வடக்கு எனும் பகடைக்காய்!!

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. வழக்கம்போல் போர் வெற்றி, அது தொடர்பான உரிமை கோரல், புலிப் புராணம் என்று வடக்குப் பகுதியை தத்தமது தேர்தல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர் கொழும்பு அரசியல் பிரதிநிதிகள்.

தமது அரசியல் இருப்பும், அதன் எதிர்காலமும் புலிப் புராணத்திலும், இனவாதத் துவேஷங்களிலுமே தங்கியுள்ளன என்று அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் பார்க்க முடிகிறது. யதார்த்தமும் அதுவே.

முன்னாள் அரச தலைவர் மகிந்த, தனது வாக்கு வங்கியைத்தக்க வைப்பதற்காக தெற்கை உசுப்பிவிடும் வகையில் பரப்புரையொன்றை அண்மையில் மேற்கொண்டார்.

‘தமிழீழமா?, ஒற்றையாட்சியா? என்று முடிவு காணும் தேர்தல் இது’ என்று அவர் முழங்கி யிருந்தார். இது தொடர்பில் இந்தப் பத்தியில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, ‘புலிகளின் பிடியில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான்’ என்று உரிமை கோரியுள்ளார் மற்றொரு முன்னாள் அரச தலைவரான சந்திரிகா.

வெயாங்கொடவில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சந்திரிகா. ‘எனது அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் யாழ்ப்பாணத்தை மீட்டோம். வடக்கில் மூன்றில் இரண்டு பகுதியில் இருந்து புலிகள் விரட்டிய டிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவையே ராஜபக்ச அரசு கைப்பற்றியது. நான் செய்த தவறு என்னவென்றால், கோடி ரூபா செலவளித்து வானளவு உயரத்துக்கு கட்டவுட்டுகள் வைத்துப் போர் வெற்றியைப் பரப்புரை செய்யாமல் விட்டமையே’ என்று அவர் அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவின் இந்தக் கருத்து, மகிந்தவுக்கான பதிலடி என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த வாதங்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. மகிந்தவே கதி என்ற நிலைப்பாட்டில் உள்ள அரசியல் வாதிகள், அடுத்தடுத்து விஷப் பேச்சுக்களை வெளிப்படுத்தத்தான் போகிறார்கள்.

அதற்கு மறு பக்கத்தில் இருந்தும் பதிலடி கொடுக்கப்படத்தான் போகிறது. மொத்தத்தில் பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரையில், அதற்கு அப்பாலும் கூட இனவாதம் தெற்கில் ஓங்கி ஒலிக்கத்தான் போகிறது.

இந்த இனவாதப் பரப்புரைகள் புதிதாக அமையவுள்ள அரசமைப்புக்கு நிச்சயம் இமாலயப் பின்னடைவையே உண்டாக்கும். ‘அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டாட்சியே. இந்த அரசமைப்பு உருவாக்கல் முயற்சி சாத்தியமானால் கொழும்பை விடவும் மாகாணங்கள் அதிக அதிகாரங்களைப் பெற்றுத் திகழும்.

அது தமிழர் தாயகம் உருவாக வழிவகுக்கும்’ என்று மகிந்தவும் அவரது சகாக்களும் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய கருத்துத்தான் தென்னிலங்கை மக்களி டையே இந்தத் தேர்தல் பரப்புரையின் மூலம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு ஆழமாக வேரூன்றச் செய்யப் படப்போகிறது.
எனவே இந்தப் பரப்புரைகள் அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்குப் பெரும் பின்னடைவையே கொடுக்கும். அவ்வாறு ஏற்படுத் தப்படும் பின்னடைவு, அரசமைப்பு உருவாக்கல் முயற்சிகளை கிடப்பில் போடுவதற்கும் வழிவகுத்து விடலாம்.
புலிப் பூச்சாண்டிகளைக் கைவிட்டு புதிதாக எதையாவது சாதிப்பதற்கு தெற்கில் இணக்கம் ஏற்பட்டால் மட்டுமே, அது நாட்டில் நல்லிணக்கத்துக்கு வழிசமைக்கும்.

You might also like