கேலிக்கூத்தாகும் மக்களாட்சி

பிணை­முறி விவ­கா­ரம் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன் தி­னம் பெரி­தாகி அடி­த­டி­யில் முடி­யும் அள­விற்­குச் சென்­றி­ருக்­கின்­றது. மக்­க­ளாட்­சி­யைக் (ஜன­நா­ய­கத்தை) கேலிக்­கூத்­தாக்­கி­யி­ருக்­கி­றது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் பல­ரும் தமது பாட­சா­லைக் காலத்­தைத் தாண்டி வள­ர­வே­யில்லை என்­ப­தைப் புதிய ஆண்­டி­லும் நிரூ­பித்­தி­ருக்­கி­றார்­கள். வாக்­க­ளித்த மக்­கள் தம்மை அவ­தா­னிக்­கி­றார்­கள் என்­கிற சிந்­த­னையே இல்­லா­மல், அடி­வாங்­கி­ய­வர் அதைத் திருப்­பிக்­கொ­டுத்­து­வி­ட­வேண்­டும் என்ற முனைப்­பு­டன் செயற்­பட்­ட­தைக் காண்­கை­யில் அவர்­களை நினைத்து அழு­வதா இல்லை அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்த வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளைப் பார்த்து அழு­வதா என்­பது புரி­ய­வே­யில்லை.

மத்­திய வங்­கி­யின் பிணை­மு­றி­களை விற்­பனை செய்­த­மை­யில் இடம்­பெற்ற மோசடி தொடர்­பாக அரச தலை­வர் நிய­மித்த விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் அறிக்கை தொடர்­பாக விவா­திப்­ப­தற்­கா­கவே நாடா­ளு­மன்­றத்­தின் சிறப்பு அமர்வு நேற்­று முன்தினம் கூட்­டப்­பட்­டது. மகிந்த அணி­யி­ன­ரும் சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரும் ஜே.வி.பியி­ன­ரும்­தான் நாடா­ளு­மன்­றத்தை உடன் கூட்­டு­மாறு வலி­யு­றுத்­தி­ய­வர்­கள். ஐக்­கிய தேசி­யக் கட்­சியை இலக்கு வைப்­பது அவர்­க­ளின் நோக்­கம். உள்­ளு­ராட்­சித் தேர்­தல் காலம் என்­ப­தால் இந்த விவ­கா­ரத்தை மூல­த­ன­மாக் கிக்­கொள்­ள­லாம் என்ற நப்­பா­சை­யில் ஏனைய கட்­சி­கள் இந்த விவ­கா­ரத்­தைத் தூக்­கிப் பிடித்­தன.

ஆனால், விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் அறிக்கை உட­ன­டி­யாக நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கிடைக்­கா­த­மை­யால் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டது ஐக்­கிய தேசி­யக் கட்சி.  விசா­ர­ணை­யின் முழு­மை­யான அறிக்கை நாடா­ளு­மன்­றத்­துக்கு வரு­வ­தற்கு முன்­பா­கவே ஐக்­கிய தேசி­யக் கட்சி தனது பதி­லைப் பதிவுசெய்து ஆதா­யத்­தைத் தேடிக்­கொண்­டது.

தவ­று­கள் நடந்­தி­ருக்­க­லாம், அத­னை­யும் நேர்­மை­யாக ஏற்­றுக்­கொண்டு விசா­ரணை நடத்தி அதன் மீது விவா­த­மும் நடத்­தி­யதே தமது நேர்­மை­தான் என்று ஐக்­கிய தேசி­யக் கட்சி தன்னை மக்­கள் முன் நியா­யப்­ப­டுத்­திக் கொண்­டது. பதி­லுக்­குத் தம்­மைத் திரு­டன் என்று விழிக்­கும் மகிந்த அணி­யி­ன­ருக்­குப் பதி­ல­டி­யாக மகிந்­த­தான் திரு­டன் என்­றும் கூவி­யா­யிற்று.

