மைக்ரோ மாடுகள் உருவாக்கம்!

மைக்ரோ பன்றிகளை உருவாக்கியபோது உலகம் வியப்பில் ஆழ்ந்தது. தற்போது மைக்ரோ மாடுகள் மனிதர்களின் செல்லப் பிராணிகளாகிவிட்டன.

உலக அளவில் மைக்ரோ மாடுகளை உருவாக்குபவர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். அவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது டஸ்டின் பில்லார்ட் முக்கியமானவர்.

1995ஆம் ஆண்டு மைக்ரோ மாடுகளை உருவாக்க ஆரம்பித்தபோதே புகழ்பெற ஆரம்பித்துவிட்டார். தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறிய மாடுகளை உருவாக்கியிருக்கிறார்.

‘நான் சின்ன வயதிலிருந்தே தினமும் எனது தாத்தாவின் பண்ணையில் சிறிது நேரத்தைச் செலவிடுவேன். அதனால் மாடுகளைப் பற்றிய புரிதல் இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கால்நடை கண்காட்சியில் கலந்துகொண்டேன். அங்கேதான் முதல்முறை மைக்ரோ மாடுகளைப் பார்த்தேன். அதிலிருந்து மைக்ரோ மாடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அழுத்தமாகப் பதிந்துவிட்டது.

மூன்று ஆண்டுக்குப் பிறகு 10 ஏக்கர் நிலத்துக்கு உரிமையாளனாக மாறினேன். மிகச் சிறிய விலங்குகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். இன்று ஆக்ஸன் ரிட்ஜ் மினியேச்சர் கால்நடைப் பண்ணையாக வளர்ந்து நிற்கிறது.

நான் உருவாக்கும் பசுக்கள், எருதுகளின் உயரம் 33 அங்குலம்.  வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு வண்ணங்களில் மாடுகளை உருவாக்குகிறேன். ஒரு வருடத்துக்கு 10 முதல் 20 மைக்ரோ மாடுகளை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறேன். தென் அமெரிக்கர்கள்தான் இந்த மாடுகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிகம் விரும்பினார்கள். இப்போது ஐரோப்பா, மெக்சிகோ, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளில் உள்ளவர்களும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

சாதாரண மாடுகளைச் செல்லப் பிராணியாக வெளியே அழைத்துச் செல்ல இயலாது. எங்கள் மைக்ரோ மாடுகள் உங்களது கால் வரை மட்டுமே இருப்பதால், நாயைப்போல் எங்கும் அழைத்துச் செல்ல முடியும். மக்கள் கூட்டத்துக்குள் சென்றால்கூட, இந்த மாடுகள் முரண்டு பிடிப்பதோ, பயம்கொள்வதோ கிடையாது.

அதனால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மைக்ரோ மாடுகள் வளர்ப்பதை விரும்புகிறார்கள்’ என்கிறார் டஸ்டின் பில்லார்ட்.

You might also like