மனமிருந்தால் இடமுண்டு!

வீதிகளில் குப்பை கொட்டுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்ற யாழ்.மாநகர சபையின் புதிய ஆணையாளரது அறிவித்தல் தொடர்பாக எனது கருத்தை வெளியிட விரும்புகின்றேன்.

மனிதவலுவைப் பயன்படுத்துவதைக் குறைத்து நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளத் தக்க காலகட்டம் இதுவாகும். அல்லாமலும் மனித வலு பயன்படுத்தலில் காய்தல், உவர்தல் உள்ளன. நிரூபிப்பதிலும் சங்கடங்கள் ஏற்படும். ஆயினும் மறை காணி (சிசிரிவி) மூலம் பதிவு கண்காணிப்பு மேற்கொள்ளும் போது குற்றங்களை நிரூபிப்பதிலும் சிக்கல்கள் பெருமளவு குறைவாக இருக்கும்.

அதுமட்டுமன்றி மனித வலுவைப் பயன்படுத்துவதில் காலம் காலமாக செலவழிக்கப்படும் பணமும் மீதமாகும். இவை ஒரு புறமிருக்க, இவ்விடத்தில் குப்பை கூளம்போட வேண்டாம். இவ்விடத்தில் மலசலம் கழிக்க வேண்டாம் போன்ற அறிவித்தல்கள் ஆங்காங்கே காணப்படுகின்ற நிலைமை இருந்தது.

‘‘இவ்விடத்தில் குப்பை போட வேண்டாம்’’ என்ற அறிவித்தலுக்கு பதிலாக ‘குப்பைகள் போடும் இடம்’ என வழிகாட்டும் அறிவித்தல்கள் இடப்பட்டு அவற்றைப் போடுவதற்கான இடங்கள் ஒதுக்கப்படுவது அவசியம்.

தவற விடாதீர்கள்:  இவர்கள் திருந்துவார்களா?

அதேபோன்று தூர இடங்களிலிருந்து மணிக்கணக்காக பயணம் மேற்கொண்டு யாழ்.நகரை வந்தடையும் பொது பேருந்து மற்றும் தனியார் பேருந்து மூலம் பயணித்து வந்திறங்குவோரில் பலரும் குறிப்பாக வயோதிபர்களும் நீரிழிவு நோயாளரும் தேடும் இடமொன்று மலசலகூடங்கள் எங்கே என்பதாகும்.

எனவே பொது இடங்களில் நல்ல வசதியான மலசலகூடங்களை அமைத்து அங்கு செல்வதற்கான வழிப்படுத்தற் காட்டிகளும் இடப்படுதல் அவசியமாகும். இதன் மூலம் அத்தகைய தரப்பினர்கள் மற்றவர்களுக்குச் சிரமமோ, சுகாதார சீர்கேடோ ஏற்படாத வகையில் தத்தமது இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்ள வழிகிட்டும். இதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக் கவேண்டும்.

நலன் விரும்பி.

You might also like