கன்னி ராசிக்காரர்களுக்கான புத்தாண்டுப் பலன்கள்!!

எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவர்களே! உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2018- ஆம் ஆண்டு பிறப்பதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 2 ஆ-ம் வீட்டில் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவபூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவர்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4- ஆம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 3- ஆம் வீட்டில் சென்று மறைவதால் கருத்து மோதல் வரும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடன் பழகிக் கொண்டிருந்தவர்கள் சிலர் உங்களுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது.

இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4- ஆம் வீட்டிலேயே சனி அமர்வதால் உங்களின் அடிப்படை நடத்தைகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி, விற்பனை வரி, குடிநீர் வரி, வீட்டு வரிகளையெல்லாம் உடனுக்குடன் செலுத்தி முறையாக ரசீது வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் அடிக்கடி வழக்கறிஞரை மாற்ற வேண்டாம். பண விடயத்தில் உத்திரவாதம் கொடுக்க வேண்டாம். ஆனால், இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகு பகவான் லாப வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் திடீர் பணவரவு எல்லாம் உண்டாகும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

வெளிவட்டாரத்தில் உங்களை நம்பி பெரிய பதவிகள், பொறுப்புகள் தருவார்கள். அரசு காரியங்கள் சுமுகமாக முடியும். மலையாளம், கன்னடம் பேசுபவர்களால் நன்மை உண்டாகும். ஆனால் கேது 5-ல் தொடர்வதால் மன இறுக்கம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் படிகளில் ஏறும்போது கவனம் தேவை. திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.

10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் கர்ப்பிணிகள் அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்க வேண்டாம். 8.2.2018 முதல் 2.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் சுக்ரன் 6- இல் மறைவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அதிகமாகும்.

வியாபாரத்தில் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் சின்ன சின்ன நஷ்டங்கள் இருக்கும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார் சம்பளப் பாக்கி கைக்கு வரும். சக ஊழியர்களால் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம் பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றியடையச் செய்யும்.

You might also like