மகளிர் விவகாரத்துக்கு திணைக்களங்களை ஆரம்பிக்கத் திட்டம்

அந்த அமைச்சின் செயலர் தகவல்

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சின் 2 திணைக்களங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படும் – என்று அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது அமைச்சின் கீழ் கூட்டுறவு, சமூக சேவைகள் மற்றும் தொழிற்துறை ஆகிய 3 திணைக்களங்கள் உள்ளன. ஆனால் எமது அமைச்சு மகளிர் விவகார அமைச்சு என்று சொல்லப்படுகின்றது.

மகளிர் விவகாரம் மற்றும் மறுவாழ்வு சார்ந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு எம்மிடம் தனியான திணைக்களம் மற்றும் ஆளணி இல்லை. ஏனைய 3 திணைக்களங்களையும் உள்வாங்கியே வேலைகளைச் செய்கிறோம்.
ஆகவே எமக்கு மறுவாழ்வு, மகளிர் விவகாரம் ஆகிய 2 திணைக்களங்களை ஆரம்பிக்கவேண்டும்.

திணைக்களங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெறுவதற்காக பிரதி தலைமைச் செயலாளருக்கு கடந்தவாரம் அறிக்கையை சமர்பித்துள்ளோம்.

அந்த அனுமதி கிடைத்த பின்னர் கொழும்பு ஊடான செயற்பாடுகள் நடைபெறும். அனுமதி வழங்கப்பட்டால் இந்த 2 திணைக்களங்களை ஆரம்பிக்கலாம்.இதற்காக 20 உத்தியோகத்தர்கள் வரை நியமிக்கவேண்டும்.

அதன் பின்னரே மகளிர் விவகார அமைச்சின் பெயருக்கு அமைவாக வினைத்திறனான செயற்பாடுகள் நடைபெறும் என்றார்.

You might also like