சட்டமா அதிபர் திணைக்களம் சிறப்பாக செயற்படுகின்றது – யசந்த கோதாகொட

சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் எந்தவித புரிதலும் இன்றியே குற்றச்சாட்டுக்களை சுமத்த முற்பட்டுள்ளனர் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்துவரும் அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகி விசேட அறிக்கையொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட முன்வைத்தார். அதன்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் அர்ஜுனண் அலோசியஸின் கையடக்கத் தொலைபேசியின் அனைத்து தொடர்பாடல்களும் பீ.டி.எப் ஆக மாற்றப்பட்டுள்ளன. தற்போது எவர் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவை தொடர்பான தகவல் பறிமாற்றத்தை அறிந்துகொள்ள முடியும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்ப முறைமையைக் கொண்டே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் அடங்கிய 25 பக்கங்களைக் கொண்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் யசந்த கோதாகொட தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பம் தொடர்பில் எந்தவித புரிதலும் இன்றி 8 ஆயிரத்து 600 பக்கங்களைக் எவ்வாறு சட்டமா அதிபர் திணைக்களம் 48 மணித்தியாலத்திற்குள் விசாரணை செய்து முடித்தது என்று குற்றம்சாட்டப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர். அதனால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் ஆத்திரமடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது பழி போட முயல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like