அரசினால்  கைவிடப்பட்ட  நிலையில்  இலங்கை   தமிழர்கள்

மலர்ந்துள்ள புதிய ஆண்டிலாவது தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீ்ர்வு கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிறையவே காணப்படுகின்றது. நீண்ட ஆயுதப்போராட்டமொன்று இடம்பெற்று முடிவடைந்த நிலையிலும், தமிழர்களின் அவல வாழ்வு தொடரவே செய்கின்றது. அரசு இவர்கள் மீது பாராமுகமாக இருக்கின்ற நிலையில் தமிழ்த் தலைமைகள் செய்வ தறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருப்பதையே காண முடிகின்றது.

இதே வேளை தெற்கில் இனவாதிகளின் இனவாதச் செயற்பாடுகள் முழு அளவில் இடம்பெற்று வருகின்றன.புலிகளை அழித்து நாட்டைக் காப்பாற்றியபோதிலும் தமிழ் ஈழம் உருவாகுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் அரச தலைவரான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆட்சிக்கனவில் மூழ்கியுள்ள அவர் தனது அந்தக் கனவை நனவாக்க எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பவர் போன்று காணப்படுகின்றார்.

கடந்த அரச தலைவர் தேர்தலில் தமிழர்களின் புறக்கணிப்பால் தான் தம்மால் வெற்றி பெற முடியவில்லை என்பதை அவரால் எளிதில் மறக்க முடியவில்லை என்பது மிகத் தௌிவாகத் தெரிகின்றது. அவரால் உடனடியாக அரச தலைவர் பதவியில் அமர்ந்து கொள்ள முடியாது. ஆனால் தலைமை அமைச்சர் பதவியில் அமர்ந்து கொள்ள முடியும். இதற்குப் பெரும்பான்மையின மக்களின் ஆதரவு தமக்குக் கிடைத்தாலே போதுமென அவர் நம்புகின்றார். இதனால் சிறு பான்மையினர் தொடர்பான கருத்துக்களை அவர் வாயில் வந்தவாறு தெரிவித்து வருகின்றார். பெரும்பான்மையின மக்களும் அதை நம்புவதாகத் தெரிகின்றது.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர் மகிந்தவே

முப்படைகளின் பிரதம தளகர்த்தர் என்ற வகையில் இறுதிப் போருக்கு அவரே பொறுப்பாக இருந்துள்ளார். போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்ட மைக்கும் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அது மட்டுமல்லாது போரின்போது இடம் பெற்ற படையினரது போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அவரே பொறுப்பாக இருந்துள்ளார்.

ஆனால் இவை தொடர்பாக அவர் எதுவுமே தெரியாதவர் போன்று தம்மைப் புனிதராகக் காட்டும் விதத்தில் நடந்து கொள்கின்றார். போர்க் குற்றங்கள் எவையுமே இடம் பெறவில்லை என்பதே இவரது வாதமாக உள்ளது. அரச தலைவரும் இந்த விடயத்தில் மகிந்தவுடன் ஒத்துப்போவ தைக் காண முடிகின்றது. கூட்டு எதிரணியின் தலை வரும், அரச தலைவரும் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் ஒரே பாதையில் பயணிப்பதால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகமே காணப்படுகின்றது.

உறுதியான முடிவெடுக்கத் தயக்கம் காட்டும் இன்றைய அரச தலைவர்

அரச தலைவரைப் பொறுத்தவரையில் எந்த விடயமாக இருந்தாலும்  தீர்க்கமான முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றார். இதற்கு மகிந்த தரப்பினரின் அழுத்த மும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இந்த அழுத் தங்களிலிருந்து விடுபடுவதற்கு அவரால் முடியவில்லை.

தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரச தலைவரிடம் இருப்பதால் பய னொன்றும் ஏற்படப் போவதில்லை. அதைச் செயல் வடிவில் காட்டும்போதுதான் தமிழர்கள் நன்மைகளைப் பெற முடியும். நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஊழலும் மோசடிகளுமே பிரதான காரணமாகும். கடந்த ஆட்சிக்காலத்தில் இவை மிகப் பெரிய அளவில் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதனால் அரசுக்குப் பெரும் நிதி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இவை அரசுக்குத் திரும்பக் கிடைக்குமானால் பொரு ளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியுமெனக் கூறப்படுகின்றது. ஆனால் இவற்றுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அரசின் மிகப்பெரிய பல வீனமாக இது கருதப்படுகின்றது. மத்திய வங்கியில் இடம் பெற்ற பிணை முறி மோசடி தொடர்பாக அரச தலைவரது உறுதியான நடவடிக்கையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான வாய்ப்பு அருகி வருகின்றதா?

தமிழ் மக்களது இன்றைய வாழ்வியலுடன் தொடர்பு டைய, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற சிறுசிறு பிரச்சினை களுக்கே தீர்வைக் காண முடியாதவர்கள் நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வருகின்ற இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண முடியும்? என்பதே இன்று எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும். பதிலை அரசுதான் வழுங்க வேண்டும். பலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இழுபட்டுச் செல்வதற்கு மேற்குலக வல்லரசு நாடுகளே காரணமாக உள்ளன.

இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி அதற்குப் பொருளாதார பலத்தையும் ஆயுதப்பலத்தையும் இந்த நாடுகளே வகைதொகையின்றி வழங்கி உதவி வருகின்றன. ஆனால் இஸ்ரேலுடன் பூகோள ரீதியில் நெருங்கி அமைந்திருக்கும் பலஸ் தீனம் தொடர்பாக இவை சிறிதும் அக்கறை கொள்வதில்லை. பலஸ் தீனியர்கள் இஸ்ரேலியர்களால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையிலும் தமிழர்கள் பலஸ் தீனர் போன்றே நீண்ட காலமாகப் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலஸ் தீனங்களைச் சுற்றி முஸ்லிம் நாடுகள் பல இருந்தும் அவர்களால் இஸ்ரேலுக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. அதேபோன்று இலங்கைத் தமி ழர்களைப்பொறுத்தவரையில் இன்று அவர்களுக்கு உதவுவதற்கு எவரும் இல்லாத நிலையே காணப்படு கின்றது. இலங்கை அரசு எதைச் செய்தாலும் அதைத் தட்டிக்கேட்பதற்கும் எவருமில்லை.

இத்தகையதொரு பரிதாபகரமான நிலையில்தான் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். அரசு இவர்களுக்கு விரும்பி எதையாவது செய் தால்தான் உண்டு, இல்லையென்றால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவே கிட்டப்போவ தில்லை என்ற நிலையே தற்போது காணப்படுகின்றது.

You might also like