விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!!

Get real time updates directly on you device, subscribe now.

10- ஆவது ஆண்டு விஜய் விருது வழங்கும் நிகழ்வு, சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா
உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை கோபிநாத், டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினா். ‘பலே பலே பாகுபலி’ என்ற பின்னணி இசையோடு, பாய்- தலையணையுடன் மேடையேறினார் மா.கா.பா.ஆனந்த்.

முதலாவதாக சிறந்த பாடலாசியர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதுக்கு தனுஷ், நா.முத்துக்குமார், தாமரை, உமாதேவி, விவேக் ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘அறம்’ படத்தின் ‘தோரணம் ஆயிரம்’ பாடலுக்காக உமாதேவி விருதினை வென்றார். சிநேகன் இந்த
விருதினை வழங்கினார்.

* சிறந்த எடிட்டருக்கான விருதுக்கு லாரன்ஸ் (அவள்), பிலோமின் ராஜ் (மாநகரம்), ரிச்சர்ட் கெவின் (விக்ரம் வேதா), ரூபன் (விவேகம்), சிவானந்த ஈஸ்வரன் (தீரன் அதிகாரம் ஒன்று) ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘மாநகரம்’ படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றார் பிலோமின் ராஜ். நடிகர் ராஜேஷ் விருதினை வழங்கினார்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படத்துக்காக மெர்சல், சிங்கம் 3, தீரன் அதிகாரம் ஒன்று, வேலைக்காரன், விக்ரம் வேதா மற்றும் விவேகம் ஆகிய படங்கள் போட்டியிட்டன. இதில் ‘மெர்சல்’ தேர்வானது. இயக்குநர் கே. பாக்யராஜ் விருதினை வழங்க, தயாரிப்பாளர் ஹேமா
ருக்மணி பெற்றுக் கொண்டார்.

* சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ஜி.கே.விஷ்ணு (மெர்சல்), பி.எஸ்.வினோத் (விக்ரம் வேதா), சத்யன் சூரியன் (தீரன் அதிகாரம் ஒன்று), ரவிவர்மன் (காற்று வெளியிடை) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘காற்று வெளியிடை’ படத்துக்காக ரவிவர்மன் விருதினை
வென்றார். நடிகை ராதா வழங்கினார்.

* சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு அறிவழகன் (குற்றம் 23), வினோத் (தீரன் அதிகாரம் ஒன்று), மோகன் ராஜா (வேலைக்காரன்), புஷ்கர் – காயத்ரி (விக்ரம் வேதா) மற்றும் ராம் (தரமணி) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘விக்ரம் வேதா’ படத்துக்காக புஷ்கர் – காயத்ரி
விருதினை வென்றார்கள். இயக்குநர் பாலா விருதினை வழங்கினார்.

* சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதுக்கு அழகம் பெருமாள் (தரமணி), பாரதிராஜா (குரங்கு பொம்மை), எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்), விவேக் பிரசன்னா (மேயாத மான்) ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘மேயாத மான்’ படத்துக்காக விவேக் பிரசன்னா விருதினை வென்றார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுக்கு அதிதி பாலன் (அருவி), அக்‌ஷரா ஹாசன் (விவேகம்), அனு இம்மானுவேல் (துப்பறிவாளன்), ப்ரியா பவானி சங்கர் (மேயாத மான்), சாயிஷா சைகல் (வனமகன்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘அருவி’ படத்தில் தனித்துவமான
நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த அதிதி பாலன் வென்றார். இவருக்கு கீர்த்தி சுரேஷ் விருதினை வழங்கினார். மேலும், படம் பார்த்தவுடனே தொலைபேசி வாயிலாக அதிதியைப் பாராட்டியதாகவும்
கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.

* சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு முனீஸ்காந்த் (மாநகரம்), ஆர்.ஜே.பாலாஜி (இவன் தந்திரன்), சதீஷ் (பைரவா), சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற) மற்றும் விடிவி. கணேஷ் (சக்க போடு போடு ராஜா) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘சங்கிலி புங்கிலி கதவ
தொற’ படத்துக்காக சூரி விருதினை வென்றார். நடிகர் கார்த்தி விருதினை வழங்கினார்.

* ‘கடைக்குட்டி சிங்கம்’ குழுவினர் மேடையேறி படத்தின் டீஸரை வெளியிட்டனர். முழுக்க  முழுக்க விவசாயிகளை முன்னிலைப்படுத்தி இப்படத்தை எடுத்திருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ்
தெரிவித்தார்.

* வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றார் நடிகர் சிவகுமார். அவரைப் பற்றிய பிரத்யேக வீடியோ திரையிடப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டார். ரூபினி, ராதா, அம்பிகா மற்றும் ரேவதி
அவருக்கு விருதினை வழங்கினார்கள். அப்போது அவரது மனைவியும், மகன் கார்த்தியும் உடனிருந்தனர். விழா அரங்கமே எழுந்து நின்று சிவக்குமாருக்கு கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தியது.

