இலங்கை அரசியலின் இன்றைய இரகசிய முடிச்சுக்கள் அவிழுமா?

தேர்­தல்­களை நடத்­து­வ­தால் மட்­டும் நாட்­டின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைத்­து­வி­டு­மென எதிர்­பார்க்க முடி­யாது. உள்­ளு­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் வெளி­யா­ன­தன் பின்­னர் மகிந்­த­வும், அவ­ரைச் சேர்ந்­த­வர்­க­ளும் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லை­யும், நாடா­ளு­மன்­றத்­தேர்­த­லை­யும் உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். ஆனால் அதற்காக 2020 வரை அவர்­கள் பொறுத்­தி­ருக்­கத்­தான் வேண்­டும். உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் எவ­ருமே எதிர்­பார்்க்­கா­தவை.

வடக்­கில் மட்­டு­மல்­லாது தெற்­கி­லும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்­சியை அமைப்­ப­தில் குழப்­ப­மானதொரு நிலை காணப்­ப­டு­கின்­றது. கலப்பு முறை­யி­லான தேர்­த­லின் எதிர்­வி­ளை­வு­தான் இது. இந்­தக் குழப்ப நிலை ஓய்­வ­தற்கு முன்­னர் வேறு தேர்­தல்­களை நடத்­து­மாறு கோரு­வதை நியா­ய­மா­ன­ தெ­னக் கொள்ள இய­லாது.

எதிர்­வ­ரும் 2020 க்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் இடம் பெறு­மா­யின், தற்­போ­துள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 70 பேர் தமக்­கு­ரிய ஓய்­வூ­தி­யத்­தைப் பெற­மு­டி­யா­மல் போய் விடு­மெ­னத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.வழக்­க­மாக ஐந்து ஆண்டுகள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பதவி வகித்த ஒரு­வரே ஓய்­வூ­தி­யம் பெறத் தகுதி உடை­ய­வ­ரா­கி­றார். இத­னால் தற்­போ­தைய நாடா­ளு­மன்­றம் தனது ஆயுட்­கா­லத்­தில் மூன்று ஆண்­டு­க­ளையே பூர்த்தி செய்­ய­வுள்ள இன்­றைய நிலை­யில் தேர்­த­லொன்று இடம் பெறு­வதை அந்த 70 பேரும் ஒரு­போ­துமே விரும்ப மாட்­டார்­கள்.

தேர்தல்களை நடத்துவதற்கான செலவு
அரசுக்குப் பெரும் சுமை

நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­கடி, அடிக்­கடி தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு இடம் கொடுக்­கப்­போ­வ­தில்லை. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கா­கப் பெரும் தொகை­யான பணம் செல­வி­டப்­பட்­டுள்ள நிலை­யில், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கும், அரசை தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லுக்­கும் மிகப்­பெ­ரிய தொகை­யைச் செல­விட நேரி­டும்.

அதே வேளை கடந்த அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லில் பெற்­றதைவிட, இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த தரப்­பி­ன­ருக்­கு சுமார் ஆறு மில்­லி­யன் வாக்­கு­கள் குறை­வா­கக் கிடைத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே ஏனைய தேர்தலிலும் மகிந்த தரப்பு எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும் வெற்றி அவர்­க­ளுக்­குக் கிடைக்­குமா? என்­ப­தும் சந்­தே­க­மா­கவே உள்­ளது.

தற்­போ­துள்ள நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இரண்டு பிரி­வு­க­ளா­கப் பிள­வு­பட்டு நிற்­ப­தைக் காண முடி­கின்­றது. கட்­சித்­த­லைமை அரச தலை­வர் வசம் உள்­ள­போ­தி­லும், கட்­சி­யின் ஒரு பிரி­வி­னர் மகிந்­த­வு­டன் ஒட்­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். மகிந்­த­வும், மைத்­தி­ரி­யும் ஒன்­றாக இணை­யும்­போது இவர்­க­ளும் ஒன்று சேர்ந்து விடு­வார்­கள். ஆனால் அதற்­கான காலம் கனி­வ­தற்­குச் சிறிது காலம் பிடிக்­கக் கூடும்.

மகிந்த மீது மைத்திரிபால முழு நம்பிக்கை வைக்கப் போவதில்லை

மகிந்­தவை முழு­மை­யாக நம்­பு­வ­தற்கு மைத்­திரி தயா­ராக இல்லை என்­பதே யதார்த்­த­மா­கும். ஏனென்­றால் கடந்த காலங்­க­ளில் அவ­ருக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­களை அவர் மறந்­தி­ருக்க மாட்­டார். கடந்த அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்து கொண்­டி­ருந்­த­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன தமது நம்­பிக்­கைக்­கு­ரிய நண்­பர் ஒரு­வ­ரின் வீட்­டில் மறைந்து இருக்க வேண்டி நேரிட்­டது.