சுதந்­தி­ரக் கட்­சியோ, இரு திருட்­டுக் கும்­பல்­க­ளுக்கு இடை­யி­லான சச்­ச­ரவு இது என்­ப­தைப் போன்று நாடா­ளு­மன்­றத்­தில் ஒதுங்­கி­யி­ருந்­தது. பொது நிகழ்வு ஒன்­றில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் இதே கருத்தை வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தார். இரு தரப்­பி­ன­ரும் தாம் திரு­டர்­கள் இல்லை என்­பது போன்று நடந்­து­கொண்­டா­லும் யார் திரு­டர்­கள் என்­பது மக்­க­ளுக்­குத் தெரி­யும் என்­கிற தொனி அவ­ரது பேச்­சில் தெரிந்­தது. அதன் ஊடா­கத் தானும் தன்­னைச் சார்ந்த சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ருமே புனி­த­மா­ன­வர்­கள் என்­ப­தை­யும் அவர் சொல்­லா­மல் சொல்ல முயன்­றார்.

ஆரம்­பத்­தில் மகிந்த அணி­யி­னர் பக்­கம் இருந்­த­வர்­க­ளும் ஊழல் மோச­டிக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்­க­ளு­மான பலர் தன்­னு­டன் இன்­னும் இருக்­கி­றார்­கள் என்­பதை அவர் மறந்­தி­ருக்­கக்­கூ­டும். என்­றா­லும் தூய்­மை­யான அர­சி­யல், நேர்­மை­யான அர­சி­யல் என்­கிற முழக்­கங்­க­ளு­டன் அவர் இந்­தத் தேர்­தலை எதிர்­கொள்­ளப் பார்க்­கி­றார். அத­னா­லேயே மகிந்த அணி­யி­ன­ரை­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ரை­யும் மோத­விட்­டு­விட்டு அவர் புனி­தாக ஒதுங்­கி­யி­ருந்து வேடிக்கை பார்க்­கி­றார்.

இந்த மோதலை நாடா­ளு­மன்­றத்­தில் நடந்த அடி­தடி என்று தமி­ழர்­கள் வெறு­மனே ஒதுக்­கி­விட்­டுப் போய்­வி­ட­மு­டி­யாது. புதிய அர­ச­மைப்பு ஒன்று நாடா­ளு­மன்­றத்­திற்­குக் கொண்­டு­ வ­ரப்­ப­டு­மாக இருந்­தால் அப்­போது என்ன நடக்­கும் என்­ப­தற்­கான முன்­னோட்­ட­மா­கவே இத­னைக் கொள்­ள­வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்டு அது நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­ப­டும்­போ­தும் மகிந்த தரப்­பும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இவ்­வாறே மோதிக்­கொள்­ளும் அடித்­துக்­கொள்­ளும் என்று எதிர்­பார்க்­க­லாம். அப்­போ­தும் அரச தலை­வ­ரும் அவ­ரைச் சார்ந்த சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரும் இந்­தப் பிரச்­சி­னைக்­கும் தமக்­கும் சம்­பந்­தம் ஏதும் இல்­லா­த­தைப் போன்று வேடிக்கை மட்­டும் பார்த்து நிற்­பார்­கள் என்­ப­தை­யும் எதிர்­பார்க்­க­லாம்.

கூட்டு அரசு, வர­லாற்­றில் கிடைத்த மிக முக்­கிய வாய்ப்பு என்­ப­ன­வெல்­லாம் தமி­ழர்­க­ளின் பிரச்­சினை விட­யத்­தில் சிங்­க­ளக் கட்­சி­க­ளுக்­கும் வாக்­கா­ளர்­க­ளுக்­கும் ஒரு பொருட்­டே­யல்ல என்­ப­தையே தற்­போ­தைய சச்­ச­ர­வு­க­ளும் முரண்­பா­டு­க­ளும் தெளி­வா­கச் சொல்­கின்­றன.

You might also like