தமி­ழர்­க­ளால் மறக்க முடி­யாத அந்­தக் காலம்

விடு­த­லைப் புலி­க­ளின் காலத்­துக்­குப் பின்­னர் தமி­ழர்­க­ளின் அனைத் துச் செயற்­பா­டு­க­ளும் அடி­யோடு மாறி­விட்­டன. சமூ­கப் பழக்­க­வ­ழக்­கங்­கள் மட்­டு­மல்­லாது அர­சி­ய­லி­லும் தனி­ந­பர்­கள் மத்­தி­யி­லும் மாற்­றத்­தைக் காண முடி­கின்­றது. விடு­த­லைப் புலி­கள் தமக்­கென ஒரு தனி­யான அர­சி­யல் பிரி­வைக் கொண்­டி­ருந்­த­னர்.

இதற்­குப் பொறுப்­பா­க­வும் ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தார். ஆனால் தேர்­தல்­க­ளில் இவர்­கள் போட்­டி­யி­டு­வ­தில்லை. இதற்­கா­கவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. தமி­ழர்­க­ளின் அர­சி­யல் நீரோட்­டத்­தில் கலந்­தி­ருந்த முக்­கி­ய­மான அர­சி­யல் கட்­சி­கள் யாவும் இதில் இணைந்து கொண்­டன. விடு­த­லைப் புலி­க­ளின் வழி­காட்­ட­லின்­கீழ் செயற்­ப­ட­வும் செய்­தன.

ஆனால் இன்று கட்­டுப்­ப­டுத்­து­வார் எவ­ரு­மில்­லாத நிலை­யில் ஒவ்­வொ­ரு­வ­ரும் தத்­த­மது எண்­ணம் போன்று செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தை எதிர்த்த விடு­த­லைப் புலி­கள்

1987ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தை விடு­த­லைப் புலி­கள் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. அதை முழு­மை­யாக எதிர்க்­கவே செய்­த­னர். அந்த ஒப்­பந்­தத்­தின் மூல­மாக வடக்­கு – கிழக்கு மாகா­ணங்­கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லும் இடம்­பெற்­றது.

ஆனால் இதற்­கும் விடு­த­லைப் புலி­கள் உடன்­ப­ட­வில்லை. தனி ஈழத்தை மட்­டுமே தமது இலட்­சி­ய­மா­கக் கொண்டு போரா­டிய அவர்­கள் மாகாண சபை­யின் கீழான ஆட்­சியை வெறுத்து ஒதுக்­கி­னர். அவர்­க­ளுக்­குப் பிறகு வடக்­குக் கிழக்­கில் எத்­த­னையோ மாற்­றங்­கள் ஏற்­பட்­டு­விட்­டன.

வடக்­கும் கிழக்­கும் முன்­னர் இருந்­த­தைப் போன்று வெவ்­வேறு மாகா­ணங்­க­ளாக ஆக்­கப்­பட்­டன. வடக்­குக்­கும் கிழக்­குக்­கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­க­ளும் இடம்­பெற்­றன.

ஆனால் கிழக்கு மாகாண சபை­யில் தமி­ழர்­கள் ஒரு பங்­கா­ளி­க­ளா­கவே இருக்க முடிந்­துள்­ளது. முத­ல­மைச்­சர் பதவி அவர்­களை விட்­டுத் தூர வில­கிச் சென்­று­விட்­டது. வடக்கு மாகா­ணத்­தில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற முடிந்த போதி­லும் முக்­கி­ய­மான அதி­கா­ரங்­களை அது கொண்­டி­ருக்­க­வில்லை.

தமி­ழர்­கள் அர­சி­யல் ரீதி­யா­கப் பிள­வு­பட்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர். ஆளுக்­கொரு பக்­க­மா­கப் பிரிந்து நின்று பத­வி­க­ளைத் தேடி அலை­வதே இவர்­க­ளின் வேலை­யா­கிப் போய்­விட்­டது.

பத­வி­வெறி பிடித்­த­லை­யும் எம்­ம­வர்­கள்

பதவி வெறி பிடித்­த­வர்­கள் எதை­யுமே சிந்­திக்க மாட்­டார்­கள். இங்கு இது­தான் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­கள் இடம்­பெ­று­மென அறி­வித்­தல் வெளி­யா­ன­தும் கூட்­டணி அமைப்­ப­தி­லும், புதிய கட்­சி­களை அமைப்­ப­தி­லும் எம்­ம­வர்­கள் முழு­மூச்­சு­டன் செயற்­பட ஆரம்­பித்­து ­விட்­ட­னர். கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கிய ஈ.பி.ஆர்.எல்.எப், கஜேந்­தி­ர­கு­மா­ரது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் இணைந்­து­விட்­டது.

