சிலைகள் உடைப்பைக் கண்டித்து மன்னாரில் கவனவீர்ப்புப் பேரணி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.

இந்து மகா சபையின் ஏற்பாட்டில் மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட இப் பேரணிக்கு இறுதி நேரத்தில் பொலிஸார் தடை விதித்தனர். சற்று அமைதியின்மை ஏற்பட்டு, பொலிஸாரின் தடையை மீறி கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.
இதன்போது சிறப்பு வழிபாடு இடம் பெற்றது. சம்பவ இடத்துக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதரிகாரி உள்ளிட்ட குழுவினர் கவனவீர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

அங்கு கூடி நின்ற மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் சற்று நேரம் தர்க்க நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து  அப் பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.
மன்னாரில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் வருகிறது. இந்த சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியதோடு,மாவட்டத்தில் இன ஒற்றுமையைப் பாதிக்கும் செயற்பாடாக காணப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் எனப் பலர் அங்கு கூடியிருந்த நிலையில் பொலிஸாரின் தடையை மீறி அமைதியான முறையில் மன்னார் மாவட்டச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் கூடி நிற்க ‘இந்து மகா சபையின்’ பிரதி நிதிகள் மாவட்டச் செயலகத்தினுள் சென்று தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மாவட்டச் செயலரிடம் கையளித்தனர்.

You might also like