Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இருள் நீங்கி அறிவுஞானம்  தளைத்தோங்க வேண்டும்

தலைமை அமைச்சர் ரணில்  சிவராத்திரிச் செய்தி

மகா சிவராத்திரி எனும் புனித விரதத்தைக் கடைப்பிடிக்கும் உலகெங்கும் உள்ள இந்துக்களுடன் இணைந்துகொள்ளும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ளதாவது-

ஆதியும், அந்தமுமில்லா அருட்பெரும் பரமசிவனைப் போற்றி வழிபடும் இந்தத் தினத்தில் இருள் நீங்கி அறிவுஞானம் தளைத்தோங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இரவு பூராகவும் இந்து பக்தர்கள் விரதமிருந்து புண்ணிய கருமங்களில் ஈடுபடுவதுடன் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் ஊடாக ஆன்மீக விமோசனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் உயர்வான நம்பிக்கையாகும்.

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி அதனூடாக இறைவனைக் காணும் உயரிய இந்துப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை வாழ் இந்துக்கள் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியத்துடனும், நட்புறவுடனும் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

இந்தப் புனிதமான விரதத்தை ஆன்மீக உணர்வுடனும், பக்தி சிரத்தையுடனும் கடைப்பிடித்து எமது இந்து மக்கள் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வின் ஊடாக ஐக்கியத்துக்கான அவர்களது தேடலில் மேலும் பலத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்துக்கான தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அர்த்தம் பொருத்திய பக்திபூர்வமான சிவராத்திரி தினமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.- என்றுள்ளது.