காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்து கரைசேர்க்குமா அமைக்கப்படும் அலுவலகம்?

இலங்­கை­யில் 2009ஆம் ஆண்டு மே மாதத்­திற்கு முன்­பும், பின்­ன­ரும் உள்­நாட்­டுப் போர் நிலமை­க­ளி­னால் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பாக அலு­வ­ல­கம் ஒன்றை அமைப்­ப­தற்கு முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு, அது சார்ந்த நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆயி­னும், அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் ஒன்­றில் பேசிய அரச தலை­வர், காணா­மல் ஆக்­கப்­பட்­டோரை நாம் எல்லா இட­மும் தேடி­யும் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அவர்­கள் எங்­குமே இல்லை. அவர்­க­ளுக்­காக இழப்­பீடு கொடுக்க முடி­யும்’’ என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இவ்­வா­றான நிலை­யில் அமைக்­கப்­ப­ட­வுள்ள குறித்த அலு­வ­ல­கம் காணா­மல் ஆக்­கப்­பட்­டோரை கண்­டு­பி­டிக்­குமா? என்ற கேள்வி உற­வு­களை தேடித்­தேடி அலை­வோ­ரி­டத்­தில் வலுவாக எழுந்துள்ளது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான
அலு­வ­ல­கத்­தின் செயற்­பா­டு­க­ளில்
தமி­ழர்­க­ளுக்­குத் திருப்தி இல்லை

ஜ.நா. மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் தீர்­மா­னத்­திற்­க­மைய அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­மாற்­றுக்­கால நீதி­யில் எடுத்­துக்­காட்­டப்­பட்ட நான்கு மூலோ­பா­ யங்­க­ளில் ஒன்­று­தான் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் அலு­வ­ல­கம் ஒன்றை அமைத்­தல்.

கூறப்­பட்ட நான்கு அணு­கு­மு­றை­க­ளை­யும் இலங்­கை­யில் போர்க்­கால சூழ்­நி­லை­யில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான தீர்­வாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது அரசு. எனி­னும் அலு­வ­ல­கத்­தி­ன­தும் அது சார்ந்த நடத்­தை­க­ளி­லும் தமிழ் மக்­கள் திருப்­தி­ய­டை­ய­வில்லை. அவர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­தும் வகை­யில் அது அமை­ய­வும் இல்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு மத்­திய பகு­தி­யில் ஓர் சிறிய அரச குழு மூலம் வரை­யப்­பட்ட காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் அலு­வ­ல­கத்­திற்­கான சட்ட வரைபு மக்­க­ளுக்கு முறைப்­படி வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது, இந்த அரசு நல்­லி­ணக்­கச் செயற்­பா­டு­களை எப்­ப­டி­யாக மக்­கள் மத்­தி­யில் எடுத்­துச் சொல்­லப்­போ­கின்­றது என்­ப­த­னை­யும் கேள்­விக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

அர­சின் இந்த அச­மந்­தப் போக்கை, செயற்­பாட்டை சிவில் சமூ­கத்­தி­னர் விமர்­சித்து வந்த நிலை­யில் ஆலோ­சனை செய­லணி ஒன்று நிறு­வப்­பட்டு மக்­க­ளின் பரந்­து­பட்ட அபிப்­பி­ரா­யங்­கள் பெறப்­பட்­டன. சிவில் சமூ­கத்­தி­ன­ரின் ஈடு­பாட்­டு­டன் பய­ணித்த ஆலோ­ச­னைச் செய­லணி 2016 ஓகஸ்ட் மாதத்­தில் ஓர் இடைக்­கால அறிக்­கை­யினைச் சமர்ப்­பித்­தது.

ஆலோ­ச­னைச் செய­ல­ணி­யின்
அறிக்­கை­கள் ஏது­மில்­லா­மல்
செயற்­பட்­டது நாடா­ளு­மன்­றம்

இந்த அறிக்­கை­கூட எழுத்­த­ள­வி­லும் சில ஆலோ­ச­னைக் கூட்­டங்­க­ளில் சமர்­பிக்­கப்­பட்ட முடி­வு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டுமே எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால அறிக்கை மதிப்­பீடு செய்­யப்­பட முன்­னமே 2016 ஓகஸ்ட் மாதத்­தில் நாடா­ளு­மன்­றில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் அமைத்­தல் தொடர்­பான சட்ட வரைபு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

