சிம்ம ராசிக்காரர்களுக்கான புத்தாண்டுப் பலன்கள்!!

நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாகக் கணிப்பவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10- ஆவது வீட்டில் பிறப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது உத்தியோகம் அமையும்.

மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 3 ஆ-ம் வீட்டில் மறைந்திருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4- ஆம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு ராசிக்கு 4- ஆம் வீட்டில் அமர்வதால் தாயார், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள். உங்களிடமிருக்கும் திறமைகளெல்லாம் குறைந்து விட்டதாகச் சந்தேகப்படுவீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும்போது சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

சனி 5- ஆம் வீட்டிலேயே தொடர்வதால் குழப்பங்கள் அதிகரிக்கும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். பழைய பிரச்சினைகளையெல்லாம் இப்போது ஆராய வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குக்காக செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். இந்தாண்டு முழுக்கவே உங்கள் ராசிக்கு 6- ஆம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

அரசு சம்பந்தப்பட்ட விடயங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால், ராகு 12- இல் நீடிப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கம் குறையும். பயணங்கள் அதிகமாகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரித்து சோர்வடையச் செய்யும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயும் சனியும் சேர்வதால் தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயும் கேதுவும் சேர்வதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

14.1.2018 முதல் 07.2.2018 வரை சுக்கிரன் 6- இல் மறைவதனால் திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். செவ்வாய் பகவான் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018 ஆ-ம் ஆண்டு பிறப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வியாபார ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்கள் முக்கியத்துவம் தருவார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுப் புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சம்பள உயர்வுக்காகப் போராட வேண்டி வரும்.

இந்தப் புத்தாண்டு அதிரடி வளர்ச்சியைத் தருவதுடன், கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும்.

You might also like