என்­ன­தான் நடக்­கும்?

உள்ளூராட்­சித் தேர்­தல் நடந்து முடிந்த பின்­னர் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் கிடப்­பில் போடப்­ப­டும் அபா­யத்தை ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் ஜெப்ரி பெல்ட்­ம­னின் கொழும்­புப் பய­ணம் உணர்த்­திச் சென்­றி­ருக்­கின்­றது.

பெல்ட்­மன் தனது பத­விக் காலத்­தில் இலங்­கைக்கு வருகை தரு­வது இது 5ஆவது தடவை. நான்கு தட­வை­கள் அவர் தனியே தனது உத்­தி­யோ­க­பூர்­வத் தேவைக்­காக இலங்கை வந்­தி­ருக்­கி­றார். ஒரு தடவை ஐ.நா. செய­லா­ளர் நாய­க­மாக இருந்­த­வ­ரான பான் கீ மூன் இலங்கை வந்­த­போது அவ­ரு­டன் கூட வந்­தி­ருக்­கி­றார். இலங்­கை­யின் அர­சி­யல் குறித்து அவ­ருக்கு ஆழ­மான அறிவு இருக்­கி­றது. அர­சி­யல்­வா­தி­க­ளைப் பற்­றி­யும்­கூட.

பெல்ட்­மன் இலங்­கைக்கு வருகை தரும் கடை­சிப் பய­ண­மாக இது அமை­கி­றது. அவர் தனது பத­வி­யில் இருந்து வில­கிச் செல்­கி­றார். கொழும்­பில் பத­வி­யில் இருக்­கும் அரசு மற்­றும் அதன் தலை­வர்­கள் கடந்த இரண்டு வருட காலத்­தில் ஐ.நாவுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­கள், அவற்­றைச் செயற்­ப­டுத்த எடுத்த முயற்­சி­கள் என்­பன குறித்து அவ­ருக்கு நல்ல பரிச்ச­யம் உள்­ளது.

அத­னா­லேயே, 2015ஆம் ஆண்டு இந்த அரசு மக்­க­ளி­டம் இருந்து பெற்­றுக்­கொண்ட ஆணை­யி­லி­ருந்து வில­கிச் செல்­லக்­கூ­டாது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வைக் கொழும்­பில் சந்­தித்­த­போது அழுத்­த­மா­கக் கூறி­யி­ருந்­தார்.

நல்­லாட்சி, நிலை­மாறு கால நீதி, அர­சி­யல் தீர்வு ஆகி­ய­வற்­றி­லி­ருந்து அரசு வில­கிச் செல்­லக்­கூ­டாது என்­ப­தைத்­தான் ஐ.நா. உத­விச் செய­லர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். எனி­னும் நல்­லாட்சி, நிலை­மாறு கால நீதி ஆகிய இரு விட­யங்­க­ளில் இருந்­தும் இந்த அரசு வில­கிப் பல மாதங்­கள் ஆகி­விட்­டன. எஞ்­சி­யி­ப்பது அர­சி­யல் தீர்வு விவ­கா­ரம்­தான்.

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லுக்கு முன்­னர் வரைக்­கும் அர­சி­யல் தீர்வு விட­யம் தொடர்­பில் இழு­ப­றி­யு­ட­னான ஒரு நகர்வு இருந்­தது. உண்­மை­யான, உள்­ளன்­போடு கூடிய ஒரு முயற்­சி­யாக அது இல்­லா­த­போ­தும் குறைந்­த­பட்­சக் கட­மை­யு­ணர்­வோடு நகர்ந்­து­கொண்­டி­ருந்­தது. தேர்­த­லுக்­குப் பின்­னர் அது­வும் இல்­லா­மல் போயி­ருக்­கி­றது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­க­ளில் இருந்து அரசு பின்­வாங்­கத் தொடங்­கி­விட்­டது என்­பதை அந்த முயற்­சி­க­ளில் தமி­ழர்­கள் சார்­பில் இருந்து பங்­கேற்­ற­வர்­க­ளில் ஒரு­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் பெல்ட்­ம­னு­ட­னான சந்­திப்­பில் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்­தார்.

உள்ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் அர­சுக்­குள் பிளவு ஏற்­பட்­டுள்­ளது, அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மற்­றும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின்­தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல் போன்­ற­வற்­றில் அரசு ஆர்­வம் காட்­ட­வில்லை, அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான எத்­த­னங்­கள் எவை­யும் அர­சி­டம் காணப்­ப­ட­வில்லை என்று கூட்­ட­மைப்­பின் சந்­திப்­பில் ஐ.நா. உத­விச் செய­ல­ரி­டம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அரசு தடம் மாறிச் சென்­று­வி­டா­த­படி பன்­னாட்­டுச் சமூ­கம் அதற்கு அழுத்­தம் கொடுக்­க­வேண்­டும் என்­றும் கூட்­ட­மைப்­பி­னர் ஐ.நா. செய­ல­ரி­டம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

தமி­ழர்­களை ஏமாற்­று­வ­தையே சிங்­க­ளத் தலை­மை­கள் ஆண்­டாண்டு கால­மா­கக் கடைப்­பி­டித்து வரும் நிலை­யில் இந்­தத் தலை­வர்­கள் மட்­டும் தீர்­வைத் தந்­து­வி­டவா போகி­றார்­கள் என்­கிற விமர்­ச­னங்­கள் எழுந்­த­போ­தெல்­லாம் கொழும்பு அர­சி­யல் தலை­மை­யை­விட பன்­னாட்­டுச் சமூ­கத்­தையே அதி­கம் நம்பி இந்­தக் காரி­யத்­தில் இறங்­கி­யி­ருப்­ப­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. நடந்து முடிந்த தேர்­தல் பரப்­பு­ரை­க­ளி­லும் அத­னைக் கூறி­வந்­தது.

இப்­போது பன்­னாட்­டுச் சமூ­கம் தனது பங்­க­ளிப்­பின் மூலம் இலங்­கை­யின் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வை முன்­ன­கர்த்த வேண்­டிய கால கட்­டம் வந்­தி­ருக்­கி­றது. இதற்­கி­டை­யில் இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்­த­லும் 2020இல் மீண்­டும் அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் வரப்­போ­கின்­றன. இத்­த­கைய அர­சி­யல் சூழ­லில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் கொழும்பை அசைக்­குமா என்­பது இன்­னும் சில மாதங்­க­ளில் தெரிந்­து­வி­டும்.

You might also like