Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்”

எஸ்.மல்லிகா

பெண்­கள் இன்று சகல துறை­க­ளி­லும் சாதித்து வந்­தா­லும், அவர்­கள் இன்­னும் தங்­கள் அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் நினைத்­தால், எதை­யும் சாதிக்­க­லாம்’ என்று கூறு­கி­றார் ஈழத்­தின் மூத்த எழுத்­தா­ள­ரும் பெண்­ணி­ய­வா­தி­யு­மான திரு­மதி பத்மா சோம­காந்­தன்.
உத­யன் பத்­தி­ரி­கைக்கு அளித்த செவ்­வி­யின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

பத்மா எனும் ஆளுமை

யாழ்ப்­பா­ணம்- வண்­ணார்­பண்ணை என்ற இடத்­தில் பிரம்­மஸ்ரீ ஏ.பஞ்­சா­தீஸ்­வ­ரக்­கு­ருக்­கள்- அமிர்­தம்­மாள் தம்­ப­தி­க­ளின் நான்­கா­வது மக­ளா­கப் பிறந்­த­வர் பத்மா. யாழ். இந்­துத் தமிழ் வித்­தி­யா­ல­யத்­தில் ஆரம்­பக் கல்­வி­யை­யும், இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யில் இடை­நிலை மற்­றும் உயர் கல்­வி­யை­யும் கற்ற இவர், பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி, அதி­ப­ரா­கப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்­ற­வர்.

பாட­சா­லை­யில் கற்­கும் காலத்­தி­லேயே எழுத்­து­ல­கில் காலடி பதித்­த­வர். பல படைப்­புக்­களை உல­குக்கு அளித்­த­வர். ஓவி­யம், தையற் கலை­க­ளி­லும் பாண்­டித்­தி­யம் பெற்­ற­வர்.

எழு­து­வ­து­டன் மட்­டும் தன்னை நிறுத்­திக்­கொள்­ளா­மல் பல்­வே­று­பட்ட அமைப்­புக்­க­ளி­லும் இணைந்து இயங்­கு­வ­தி­லும் பேரார்­வம் கொண்­ட­வர். ஊட­கத்­து­றை­யி­லும் முன்­னின்று செயற்­பட்­ட­வர்.

தென்­கி­ழக்கு, கிழக்கு, பேரா­தனை மற்­றும் யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தமது பட்­டப்­ப­டிப்­புக்­காக இவ­ரைப் பற்றி ஆய்­வுக் கட்­டு­ரை­கள் எழு­தி­யுள்­ள­னர்.
கல்­வித் துறை­யி­லும் முற்போக்­குப் பெண்­ணி­யச் சிந்­த­னையி­லும் தன் காலத்தை அதி­க­ளவு செல­விட்­டி­ருக்­கும் பத்மா சோம­காந்­தன், தற்­போ­தும் எழுத்து, மேடைப்­பேச்சு, இலக்­கி­யத் தளங்­க­ளில் தொடர் செயற்­பாடு என இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் அயர்ச்­சி­யற்ற பெண் ஆளுமை.

இவ­ரது எழுத்­துப் பணி­யைப் பாராட்டி- லில்லி தேவ­சி­கா­மணி பரிசு, சார்க் மக­ளிர் சங்­கப் பரிசு, வடக்கு- கிழக்கு மாகாண அமைச்­சின் சாகித்­திய பரிசு என்­ப­ன­வும், இவரது ஆளு­மை­யைக் கௌர­வித்து- இலக்­கி­யக் கலா­வித்­தகி, செஞ்­சொற்­செல்வி முத­லான பட்­டங்­க­ளும், தங்­கம்மா அப்­பாக்­குட்­டி­யின் சிவத்­த­மிழ் விருது என்­ப­ன­வும் வழங்­கப்­பட்­டுள்­ளன.
இனி அவ­ரது நேர்­கா­ண­லி­லி­ருந்து….

