Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கஜேந்திரகுமாருக்கு நடந்ததே  சுரேஷூக்கு நடக்கப்போகிறது

எதிர்வு கூறுகிறார் சரா எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டு – தூக்கி எறியப்பட்டாரோ, அதேபோன்றுதான் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் நடக்கும்.

மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வலி.மேற்கு பிரதே சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதேச சபைகளில் 80 சதவீத ஆசனங்களை நாம் கைப்பற்றவேண்டும். அப்போதுததான் பிரச்சினைகள், சவால்கள் இல்லாது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும். நாம் இந்த முறை களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் அனுபவசாலிகள். அவர்கள் சபையை வினைத்திறனாகக் கொண்டு நடத்துவார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் வீதி மின் விளக்குகள் எனது நிதி ஒதுக்கீட்டில் பொருத்தப்பட்டது. இப்போது அதனை வேறு சிலர் உரிமை கோரி வருகின்றார்கள். உண்மை எதுவென்று எங்கள் மக்களுக்குத் தெரியும்.
பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் தொகுதிகளில் நிற்பதில்லை என்று குற்றம் சொல்லுவார்கள்.

ஆனால் இங்கே, எனது தொகுதியிலிலேயே நான் அதிகளவு நேரத்தைச் செலவிடுகின்றேன். இந்தப் பகுதி மக்களுக்கு அது தெரியும். வலி.மேற்குப் பிரதேச சபையை நாம் கைப்பற்றுவது உறுதி. அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால், எமது வெற்றி பெருவெற்றியாக இருக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை எடுத்துக் கொண்டுள்ளது. அவற்றில் சமாந்தரப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு மற்றையது அபிவிருத்தி.

தமிழ் இனம் அடிமைப்பட்ட இனமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காகவே எங்களின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடினார். எமது போராட்டம் பல நாடுகளின் சகுனித்தனத்தால் துரதிஷ;டவசமாக அழிக்கப்பட்டு விட்டது.

ஆயுதம் ஏந்தா அறவழியில் போராடினோம். பின்னர் ஆயுதம் ஏந்திப் போராடினோம். இரண்டு முடிவுக்கு வந்த நிலையில் இப்போது இராஜதந்திர ரீதியில் போராடுகின்றோம். எமது இராஜதந்திரப் போராட்டத்தை பலரும் பல விதமாக விமர்சிக்கலாம். ஆனால் எமது பாதை சரியானது. இந்தப் பாதையில் நாம் ஒற்றுமையாகப் பயணிக்கவேண்டும்.

கூட்டமைப்பு இலக்கை அடைவதற்காக ஒற்றுமையாகப் பயணிக்கின்றது. ஆனால், சிலர் எம்மிடமிருந்து பிரிந்து செல்கின்றார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

எமது பிரதேசத்தை நாங்கள் அபிவிருத்தி செய்யவில்லையாயின், நாம் இன்னும் பின்னோக்கியே செல்வோம். அதனாலேயே நாங்கள் எங்கள் பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்து, அரசியல் தீர்வையும் அடைவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் இந்த முயற்சிக்கு நீங்கள் பேராதரவு வழங்கவேண்டும் – என்றார்.