இந்­தக் கூட்­ட­ணி­யில் வேறு சில உதி­ரி­க­ளும் இணைந்து கொள்­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. இதே­வேளை அர­சி­யல் கலப்­புக்கு இடமே இல்­லை­யெ­னக் கூறிக் கொண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ் மக்­கள் பேரவை இன்று தடம்­பு­ரண்ட நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

பேர­வை­யில் அங்­கம் வகிக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள், அமைப்­புக்­கள், தனி­ந­பர்­கள் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தைப் பேரவை தடுக்­கா­தென வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் புதி­ய­தொரு வியாக்­கி­யா­ னத்தை அளிக்­கும் அள­வுக்­குப் பேர­வை­யின் உண்­மை­யான முகம் வெளிப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­லில் ஈடு­ப­டக் கூடா­தென எவ­ருக்­கும் எவ­ரா­லும் கட்­டளை பிறப்­பிக்க முடி­யாது. ஆனால் பேரவை அமைக்­கப்­பட்­ட­போதே விக்­னேஸ்­வ­ரன் அதன் அர­சி­யல் நட­வ­டிக்கை தொடர்­பா­கக் கூறி­யி­ருந்­தால் பிரச்­சினை எழுந்­தி­ராது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­க
கள­மி­றங்­கும் தரப்­புக்­கள்

தற்­போது கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கப் பேரவை செயற்­ப­டப் போகின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அதில் அங்­கம் வகிப்­ப­வர்­கள் கள­மி­றங்­கப் போகின்­ற­னர். இதை­விட தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் முரண்­பட்ட சிலர் அதி­லி­ருந்து பிரிந்து புதிய கட்­சி­யொன்றை அமைக்­கப் போவ­தா­க­வும் செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளன.

இவர்­கள் தேறு­வார்­களா? என்­ப­தைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும். மக்­க­ளின் ஆத­ரவை முற்­றா­கவே இழந்து நிற்­கும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி தனி­வ­ழி­யில் செல்­லுமா? அல்­லது பேர­வை­யின் வழி­யில் செல்­லுமா? என்­ப­தை­யும் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

விடு­த­லைப் புலி­க­ளின் காலத்­தில் மக்­க­ளுக்­குப் பூர­ண­மான பாது­காப்பு வழங்­கப்­பட்­டது. இரவு வேளை­யி­லும் வீடு­க­ளின் கத­வு­களை மூடா­மல் வைத்­தி­ருக்க முடிந்­தது. பெண்­கள் எவ்­வித அச்­ச­மு­மின்­றி இரவிலும் கூட தனித்து வெளி­யில் சென்­று­வர முடிந்­தது.. திருட்டு, கொள்ளை என்ற பேச்­சுக்கே அன்று இட­மி­ருக்­க­வில்லை.

அடா­வ­டித்­த­னத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் உட­னுக்­கு­டன் தண்­டிக்­கப்­பட்­ட­னர். போரைப் பற்­றிய பீதி­யும் பொரு­ளா­தா­ரக் கஷ்­டங்­க­ளும் இருந்த போதி­லும் மக்­க­ளால் அமை­தி­யாக வாழ முடிந்­தது. ஆனால் இன்றோ கொலை, கொள்ளை, திருட்டு, வாள்­வெட்டு, பெண்­கள் மீதான வன்­கொ­டு­மை­கள் ஆகிய எல்­லாமே மலிந்து போய்­விட்­டன. மக்­கள் செய்­வ­த­றி­யாத நிலை­யில் விழி பிதுங்­கிப் போய்க் கிடக்­கின்­ற­னர்.

விடு­த­லைப் புலி­க­ளின் நினைவு அடிக்­கடி இவர்­க­ளது மனங்­க­ளில் எழுந்து நிற்­கின்­றது. அவர்­க­ளின் மீள் வரு­கையை நியா­யப்­ப­டுத்­து­கின்ற மன நிலை­யும் கூடவே எழு­கின்­றது. ஆனால் அந்­தக் காலம் திரும்­பப் போவ­தில்லை என்­ப­து­தான் யதார்த்­தம்.

You might also like