எழுத்­துப் பய­ண­மும்
அதன் ஆரம்­ப­மும்

கேள்வி: – தங்­கள் எழுத்­து­ல­கப் பிர­வே­சம் எப்­படி ஆரம்­ப­மா­னது?

ப:- நான் சிறு­மி­யாய் இருக்­கும் போதே கல்கி, பாலர் மலர் வாசிப்­ப­தி­லும் வீட்­டில் வாங்­கும் ஆனந்­த­வி­க­டன் போன்ற சஞ்­சி­கை­களை வாசிப்­ப­தி­லும் பேரார்­வம் கொண்­டி­ருந்­தேன். அத்­து­டன், துணுக்­கு­கள் மற்­றும் கேலிச்­சித்­தி­ரங்­க­ளில் கண்­ணோட்­டம் செலுத்­து­வ­தி­லும் ஆர்­வம் ஏற்­பட்­டது.

சில விட­யங்­களை வாசிக்­கும் போது எமது மன­தி­லும் சில எண்­ணங்­கள் தோன்­றும். அப்­ப­டியே நாமும் அவற்றை எழுத்­தாக்­கி­னால் எப்­ப­டி­யி­ருக்­கும் என்ற சிந்­தனை மன­தில் இழை­யோ­டும். அந்­தச் சிந்­த­னைக்­குச் செயல் வடி­வம் கொடுத்து, ஈழத்­தில் வெளி­வந்த பத்­தி­ரி­கை­க­ளின் சிறு­வர் பக்­கத்­துக்கு ஆக்­கங்­கள் எழு­தி­னேன்.

அவை பிர­சு­ர­மா­ன­தும், எனக்­குள் பேரா­னந்­தம் குடி­கொள்­ளும். இந்­நி­லை­யில், சுதந்­தி­ரன் பத்­தி­ரிகை நடத்­திய சிறு­க­தைப் போட்­டி­யில் பங்கு பற்றி- ‘இரத்­த­பா­சம்’ என்ற சிறு­கதை எழு­தி­னேன். அதற்கு எனக்கு முதற் பரி­சும் கிடைத்­தது. அந்­தப் பரிசு, என்னை எழு­தத் தூண்­டி­யது. எமது காலத்­தில் இருந்த சாதி­யப் பிரச்­சினை மற்­றும் பெண் முன்­னேற்­றம் குறித்து அதி­கம் எழு­தி­யுள்­ளேன். இன்­று­வரை என் எழுத்­துப் பய­ணம் தொடர்­கி­றது.

கே:- ஆசார இறுக்­கம் மிகுந்த காலத்­தில் தடை­களை மீறி, எழுத்­து­ல­கில் எப்­படி உங்­க­ளால் நிலைக்க முடிந்­தது?

ப:- நான் சிறு­மி­யாக இருந்த காலத்­தில் பெண்­கள் ஓர­ளவு படித்­தாலே போதும் என்ற நிலை­தான் இருந்­தது. மேற்­ப­டிப்­புக்­கெல்­லாம் பெண்­களை அனுப்­ப­மாட்­டார்­கள். வீட்­டுக்­குள்ளேயே அவர்­க­ளைப் பூட்டி வைத்­த­னர். நான் ஒரு பிரா­ம­ணப் பெண் என்­ப­த­னால், நிறை­யச் சவால்­க­ளுக்கு முகங்கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், என்­னை­யும் மீறிச் சாதிக்க வேண்­டும் என்ற ஒரு வீறு எனக்­குள் வந்­தது. அத­னைத் தன்­னம்­பிக்கை என்று கூடச் சொல்­ல­லாம். சிறு­வ­ய­தில் இருந்தே நான் யாருக்­கும் பயப்­ப­ட­மாட்­டேன். ஒரு அசாத்­தி­யத் துணிச்­ச­லைக் கொண்­டி­ருப்­பேன். அப்­போதே பெண்­ணி­யச் சிந்­த­னை­க­ளும் என்­னுள் முகிழ்க்­கத் தொடங்­கின. முற்­போக்­கா­கச் சிந்­திக்­கத் தொடங்­கி­னேன். வீட்­டுக்கு வெளியே பெண்­கள் போகத் தடை­வி­திக்­கப்­பட்ட அந்­தக் காலத்­திலே அர­சி­யல் மேடை­க­ளில் கூட துணிந்து முழங்­கி­னேன். இந்­தத் துணிச்­சல்­தான் என்னை எழுத்­து­ல­கில் நிலை­நி­றுத்­தி­யது.

