தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டு தொடர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள், தமது போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்றுமுன்தினம் மனித மலத்தை உண்டு போராட்டத்தை நடத்தினர்.

பருவ மழை பொய்த்ததால், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வரட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன் சுமையால் உயிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி நதிநீர் பங்கீட்டை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

அதைக் கண்காணிக்க தனி வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியத் தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 58ஆவது நாளாக தொடர்ந்து நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தமது போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எலிகள், பாம்புகள், புற்களை உண்டும் நோயாளிகள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்று வேடமிட்டும், தூக்குக் கயிறுடனும் அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் அவர்களின் போராட்டம் இந்தியத் தலைமை அமைச்சர் மோடியாலோ அல்லது உயர்மட்டங்கள் எவராலுமோ கண்டுகொள்ளப்படவில்லை.

தமிழகத்தில்கூட அவர்களின் கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மனித மலத்தை உண்டு (தமது மலத்தை) அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like