வட்டுக்கோட்டையிலிருந்து மாற்றத்தை ஆரம்பிப்போம்
க.குமார் தெரிவிப்பு
தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்த வட்டுக்கோட்டை மண் அதே உறுதியுடன் தொடர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகப் பயணிக்கவேண்டும். இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வலிகாமம் மேற்குப் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்றுமுன் தினம் சனிக்கிழமை கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்விலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியதாக அந்தக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளைக் கைவிட்டு ஒற்றையாட்சித் தீர்வுக்கு இணங்கியிருக்கின்ற ஒரு தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கின்றோம்.
இது வெறும் உள்ளூராட்சித் தேர்தலல்ல. கஷ்ரப்பட்டு அரசுடன் பேசிக் கொண்டுவந்திருக்கின்ற அரசமைப்புக்கு இது ஒரு கருத்துக் கணிப்பு என்று சுமந்திரன் பல இடங்களில் கூறியிருக் கின்றார். எங்களுக்கு கொள்கைதான் முக்கியம். எங்கள் கொள்கையோடு உடன்படும் தரப்புக்களை இணைத்துச் செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
எங்களைப் பொறுத்தவரை இந்த அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று நினைக்கின்றோம். தமிழ் அரசியலின் திருப்பு முனையாக மிக முக்கிய மான கட்டங்களில் வட்டுக்கோட்டை இருந்திருக்கிறது.
வட்டுக்கோட்டை மக்கள் ஒரு கொள்கையுடன் மிகத் தீவிரமாக இருந்த மக்கள். இந்த மண்ணில்தான் தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்தது. அந்தக் கோட்பாடுகளை நாங்கள் கைவிட்டு விடக்கூடாது. எல்லோரையும் விட அந்தக் கோட்பாடுகளை முன்கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த மண்ணுக்கே இருக்கிறது.
இந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறி முகக் கூட்டத்தை இந்த வட்டுக்கோட்டை மண்ணிலிருந்து தொடங்கியிருக்கின்றோம். இந்த மண் பிழையான தரப்புக்களில் கைகளில் சென்றுவிடக் கூடாது என்பதை கூறிக்கொள்கின் றோம். இந்தத் தேர்தல் பலருடைய கணக்குகளை மீறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம் -– என்றார்.