பெண்­க­ளின் திற­மை­க­ளைக்
கட்­டிப்­போடக் கூடாது திரு­ம­ணங்­கள்

கே-: திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் பெரும்­பா­லான பெண்­கள் எழுத்­து­ல­கி­லி­ருந்து காணா­மல் போய்­வி­டு­கின்­ற­னர் என்று ஒரு கருத்­து­நிலை உண்டு. இது­கு­றித்து நீங்­கள் என்ன கூறு­கி­றீர்­கள்?

ப: திரு­ம­ண­மான பின்­னர் எழுத்­துத்­து­றை­யில் மட்­டு­மல்ல நட­னம், இசை முத­லான துறை­க­ளி­லும் பெண்­கள் நிலைப்­பது குறைவு. இதற்­குப் புரிந்­து­ணர்­வுள்ள- தோழமை உணர்­வுள்ள- முற்­போக்­குச் சிந்­த­னை­யுள்ள கண­வன் வாய்க்­கா­மை­தான் கார­ணம். இத்­த­கைய பெண்­க­ளுக்கு ஒத்த சிந்­தனை, இர­சனை உணர்வு மிக்க ஆண்­கள் கண­வ­ராக வாய்ப்­பது குறைவு. உற­வி­னர் வீடு­க­ளுக்­குச் செல்­வது, சமை­யல், கொண்­டாட்­டம் என்ற மூன்­றுக்­குள்­ளும் பெண்­ணின் வாழ்க்­கையை முடக்­கப் பார்க்­கின்­ற­னர் ஆண்­கள்.

அந்­தக் காலத்­தில் பெண் வேலைக்­குச் செல்­வ­தையே ஆண்­கள் விரும்­பு­வ­தில்லை. பெண் உழைப்­பில் சாப்­பி­டு­வதா? என்ற தன்­மா­னப் பிரச்­சினை, அவள் எங்கே தன்னை மிஞ்சி விடு­வாளோ என்ற ஆணா­திக்க நிலை போன்­ற­ன­தான் அதற்­குக் கார­ணம். இன்று நிலைமை அவ்­வா­றில்லை. படித்த- வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளையே மண­மு­டிக்க ஆண்­கள் விரும்­பு­கின்­ற­னர். எழுத்­து­ல­கில் தடம்­ப­திக்­கும் பெண்­கள் தம்மை விளங்­கிக்­கொள்­ளக்­கூ­டிய- புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய ஆண்­க­ளைத் திரு­ம­ணம் செய்­தால், அவர்­க­ளால் தொடர்ந்­தும் எழுத்­து­ல­கில் இயங்க முடி­யும்.

கே: தாங்­கள் பெண்­ணி­ய­வா­தி­யாக உரு­வாக என்ன கார­ணம்?

ப: -­ச­மு­தா­யத்­தில் நில­விய பெண் அடக்­கு­மு­றை­தான் கார­ணம். 14, 15 வய­து­க­ளி­லேயே பெண்­கள் குறித்த பார்வை- முற்­போக்­குச் சிந்­தனை என்­னுள் கருக்­கொண்­டது. வளர்ந்த பின்­னர்­தான் அத­னைப் பெண்­ணி­யம் என்று விளங்­கிக்­கொண்­டேன். பெண் கல்வி தேவையா? பெண் வீட்டை விட்டு வெளியே போய் வேலை பார்க்­க­லாமா? பெண்­ணைக் கொடு­மைக்­குள் ஆழ்த்­தும் சீத­னப் பேய், வறுமை, கண­வன் குடி­யால் சித­றும் குடும்­பங்­கள், ஒழுக்­க­யீ­னங்­கள் என்­ப­னவே சமு­தா­யத்­தைக் கௌவி கப­ளீ­க­ர­மி­டும் பிரதான பிரச்­சி­னை­க­ளாக என் மன­தில் உரு­வெ­டுத்­தன. அத­னால் இத்­த­கைய பின்­ன­ணி­யைக் கொண்டே எழுத்­துக்­க­ளும் கற்­ப­னை­க­ளும் முகிழ்த்­தன.

