மிதுன ராசிக்காரர்களுக்கான புத்தாண்டுப் பலன்கள்!

மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களே! உங்களுடைய ராசிக்கு 12 ஆ-ம் வீடான விரய ஸ்தானத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 5 ஆ-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருமானம் உயரும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு.

ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4- ஆம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் இருப்பதாலும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதாலும் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வேண்டாம். சின்னச் சின்ன அவமதிப்புகள் நிகழக்கூடும். தர்மசங்கடமான சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டி வரும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். இந்த 2018- ஆம் ஆண்டு முழுக்கவே சனி உங்களுடைய ராசிக்கு 7- இல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் குடும்ப விடயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். மறதியால் விலை உயர்ந்த நகைகளையெல்லாம் இழக்க நேரிடும்.

பணப் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாரின் உடல் நலம் பாதிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றிச் செலுத்தப் பாருங்கள். சின்னச் சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். 2- இல் ராகுவும் 8- இல் கேதுவும் இந்தாண்டு முழுக்க நீடிப்பதால் பேசும்போது கவனமாக இருங்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம். பார்வைக் கோளாறு வரக்கூடும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள், ப்ரேக் ஒயர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செல்வது நல்லது. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் இளைய சகோதரர் வகையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இரவில் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு பிறக்கும்போது செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சகோதரர்களுடன் பிணக்குகள் வரும்.

வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து முதலீடு செய்யுங்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பும் வரும்.

இந்தப் புத்தாண்டு உங்களைச் சோர்வடைய வைத்தாலும், சவால்களில் வெற்றிபெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்குவதாக அமையும்.

You might also like