கடலில் காணாமல் போன மீனவர் கரை திரும்பினார்

வடமராட்சி – வல்வெட்டித்துறைப் பகுதியில் கடலில் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டிதுறைப் பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் சிறிதரன் (வயது-47) என்பவரே கடந்த புதன்கிழமை காலையில் கடலில் தொழிலுக்காக சென்றபோது காணாமல் போயிருந்தார்.

குறித்த நபர் பயணித்த படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது படகு 25 கடல் மைல் தூரம் தெற்கு நோக்கி பயணித்த போது ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு வந்திருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இவரை மீட்டு உணவு குடிதண்ணீர் வழங்கி படகின் இயந்திரத்தையும் சீர்செய்துள்ளனர்.

இயந்திரத்துக்குரிய எரிபொருளையும் வழங்கி அவரது படகை தமது படகில் கட்டி இழுத்து வந்து பருத்தித்துறை கடற்பரப்பிற்கு 3 மைல் தொலைவில் கொண்டு வந்து சேர்த்தனர்.

கரைதிரும்பியுள்ள மீனவரது உடல் பலவீனமடைந்த நிலையில் தற்பொழுது வல்வெட்டித்துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

You might also like