இவற்­றில் ஊறிய அனு­ப­வத்­தில் வளர வள­ரக் குடும்­பத்­தி­லும் சமூ­கத் தளத்­தி­லும் ஆண்-­பெண் என்ற வேற்­று­மை­கள் உண­ரப்­ப­டு­வதும் பெண்­கள் கட­வுள் நிலைக்கு உயர்த்­தப்­பட்­டா­லும் மானிட நிலை­யில் தாழ்­வாக, இரண்­டாம் பட்­ச­மாக மதிக்கப்படுவதும் மன­தில் சுரீர் எனத் தைத்­தது. இது­தான் என்­னைப் பெண்­ணி­ய­வா­தி­யாக உரு­வாக்­கி­யது.

பெண் விடு­தலை குறித்த தெளிவு
பெண்­க­ளி­டமே இருப்­ப­தில்லை

கே:- மேலை நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், தமிழ்ப் பெண்­க­ளின் விடு­தலை வீச்சு எவ்­வா­றுள்­ளது?

ப: -­மேலை நாடு­க­ளில் பெண்­ணுக்­கான சுதந்­தி­ரத்தை ஆண்­கள் விளங்­கிக்­கொண்­டுள்­ள­னர். ஆனால், எமது சமு­தா­யத்­தில் அவ்­வாறு இல்லை. சங்­க­கா­லத்­தில் இருந்தே எதி­லும் ஆண்­கள்­தான் முதல்­நிலை வகித்­த­னர். எமது சம­ய­மும் அதற்­குத் துணை­போ­கி­றது. ஆல­யங்­க­ளில் பூசை செய்­வது, திரு­ம­ணம் முத­லான நிகழ்­வைத் தலைமை தாங்கி நடத்­து­வது போன்­ற­ன­வற்­றைப் பரம்­பரை பரம்­ப­ரை­யாக ஆண்­களே மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில், எமது பெண்­கள் இல­கு­வா­கச் சுதந்­தி­ரத்தை எட்­டி­விட முடி­யாது. அதே­நே­ரம், மேலை­நாட்­டுப் பெண்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில்- 15 வீத­மான பெண்­கள்­தான் பெண் விடு­தலை பற்­றிய புரி­த­லு­டன் வாழ்­கின்­ற­னர். ஏனைய பெண்­கள் தமக்­கான விடு­த­லையை,- சுதந்­தி­ரத்தை விளங்­கிக்­கொள்­கி­றார்­கள் இல்லை. படிப்­பது, வேலைக்­குப் போவது, நாளாந்த வாழ்க்­கை­யில் பிரச்­சினை இல்­லா­மல் இருப்­ப­து­தான் பெண் விடு­தலை என்று இவர்­கள் நினைக்­கின்­ற­னர்.
எமது நாட்­டில் கலா­சா­ரம், பண்­பாடு, வாழ்­வி­யல் முறைமை என்­பன பெண் சுதந்­தி­ரத்­துக்­குப் பெரும் முட்­டுக்­கட்­டை­க­ளாக உள்­ளன.

