நாய்களின் தொல்லையிலிருந்து விடுபட உதவக் கூடாதா?

எமது பிரதேசத்தில் வீதிகள், ஒழுங்கைகள் தோறும் தெருநாய்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கால்நடையாகப் போகிறவர்கள், துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளில் போகிறவர்கள் எனப் பலரையும் தெருநாய்கள் துரத்திக் கடிக்கின்றன. சைக்கிள், மோட்டார் சைக்கிளில் போகிறவர்கள் விபத்துக்குள்ளாவதற்கும் பல சந்தர்ப்பங்களில் தெருநாய்களே காரணமாக அமைகின்றன.

வீட்டுக்கொரு நாய் வளர்க்கும் நிலை மாறி சிலர் தமது வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றார்கள். தாங்கள் வளர்க்கும் நாய்களை மலசலம் கழிப்பதற்காக ஒழுங்கைகளிலும் தெருக்களிலும் விரட்டி விடுகின்றார்கள். இதனால் வீதிகள், ஒழுங்கைகள் எல்லாம் நாய்களின் கழிவுகளே காணப்படுகின்றன. பல நோய்கள் ஏற்படுவதற்கும் சுகாதாரச் சீர்கேட்டுக்கும் இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

இவ்விதம் வளர்ப்பு நாய்களையும் அவற்றின் இயற்கை கடன் கழிப்புக்காக அவற்றின் உரிமையாளர்கள் தமது காணிகளிலிருந்து வெளியில் விரட்டி விடுவதால் பொதுமக்கள் பலர் பயணம் செய்யும் இடங்கள் தூய்மையற்றவையாக மாறிவிடுகின்றன. சமூகப் பொறுப்புணர்வில்லாத சுயநலம் மிக்க சிலரின் செயற்பாடுகளால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யில் நாய்க் கடிக்கு உள்ளாகி தடுப்பூசி ஏற்றிக் கொள்வோரின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கடித்தால் நாயின் தன்மை தெரியாத காரணத்தினால் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.

நாய்களை வளர்ப்பவர்கள் தமது வளர்ப்பு நாய்களைக் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் என்று அரசால் சட்டம் போட முடியாதா? பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வீதிகள், ஒழுங்கைகள் எல்லாம் நாய்களின் கழிவுகள் நிரம்பி வழிவதைத் தடுக்க முடியாதா? இவற்றைத் தடுப்பதற்கு அரச அதிகாரங்களில் இருப்பவர்கள் முயற்சிகள் செய்யாவிட்டால் சூழல் மாசடையும்; பொதுமக்கள் பல நோய்களால் பீடிக்கப்படுவார்கள்.

தயவு செய்து பொறுப்புள்ளவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்பட்டு இந்தச் சிரமத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட உதவ வேண்டும்.

சிவ.மகாலிங்கம்,
கோண்டாவில்.

You might also like