மகிந்த தரப்­பி­ன­ரால் தமது உயி­ருக்­கும் பங்­கம் ஏற்­பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வே இதற்­கான கார­ண­மா­கும். அந்த அள­வுக்கு மகிந்த தரப்­பி­னர் குறித்து அவர் அச்­சம் கொண்­டி­ருந்­தார். தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்த பின்­ன­ரும் அதை எற்­றுக் கொள்­ளாத மகிந்த, புரட்­சி­யொன்­றின் மூலம் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றும் முயற்­சி­க­ளில் ஈடு­பட்­ட­தாகவும், பின்­னர் பல்­வேறு தரப்­பு­க­ளது அழுத்­தம் கார­ண­மாக அந்த முயற்­சி­யும் கைவி­டப்­பட்­டதாகவும் கூறப்பட்டது. இவற்­றை­யெல்­லாம் நன்கு தெரிந்து வைத்­துள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன, மகிந்­தவை இலே­சில் நம்­பு­வா­ரென எதிர்­பார்க்க முடி­யாது. அந்த வகை­யில் அவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது கொண்­டுள்ள நம்­பிக்கையின் அள­வுக்கு மகிந்த மீது நம்­பிக்கை கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதே உண்மை.

அதே வேளை 2020 ஆம் ஆண்டு வரை தற்­போ­துள்ள அரசு தொட­ரும் என­வும், அமைச்­ச­ர­வை­யில் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­மெ­ன­வும் , ஆனால் தலைமை அமைச்­சர் பத­வி­யில் மாற்­றம் இருக்­காது என­வும் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்­ளார். இந்த நிலை­யில் முன்­னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச தொலை­பே­சி­யில் ரணில் விக்­கி­ரமசிங்­க­வைத் தொடர்பு கொண்டு தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து அவரை விலக வேண்­டா­மெ­னக்­கூ­றி­ய­தாக மற்­றொரு தக­வல் தெரி­விக்­கின்­றது. இவற்­றுள் எதை நம்­பு­வது? எதைப் புற­மொ­துக்கி விடு­வது? எனப் புரியவில்லை. அர­சி­ய­லில் எந்த வேளை­யி­லும், எது­வும் நடக்­க­லாம் என்­ப­தால் சக­ல­ விடயத்திலும் பொறுமைகாக்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

மகிந்தவால் அரச தலைவராக மீண்டுமொரு
முறை பதவி வகிக்க இயலாது

மகிந்­த­வைப் பொறுத்த வரை­யில், அவர் அரச தலை­வ­ராக வரு­வ­தற்­கான வாய்ப்பு மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. அர­ச­மைப்­பின் 19 ஆவது திருத்­தம் மீண்­டு­மொரு தடவை அவர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாத விதத்­தில் தடை­யாக அமைகிறது. இன்­னு­மொரு திருத்­தத்தை மேற்­கொள்­வ­தன் மூல­மா­கவே அவர் மீண்­டும் அரச தலை­வர் போட்­டி­யிட முடி­யும். ஆனால் தற்­போ­துள்ள சூழ்­நி­லை­யில் அதற்­கான வாய்ப்பு இல்­லை­யென்றே கூற வேண்­டும்.

மேலும் 2020ஆம் ஆண்டு வரை, அரச தலை­வர் பத­வி­யி­லி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எவ­ரா­லும் அகற்றிவிட முடி­யாது. அர­ச­மைப்­பில் இது தெளி­வா­கக் கூறப்­பட்­டுள்­ளது. சில­வேளை வேறு கார­ணங்­க­ளால் அந்­தப்­ப­தவி வெற்­றி­ட­மா­கு­மா­னால் , தலைமை அமைச்­ச­ராக இருப்­ப­வர் எஞ்­சிய காலத்­துக்கு அந்­தப்­ப­த­வியை வகிக்­க­மு­டி­யும். இது சாத்­தி­யப்­ப­டா­து­விட்­டால் சபா­நா­ய­கர் அந்­தப் பத­வியை ஏற்­றுச் செயற்­பட முடி­யும்.

இலங்கை தற்­போது அர­சி­யல் விசித்­தி­ரங்­களை எதிர் கொண்டு வரு­கின்­றது. இதில் பல முடிச்­சுக்­கள் உள்­ளன. இவை அவி­ழும்­போது அர­சி­யல் இர­க­சி­யங்­கள் அனைத்­தும் பர­க­சி­ய­மா­கும்.

You might also like