ஆணு­டன் ஒப்­பி­டு­கை­யில் பெண் செய்­யும் எந்த ஒரு வேலைக்­கும் வரை­யறை உண்டு. அனைத்­துத் தொழில்­க­ளி­லும் ஆண்­க­ளையே தூக்­கி­வைத்­துள்­ள­னர். ஊட­கத் து­றை­யில் கூட ஆண்­களே முக்­கிய பத­வி­க­ளில் உள்­ள­னர். ஆக, ஆசி­ரி­யத் தொழில் ஒன்­றில்­தான் பெண்­கள் 60 வீதம் உள்­ள­னர். இவர்­க­ளுள்­ளும் பெண்­ணி­யச் சிந்­த­னை­யு­டன் எத்­தனை பேர் உள்­ள­னர் என்­றால், அவர்­களை விரல் விட்டு எண்­ணி­வி­ட­லாம். ஆத­லால், எமது பெண்­கள் சுதந்­தி­ரத்தை வென்­றெ­டுப்­ப­தற்கு இன்­னும் அதி­கம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது;- உழைக்க வேண்­டி­யுள்­ளது.

கே:- இன்று சகல துறை­க­ளி­லும் பெண்­கள் முன்­னுக்கு வந்து, ஆணுக்­குச் சம­மா­கத் தங்­க­ளா­லும் இயங்க முடி­யும்- இருக்க முடி­யும் என்று சாதித்து வரு­கின்­ற­னர். அதே­நே­ரம், அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தற்­குப் பின்­னிற்­கின்­ற­னர். இதற்கு என்ன கார­ணம் என்று நினைக்­கி­றீர்­கள்?

ப: பெண்­கள் விடு­தலை உணர்வு பெற்­றுப் பல ஆண்­டு­கள் சென்ற பின்­பும், தங்­க­ளது குடும்­பப் பின்­பு­லங்­க­ளால் வெளிச்­சத்­துக்கு வந்த ஒரு­சில பெண் அர­சி­யல்­வா­தி­கள் தவிர அர­சி­யல் களத்­தில் பெண்­ணின் பங்­கேற்­புக்கு உரிய இடம் அளிக்­கப்­ப­ட­வில்லை என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதற்கு அவ­ளு­டைய வளர்ப்பு முறை, பொரு­ளா­தார வச­திக் குறைவு என்­ப­ன­வும் கார­ணம். ஒழுக்­கம் சார்ந்து அவ­ளைக் கேள்வி கேட்­பது இன்­னொரு கார­ணம். ஆட்­சி­யி­லுள்ள ஆண்­கள் ஊழல் செய்­கை­யில் தனி மனி­தர்­க­ளாக மட்­டுமே அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் சமூ­கம், பெண் அர­சி­யல்­வா­தி­கள் ஊழல் செய்­யும்­போது மட்­டும் பாலின அடை­யா­ளத்­தோடு கூடிய விமர்­ச­னங்­க­ளைக் கூசா­மல் முன்­வைக்­கத் தவ­று­வ­தில்லை. அத்­து­டன், அர­சி­யல் என்­பது வீட்­டுக்­குள் இருந்து கதைக்­கும் கதை­யல்ல. வெளி­யிற் சென்று பல­தை­யும் பேச­வேண்­டும்.

கூட்­டங்­க­ளில் பங்­கேற்க வேண்­டும். எண்­ணற்ற பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டும். வெளி­யி­டங்­க­ளுக்­குச் சென்­று­வர வேண்­டும். அதற்­குப் போக்­கு­வ­ரத்து வசதி வேண்­டும். இதி­லும், இரவு நேரங்­க­ளில் பெண் தனியே சார­தி­யு­டன் சென்று வரும் நிலை ஏற்­ப­டு­கை­யில், அவ­ளு­டைய ஒழுக்­கம் சார்ந்து சமூ­கம் கேள்வி கேட்­கும். இத்­த­கைய கார­ணங்­க­ளால், பெண்­கள் அர­சி­ய­லில் பங்­கேற்­ப­தற்­குப் பின்­ன­டிக்­கின்­ற­னர்.

பாலி­யல் கொடு­மை­க­ளுக்கு
எதி­ராகப் போராட வேண்­டும்

கே: பெண்­கள் மீது மேற்­கொள்­ளப்­ப­டும் பாலி­யல் தாக்­கு­தல்­கள் குறித்து என்ன கூறு­கி­றீர்­கள்?

