இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் திருட்டு

இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைதான ஏழு மாணவர்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
மன்னார், மடு கல்வி வலயத்துக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருள்கள் கடந்த 10ஆம் திகதி இரவு களவு போயின.

களஞ்சிய சாலையை உடைத்த மர்ம நபர்கள் பொருள்களை திருடிச் சென்றனர் எனப் பாடசாலை நிர்வாகத்தால் மடுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டதின் பின் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 22ஆம் திகதி இரவு ஏழு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் களவுபோன பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவானிடம் முற்படுத்தப்பட்ட ஏழு சிறுவர்களையும் நீதிவான் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டார் என மடுப் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like