தன்னைப் பார்த்து சிரித்ததால் மனைவியை கொன்ற கணவர்!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சொகுசு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒருவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. “தன்னைப் பார்த்து தொடர்ந்து சிரித்ததால்“ மனைவியை அவர் கொலை செய்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

39 வயதான தனது மனைவியைக் கொலை செய்ததாக கென்னத் மன்ஸானெரெஸ் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் அந்தப் பெண்ணின் சடலம் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

கென்னத் கையிலும், சட்டையிலும் ரத்தக் கறை இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கென்னத்தின் வழக்கறிஞர், இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

இறந்துபோன பெண், அமெரிக்காவின் உட்டாவை சேர்ந்த கிறிஸ்டி என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனது மனைவியின் உடலை கென்னத் பால்கனியை நோக்கி இழுத்துச் சென்றதை, பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்பு இத்தம்பதி தங்கியிருந்த அறைக்குச் சென்ற ஒருவர் பார்த்தார் என்று ஆவணங்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர், அப்பெண்ணின் கால்களை பிடித்து அவரை அறைக்குள் இழுத்துள்ளார்.

என்ன நடந்தது என கென்னத்திடம் அவர் கேட்ட போது,“அவள் என்னைப் பார்த்து தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாள்“ என கென்னத் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அமைப்பின் அதிகாரிகள் இவர்கள் தங்கியிருந்த அறையைச் சோதனை செய்த போது, “எனது வாழ்க்கை முடிந்துவிட்டது“ என கென்னத் தெரிவித்தார் என்று ஆவணங்கள் கூறுகின்றன.

எமரால்டு ப்ரின்சஸ் சொகுசு கப்பலில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வாரப் பயணமாக கடந்த ஞாயிறன்று, 3 ஆயிரத்து 400 பயணிகளுடன் சியாட்டில் இருந்து இந்தக் கப்பல் கிளம்பியது.

அமெரிக்க கடற்பரப்பில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இக் கணவன், மனைவியின் உறவினர்களும் அதே கப்பலில் பயணம் செய்ததாக எஃப்பிஐ செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கென்னத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஜூனோவில் இருந்து காணொலி மூலம் அன்காரெரில் உள்ள நீதிமன்றத்தில் முதன்முறையாக முன்னிலையாார். வழக்கின் விசாரணை ஓகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நன்றி – பிபிசி

You might also like