கிளாலியில் தொடர்ந்து மண்ணகழ்வு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!!
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய ஒருவர் உழவு இயந்திரத்துடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உழவியந்திரத்தின் சாரதிக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பளை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிளாலியில் தொடர்ச்சி யாக மணல் திருட்டு இடம்பெறுவதாக மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துவருகின்றனர்.
அங்கு மணல் ஏற்றுபவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அதிரடிப்படையினர் திடீர்ச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மணல் அகழ்வை தடுக்கக்கோரி கட்டடத்தில் ஏறி உணவு ஒறுப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பின்னர் அச்சுறுத்தல்களையடுத்து போராட்டத்தைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.