வலி.வடக்கு  பாடசாலைகளுக்கு  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

கஜதீபன் கோரிக்கை

யாழ்.வலிகாமம் வடக்கில் இராணுவம் விடுவித்துள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க ஆவனை செய்வதுடன் இராணுவம் வசம் உள்ள எட்டுப் பாடசாலைகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 118 அவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் கவனவீர்ப்பு விடயமாக இந்த விடயத்தை சபையில் பிரேரிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,

உள்நாட்டுப் போருக்கு பின்னர் வலிவடக்கில் 16 பாடசாலைகள் இராணுவம் வசம் இருந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக எட்டுப் பாடசாலைகள் விடுவிக்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயம். விடுவிக்கப்படாத பாடசாலைகளை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் பூரணமாகவும் முழுமையாகவும் நியமிக்கபடாத நிலை காணப்படுகின்றது. இதன் விளைவாக சில பாடசாலைகளில் அதிபர் மட்டுமே காணப்படுகின்றார். போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பகுதிகளில் கல்வியை உயர்த்த ஏன் மாகாண கல்வி அமைச்சினால் முடியவில்லை.

மீள் குடியேறிய மக்களில் பெரும்பான்மையோர் வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தமது பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். அங்கு ஆசிரியர் இல்லை. இந்த நிலையில்தான் எமது பிள்ளைகளின் கல்வி நிலை உள்ளது. மாகாண அமைச்சு தனது கடமைகளில் முதல் பணியாக இந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராணுவம் தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ள மிகுதி எட்டு பாடசாலைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவம் விடுவித்த பாடசாலைகளில் நடேஸ்வராக் கல்லூரியின் குடி தண்ணீர் கிணற்றினை இராணுவம் இப்போதும் தமது ஆக்கிரமிப்பிலேயே வைத்துள்ளது.

அப் பாடசாலையின் சில கட்டடங்களை பொலிஸார் தங்களின் பாவனைக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்.

You might also like