­ருக்­கி­றார்.

கிளி­நொச்சி நக­ருக்கு அண்­மை­யில் வருகை தந்­தி­ரு­ந்தார் அவர். அங்கு தனது கட்சி உறுப்­பி­னர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் இடையே பேசி­னார். அங்­கேயே புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் குறித்­தும் விளக்­க­ம­ளித்­தார்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் கூட்­ட­மைப்பு விட்­டுக்­கொ­டுக்­கி­றது, தேர்­தல் அறிக்­கை­யில் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறாக அர­சோடு சேர்ந்து சோரம் போகி­றது என்ற கடும் விமர்­ச­னங்­க­ளைக் கூட்­ட­மைப்பு எதிர்­கொண்டு வரும் காலம் இது.

கூட்­ட­மைப்பு, கூட்­டாட்சி க்(சமஷ்டி) கோரிக்­கை­யைக் கைவிட்­டு­விட்­டது, ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­விட்­டது, பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்க இயைந்­து­விட்­டது என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் பல­மாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கூட்­ட­மைப்­புக்கு உள்­ளேயே இருக்­கும் வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர்­கூட இது­போன்ற கதை­க­ளைப் பொது­வெ­ளி­யில் பரப்பி வரு­கி­றார். சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் போன்ற கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளி­க­ளும் அத­னையே கூறி­வ­ரு­கின்­ற­னர். உள்ளே இருப்­ப­வர்­களே இப்­ப­டி­யென்­றால், கூட்­ட­மைப்­பின் எதிரிகள் என்ன சொல்­வார்­கள் என்­ப­தைச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

இந்த நிலை­யில்­தான் அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் என்ன நடக்­கி­றது என்­பது தொடர்­பி­லும், அதைப் பற்­றிப் பொது­வெ­ளி­யில் பேசாது, தான் அமைதி காத்­து­வ­ரு­வ­தற்­கான கார­ணங்­கள் குறித்­தும் எத்­த­கை­ய­தொரு தீர்­வுக்­குத் தாம் இணங்­கிப் போகக்­கூ­டும் என்­றும் கிளி­நொச்­சிக் கூட்­டத்­தில் விளக்­கி­யி­ருக்­கி­றார் சம்­பந்­தன்.

அதி­கா­ரப் பகிர்­வைப் பொறுத்­த­வ­ரை­யில் கூட்­டாட்சி (சமஷ்டி) என்ற சொல் அர­ச­மைப்­பில் இடம்­பெ­றா­விட்­டா­லும், உச்­ச பட்ச அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து, மத்தி அவற்றைத் திரும்ப எடுத்­துக்­கொள்ள முடி­யாத வகை­யில் ஏற்­பா­டு­கள் இருக்­கு­மா­னால், அதனை ஏற்­றுக்­கொள்­வது குறித்­துப் பரி­சீ­லிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்­கி­றார் சம்­பந்­தன்.

அதா­வது, அதி­க­பட்ச அதி­கா­ரப் பகிர்­வு­டன் கூ­டிய கூட்­டாட்­சி­யின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் கொண்ட புதிய அர­ச­மைப்பை சமஷ்டி என்ற சொல் இல்­லா­விட்­டா­லும்­கூட, ஏற்­றுக்­கொள்­ள­லாம் அல்­லது கூட்­ட­மைப்பு ஏற்­கும் என்­ப­து­தான் சம்­பந்­தர் சொன்­ன­தன் அர்த்­தம்.

‘‘இது­வரை நடந்த பேச்­சுக்­க­ளின்­படி மிக­வும் கூடி­ய­ அள­வில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்த­ளிக்­கப்­ப­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. காணி , சட்­டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகா­தா­ரம், விவ­சா­யம், நீர்ப்­பா­ச­னம், கடற்­றொ­ழில், எல்­லா­வி­த­மான கைத்­தொ­ழில், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்­றம், தொழில்­வாய்ப்பு, சமூக பொரு­ளா­தார விட­யங்­கள், என்பவற்றில் எமது மக்­க­ளின் நாளாந்த தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யக்­கூ­டிய வகை­யில் மக்­கள் தங்­க­ளால் தெரி­வு­செய்­ய­க்கூ­டிய பிர­தி­நி­தி­க­ளால் தங்­க­ளின் கரு­மங்­களை கையா­ளக்­கூ­டிய வகை­யில் அதி­கா­ரங்­கள் பகிர்ந்த­ளிக்­கப்­ப­டும்.