ஆலோ­ச­னைச் செய­ல­ணி­யின் இடைக்­கால அறிக்கை மதிப்­பீடு செய்­யப்­பட முன்­னரே நாடா­ளு­டன்­றத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் தொடர்­பான சட்ட வரைபு சில திருத்­தங்­க­ளு ­டன் 2016 ஓகஸ்ட்­டில் சட்­ட­மாக்­கப்­பட்­டது. ஆயி­னும் ஆலோ­ச­னைச் செய­ல­ணி­யின் இறுதி அறிக்கை கடந்த வரு­டம் ஜன­வ­ரி­யி­லேயே வெளி­யா­கி­யது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரது சட்ட மூலம் 2017ஆம் ஆண்டு ஜூனில் மேல­திக திருத்­தங்­க­ளு­ட­னும் சுயா­தின நிதிப்­பங்­க­ளிப்பு ஒழுங்­கு­க­ளு­ட­னும் நிறை­வேற்­றப்­பட்­டி­ ருந்த போதி­லும், இந்த அலு­வ­ல­கம் இன்­றும் அரச நிதி­யி­லேயே அதன் செயற்­பாட்­டிற்கு தங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

எப்­ப­டி­யி­ருந்த போதி­லும் 2017ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திக­தி­யி­லேயே, அரச தலை­வர் வர்த்­த­க­மா­னி­யில் கையொப்­பம் இட்­ட­தனை தொடர்ந்து இந்த அலு­வ­ல­கம்? அது சார்ந்த பணி­கள் தேசிய ஒரு­மைப்­பாட்டு நல்­லி­ணக்க அமைச்­சின் கீழ் செயற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த வரு­டம் ஒக்­ரோ­பர் மாதம் மற்­று­மொரு சோத­னையை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கம் சந்­தித்­தது. இந்த அ­லு­வ­ல­கத்­திற்­கான அங்­கத்­த­வர்­க­ளைத் தெரிவு செய்­யும் பொறுப்பு இலங்­கை­யின் அரச அமைப்பு சபை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதற்­கான தேர்­வா­ளர்­கட்­கான விண்­ணப்­பம் பத்­தி­ரி­கை­கள் மூலம் பிர­சு­ ரிக்­கப்­பட்டு, பொருத்­த­மா­ன­வர்­கள் விண்­ணப் பிக்­கும் படி கேட்க்­கப்­பட்­ட­னர்.

2017ஆம் ஆண்டு நவம்­பர் 6 ஆம் திகதி இதற்­கான முடி­வுத்­தி­கதி அறி­விக்­கப்­பட்டு 7 அங்­கத்­த­வர்­கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். பரிந்­து­ரைக்­கப்­பட்ட அங்­கத்­த­வர்­கள் இது­வரை அர­சி­ய­ல­மைப்பு சபை­யி­னால் அங்­கீ­கா­ரம் பெற­வில்லை என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது. இத்­த­கைய மிகைத் தாம­தச் செயற்­பா­டு­கள் யாவும் அர­சின் வெளிப்­ப­டைத் தன்­மை­யை­யும், பல­வீ­னத்­தை­யும் எடுத்­துக் காட்­டு­வ­தா­க­வுள்­ளது.

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்­தின் செயற்­பாட்­டிற்­காக வரவு செலவு திட்­டத்­தில் 2017 டிசெம்­ப­ரில் 1.4 பில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிதி­யின் மூலம் திற­மை­யான ஓர் செயற்­பாட்டை இந்த அலு­வ­ல­கம் நகர்த்­து­வ­தற்கு சன­நா­யக நீரோட்­டத்­தில் உள்ள பல தடை­கள் யாவும் நீக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்­ட­வர்­கட்கு நியா­ய­மான நீதி கிடைப்­ப­தற்கு இந்த அலு­வ­ல­கம் தயா­ரா­குமா?

தமது உற­வு­க­ளைத் தேடி தொடர்ந்து ஒரு­வ­ரு­ட­மாக கிளி­நொச்­சி­யில் தமது போராட்­டத்­தைத் தொடர்ந்து வரும் தாய்­மார்­க­ளுக்கு, தந்­தை­மார்­க­ளுக்கு, சகோ­த­ரர்­க­ளுக்கு, நண்­பர்­க­ளுக்கு இந்த அலு­வ­ல­கம் கூறப்­போ­கும் பதில்­தான் என்ன?

பணிப்­பா­ளர்
மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யம்

You might also like