ருவாண்டாவில் பரிதாபம் – மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு!!

கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.

நாயகுரு என்ற இடத்தில் மலையடிவாரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது.

யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று தேவாலயத்தை மின்னல் தாக்கியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதில் காயமுற்ற சுமார் 140 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக ருவாண்டாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டட விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என கூறி சுமார் 700 தேவாலயங்கள், மூடப்பட்டன.

அதற்குள் தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கியுள்ள சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக அந்த நாட்டில் கடந்த வெள்ளியன்றும் இதே போன்று 18 மாணவர்களை மின்னல் தாக்கிய சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like