போர்க்குற்ற விசாரணையை கைவிட்டதா கூட்டமைப்பு?

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்தன.

ஆதரவு வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகளும் அடக்கம். கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டா லும்கூட ரணில் வெற்றி பெற்றிருப்பார் என்பது உண்மையானாலும், சிறுபான்மை இனங்கள் அனைத் தும் ரணிலுக்குத் தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி யிருக் கின்றன என்பதும் இங்கு கவனத்திற்குரியது.

இந்த இக்கட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்த 10 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுக் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் நடத்தப்பட்டது. முதல் நாளில் காரசாரமான விவாதங்களோடு இரு தடவைகள் நடந்த கூட்டத்தின் இறுதியிலேயே ரணிலுக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் பட்டியலிடப்பட்டன.

இது ஒரு நேர்த்தியான காய் நகர்த்தல், ரணிலிடம் விதிக்கப்படவேண்டிய நிபந்தனைகளைச் சீராய்ந்து பார்த்து எடுத்துவரும்படி முன்னதாகக் கட்சித் தலைமை கோரியிருக்கவில்லை.

3ஆம் திகதிய கூட்டத்தின் பெறுபேறாக அவசர அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்போதிருந்த ஞாபகங்களுக்கு ஏற்ப முக்கிய பிரச்சினைகள் என்று இந்தப் 10 விடயங்களும் பட்டியலிடப்பட்டன.

கூட்டத்தில் ரணிலை ஆதரிக்கவேண்டும் என்பதை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிப்படுத்தியவர்கள், மிக நுணுக்கமாக தமது தரப்பிலிருந்து ரணிலிடம் முன்வைக்க வேண்டிய மிக முக்கிய நிபந்தனைகளை நாடாளுமன்ற உறுப் பினர்களின் முன்பாகத் தூக்கிப்போடவில்லை.

அதனால் அவை விவாதத்துக்குள் வரவும் இல்லை, நிபந்தனைப் பட்டியலில் சேர்க்கப்படவும் இல்லை.

அவ்வாறு விடப்பட்ட முக்கிய விடயங்கள் இரண்டு உள்ளன. அதில் முதலாவதும் மிக மிக முக்கியமானதும் போர்க்குற்ற விசாரணை. நிலைமாறு கால நீதியைச் செயற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உறுதிமொழி வழங்கிய கொழும்பு அரசு, வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரை ஞர்கள், வழக்குத் தொடுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கி யிருந்தது.

ஆனால் பின்னர் அதனைச் செயற்படுத்தவில்லை. செயற்படுத்துவதற்கான அசுமாத்தத்தையும் காணவில்லை.

போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறைந்தபட்சம் கொழும்பு அரசு வாக்குறுதியளித்த கலப்பு நீதிமன்றத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி அதனையும் நிபந்தனைப் பட்டியலில் சேர்த்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை.

இரண்டாவது விடயம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குச் சில நாள்களுக்கு முன்னர் வரைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 2015ஆம் ஆண்டு 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலி யுறுத்தி வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அந்தக் கோரிக்கையும்கூட நிபந்தனைப் பட்டியலில் சேர்ப்பிக்கப்பட வில்லை.

இந்த இரு விடயங்களுமே தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு மிக மிக முக்கியமானவை. வழக்குத் தொடர்வதற்கோ, குற்றமிழைத்தவர்களை யார் என்று கண்டறியவோ அதிகாரமற்ற காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக இயக்கவேண்டும் என்பதை நிபந்தனைப் பட்டியலில் சேர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இரு விடயங்களையும் மறந்துபோய் பட்டியலில் சேர்க்காமல்விட்டது என்று நம்புவது கடினமானது.

எனவே, நிபந்தனைப் பட்டியலில் சேர்க்காமல் விட்டதன் மூலம், சேர்க்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் இல்லா தவை என்று கருதியதன் மூலம் – போர்க்குற்ற விசாரணை, ஐ.நா. தீர்மானத்தைக் கொழும்பு முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளைக் கூட்டமைப்புக் கைவிட்டு விட்டது என்றே கொள்ளவேண்டும்.

போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி மக்கள் ஆணையைப் பெற்றுவிட்டு, தலைமை அமைச்சரிடம் இருந்து அதற்கான எழுத்துமூல உறுதி மொழி யைப் பெறாதது (எழுத்து மூல உறுதி மொழியைப் பெற்றாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தாலும், குறைந்தபட்சம் நிறைவேறாத அந்தப் பட்டியலிலாவது சேர்த் திருக்கலாம்) மக்கள் ஆணையை மீறும் செயல் இல்லையா? விளக்கவேண்டும் கூட்டமைப்பு.

You might also like