ப:- பெண் முன்­னேற்­றத்­தைக் கண்டு பொறுக்க முடி­யாத ஆண்­கள், அவ­ளுக்கு எதில் அடித்­தால் வலிக்­கும் என்­ப­தனை இனங்­கண்டு அவ­ளைப் பாலி­யல் ரீதி­யில் தாக்­கு­கின்­ற­னர். அதற்­குப் பெண்­தான் கார­ணம்- அவள் அணி­யும் உடை­தான் கார­ணம் என்று வேறு அவள் மீது பழி­யைப் போடு­கின்­ற­னர். தம்­மைத் திருத்­திக்­கொள்­ளா­மல், தவ­றான கருத்தை முன்­வைக்­கின்­ற­னர்.

இது ஆணு­டைய ஒரு பல­வீ­னம் என்­று­தான் சொல்­ல­வேண்­டும். இதற்கு எதி­ரா­கப் பெண் அமைப்­புக்­கள் குரல் கொடுக்க வேண்­டும். ஆனால், பெண் தொகைக்­கேற்ப பெண் அமைப்­புக்­க­ளின் எண்­ணிக்கை குறைவு. இதற்கு எதி­ராக அதி­கம் போராட வேண்­டி­யுள்­ளது.

கே:- பெண்­களை மேம்­ப­டுத்­து­வ­தில் பத்­தி­ரி­கை­க­ளின் பங்­க­ளிப்பு எவ்­வா­றுள்­ளது?

ப: -­பத்­தி­ரி­கை­க­ளில் பெண்­ணுக்கு ஒதுக்­கப்­ப­டும் வெளி­யில், அழ­குக் குறிப்­புக்­க­ளை­யும் சமை­யல் குறிப்­புக்­க­ளை­யும்­தான் போடு­கின்­ற­னர். இவை இரண்­டுமே ஒரு பெண்­ணுக்­குச் சொல்­லிக் கொடுக்­கா­ம­லேயே தெரி­யக்­கூ­டிய விட­யங்­கள். இப்­ப­டி­யான விட­யங்­க­ளைப் போட்­டுப் பக்­கம் நிரப்­பும் வேலை­யைச் செய்­கின்­றன பத்­தி­ரி­கை­கள். இதை­வி­டுத்து, பெண்­ணிய அடை­யா­ளங்­க­ளைப் பெண்­கள் தேடும் ஆர்­வத்­தைத் தட்­டி­யெ­ழுப்­பும் கைங்­க­ரி­யத்­தைப் பத்­தி­ரி­கை­கள் செய்ய வேண்­டும்.

அவர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை வெளிக்­கொண்டு வர­வேண்­டும். பெண் விடு­தலை, ஆண்- பெண் சமத்­து­வம் பற்­றிய விழிப்­பு­ணர்­வினை அவர்­க­ளுக்கு அளிக்க வேண்­டும். சாத­னைப் பெண்­களை அறி­மு­கப்­ப­டுத்தி, ஏனைய பெண்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் பெண் விடு­தலை கூர்­மை­ய­டை­யும்.

கே:- இந்த நேர்­கா­ண­லூ­டா­கப் பெண்­க­ளுக்­குத் தாங்­கள் கூற­நி­னைக்­கும் செய்தி என்ன?

ப:- பெண்­கள் இன்று சகல துறை­க­ளி­லும் சாதித்து வந்­தா­லும், அவர்­கள் இன்­னும் தங்­கள் அறிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும். அவர்­கள் நினைத்­தால், எதை­யும் சாதிக்­க­லாம். வன்­மு­றை­யற்று அமை­தி­யான- ஒற்­று­மை­மிக்க சமு­தா­யத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பப் பாடு­பட வேண்­டும். கிராம மட்­டங்­க­ளில் குழுக்­கள் குழுக்­க­ளாக இணைந்து பெண் விடு­தலை பற்­றிய விழிப்­பு­ணர்வை மேற்­கொள்ள வேண்டும்.