வழங்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­கள் உறு­தி­யா­ன­தாக இருக்க வேண்­டும். மீளப்­பெ­றப்­ப­டாத வகை­யில் இருக்கவேண்­டும், அந்த அதி­கா­ரங்­க­ளுக்கு எவ்­வி­த­மான தடை­க­ளும் இல்­லாது இருக்க வேண்­டும்.

எவ்­வி­த­மாக குறுக்கு வழி­யி­லும் அதி­கா­ரங்­களை உடைக்க முடி­யாத அள­வில் இருக்­க­வேண்­டும். அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்ட துறை­க­ளில் மத்­திய அரசு அதி­கா­ரம் எது­வும் இருக்­கக்­கூ­டாது. அவ்­வி­த­மாக இருந்­தால்­தான் அது உறு­தி­யாக இருக்­கும்.’’ இப்­ப­டித் தெரி­வித்­தார் சம்­பந்­தன்.

இந்த அடிப்­ப­டை­யி­லான ஓர் அர­ச­மைப்பை கூட்­ட­மைப்பு ஏற்­கத் தயா­ராக இருக்­கி­றது என்­ப­து­தான் அதன் வெளிப்­பாடு. அதே­போன்று மற்­றைய மதங்­க­ளுக்­கும் சம­மான உரிமை வழங்­கப்­ப­டும் நிலை­யில், பௌத்­தத்­தின் முன்­னு­ரி­மையை நீக்­கக் கோர­வேண்­டி­ய­தில்லை என்ற சாரப்­பட்ட கருத்­தை­யும் அவர் முன்­வைத்­தார்.

ஆனால் எப்­போ­தும் போலவே தனது வார்த்­தை­க­ளில் அவர் மிகக் கவ­ன­மாக இருந்­தார். அதி­கா­ரங்­களை உச்ச அள­வில் பகிர்­வ­தற்கு இது­வரை இணங்­கப்­பட்­டுள்­ளது என்றே அவர் தெரி­வித்­தார். அது­போன்றே மீளப்­பெற முடி­யா­த­தாக அதி­கா­ரப் பகிர்வு இருந்­தால்­தான் அது உறு­தி­யாக இருக்க முடி­யும் என்­றார். நிச்­ச­ய­மற்ற இந்த வாக்­கி­யங்­கள் ஊடாக அவர் கூற­வ­ரு­வ­ தெல்­லாம், இப்­படி நடந்­தால் நல்­லது; நடக்­கும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­தம் ஏது­மில்லை என்­ப­துதான்.

தமிழ் மக்­கள் முன்­னுள்ள பிரச்­சி­னையே அது­தான். இவற்­றை­யெல்­லாம் நடத்­து­விப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புப் பய­ணிக்­கும் இந்­தப் பாதை சரி­யா­ன­து­தானா என்­ப­து­தான் மக்­க­ளின் கேள்­வியே. ஏனெ­னில் ,ஒற்­றை­யாட்­சியை விட்­டுக்­கொ­டுக்க மாட்­டோம், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தில் மாற்­ற­மில்லை என்­றெல்­லாம் தெற்­கில் அர­சி­யல் தலை­வர்­கள் கூறி­வ­ரு­கை­யில், உச்­ச­பட்ட அதி­கா­ரப் பகிர்­வும் மதங்­க­ளுக்கு சம உரி­மை­யும் கிடைக்­கும் என்று எப்­படி நம்­பு­வது என்­ப­து­தான் மக்­க­ளின் கேள்வி!

You might also like