சரியானவாறு தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் – டக்ளஸ்
மக்கள் சொந்தக் கால்களில் நின்று தமது வாழ்வியலை மேம்படுத்துவதற்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற யாழ். மாநகர சபை வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:-
யாழ். மாநகர சபையை நாம் ஆளுகை செய்த போது நகரின் சுத்தம் சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாத்தது மட்டுமல்லாது தமிழ் மன்னர்களுக்கும் தமிழ் மக்களை பாதுகாத்த பெருந்தகையாளர்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன.
பல்வேறுபட்ட பெரும் பணிகளைச் செய்து காட்டியிருந்தோம். தேர்தலில் மக்கள் எமது வீணைச் சின்னத்துக்கு ஆணையை வழங்குவார்களேயானால் அவர்களுடைய தேவைப்பாடுகளை நிறைவுசெய்து அவர்களது எண்ணக் கனவுகளை ஈடேற்ற நாம் உழைப்போம் – என்றார்.