* சிறந்த நடிகைக்கான விருதுக்கு அதிதி ராவ் (காற்று வெளியிடை), ஆண்ட்ரியா (தரமணி), நயன்தாரா (அறம்), ஷ்ரதா ஸ்ரீநாத் (விக்ரம் வேதா) மற்றும் தன்யா (கருப்பன்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘அறம்’ படத்துக்காக நயன்தாரா விருதினை வென்றார். கார்த்தி விருதை வழங்கினார்.

* சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை வழங்க அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் மேடையேறினார்கள். மூவருமே ஏ.ஆர்.ரஹ்மானிடம் தங்களுக்கு பிடித்தது என்ன என்று பகிர்ந்து கொண்டார்கள். ‘காற்று வெளியிடை’ படத்துக்காக இவ்விருதினை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

* ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருக்க, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மேடையேறி ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல்’ என்ற பிரிவில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கான விருதினை வழங்கினார். அப்போது அவர் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார்.

* ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலே இருக்க, சிறந்த பின்னணி பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இறைவா’ பாடலுக்காக அனிருத் வென்றார். ஏ.ஆர்.ரஹ்மான் கையால் பெற்றிருப்பதால் இந்த விருது மிகவும் ஸ்பெஷல் என்றார் அனிருத்.

* சிறந்த பாடகருக்கான விருதினை வென்றால் ‘கோலமாவு கோகிலா’ படத்திலிருந்து ‘கல்யாண வயசு’ பாடலை பயங்கர ஆரவாரத்திற்கு இடையே பாடினார். அதனைத் தொடர்ந்து எந்தவொரு விழா நடந்தாலும், அதில் தனுஷுடன் பாடுவது வழக்கம். அவரை மேடைக்கு அழைக்கிறேன் என்று கேட்டவுடன் தனுஷ் மேடையேறினார். இருவரும் இணைந்து ‘ஊதுங்கடா சங்கு’ பாடலைப் பாடினார்கள்.

* தனுஷ் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர் ஒருவர் யாருமே எதிர்பாராத வண்ணம், அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த பலரும் ரசிகரைப் பிடித்து இழுக்க, தனுஷ் ரசிகரை விடுவித்து, அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

* சிறந்த நடன இயக்குநருக்கான விருதுக்கு பிருந்தா (காற்று வெளியிடை), ஷெரிஃப் (மேயாத மான்), ஷோபி (மெர்சல், வேலைக்காரன்) உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ‘காற்று
வெளியிடை’ படத்துக்காக பிருந்தா இந்த விருதினை வென்றார். அருண் விஜய் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து விருதை வழங்கினார்கள்.

* ‘அறம்’ படத்துக்காக சிறந்த நாயகிக்கான விருதினை வென்றார் நயன்தாரா. துல்கர் சல்மான் இவ்விருதை வழங்கினார். அப்போது ‘ராஜா ராணி’ படத்தில் ஜெய் பேசும் பிரபலமான வசனத்தை
நயன்தாராவிடம் பேசி அப்ளாஸ் அள்ளினார்.

* சிறந்த பொழுதுப்போக்காளருக்கான விருதினை வென்றார் தனுஷ். துல்கர் சல்மான் இவ்விருதை வழங்கினார். தனுஷ் மேடையிலேயே இருக்க, ‘ப.பாண்டி’ படத்துக்காக சிறந்த உறுதுணை
நடிகைக்கான விருதினை வென்றார் ரேவதி. தனுஷ் விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதினை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வென்றார். பார்த்திபன் விருதினை வழங்கும் முன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனது கருத்துக்களைக் கூறி கைத்தட்டல்களை அள்ளினார்.

* சிறந்த கதைக்கான விருதினை ‘ரங்கூன்’ படத்துக்காக ராஜ்குமார் வென்றார். பார்த்திபன் விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை ‘தரமணி’ படத்துக்காக வசந்த் ரவி வென்றார். அவருக்கு பிந்து மாதவி மற்றும் தேவயானி இணைந்து விருதினை வழங்கினார்கள்.

* சிறந்த திரைக்கதைக்கான விருதினை ‘விக்ரம் வேதா’ படத்துக்காக புஷ்கர் – காயத்ரி வென்றார்கள். இவர்களுக்கு விஜய் சேதுபதி விருதினை வழங்கினார்.

* சிறந்த வசனக்கர்த்தாவுக்கான விருதினை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துக்கு கிடைத்தது. யூகி சேது விருதினை வழங்க இயக்குநர் சுரேஷ் சங்கையா மற்றும் குருநாதன் இணைந்து பெற்றுக் கொண்டார்கள்.

* சிறந்த பின்னணி இசைக்கான விருதினை ‘விக்ரம் வேதா’ படத்துக்காக சாம் சி.எஸ். வென்றார். அவருக்கு யூகி சேது விருதினை வழங்கினார்.

* சிறந்த படத்துக்கான விருதினை ‘அருவி’ திரைப்படம் வென்றது. படக்குழுவினர் ஒன்றிணைந்து விருதினை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் சஷிகாந்த் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

* சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை ‘செந்தூரா’ பாடலுக்காக லட்சுமி வென்றார். அவருக்கு ரூபினி மற்றும் ரைசா இணைந்து விருது வழங்கினார்கள்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of