சிரியா விட­யம் சின்­ன­தல்ல‌

சிரியா விட­யம் இன்று உல­கின் அனைத்து மக்­க­ளை­யும் பாதித்து விட்­டது என்­ப­தற்­கப்­பால், மனி­தத்தை நேசிக்­கும், சுதந்­தி­ரத்தை விசு­வ­ாசிப்­ப­வர்­களை மட்­டும் தான் அது கவலை கொள்ள வைத்­துள்­ளது, மாறாக இன அழிப்பை மேற்­கொள்­ளக் கார­ண­கர்த்­தா­வாக இருப்­போ­ருக்கு சிரிய விட­யம், சிறிய விட­ய­மா­க­வும், சிரிப்­புக்­கு­ரிய விட­ய­மா­க­ வுமே அமை­யும்.

உலக வல்­ல­ர­சு­கள் தத்­தம் ஆயுத பலத்­தைப் பரீட்­சித்­துப் பார்க்­கின்ற இட­மா­க­வும், ஆயுத சந்­தை­யைச் செயற்­கை­யாக உரு­வாக்­க­வும் பல தந்­திர மந்­திர காரி­யங்­களை அரங்­கேற்­று­வ­து­முண்டு.

எண்­ணெய்க்­கான  போராக இடம்­பெற்ற வளை­கு­டாப் போர்

வளை­கு­டாப் போர் பற்றி அறிந்­தி­ருப்­பீர்­கள்; கண்­ணுற்­றி­ருப்­பீர்­கள். அப்­போ­தைய அமெ­ரிக்க அதி­பர் ஜோர்ஜ் புஷ்­ஷின் ஆட்­சிக் காலத்­தில் பயங்­கர அணு ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தாக ஈராக் மீது குற்­றம்­சாட்டி, படை­ யெடுத்து, அந்த நாட்­டைத் துவம்­சம் செய்­தது அமெ­ரிக்கா. ஈராக்­கின் வளங்­கள் அனைத்­தை­யும் சூறை­யா­டி­யது.

அவ­தா­னிப்­பா­ளர்­கள் பலர் அது ஆயு­தத்­துக்­கான போரல்ல, எண்­ணெய்க்­கான போர் எனப் பகி­ரங்­க­மா­கவே விமர்­சித்­த­னர்.

எவ்­வாறு வல்­ல­ரசு ஆதிக்­கம், மத்­திய தரைக்­க­டல் முஸ்­லிம் நாடு­ களைத் தனது கட்­டுக்­குள்­ளும், பதற்­றத்­துக்­குள்­ளும், போர் மேகங் களுக்­குள்­ளும் வைத்­துக்­கொண்டு வரு­கி­றது என்­பது வர­லாறு.

அதன் பாணி­யில் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யம், பின்­னர் ஆப்­கா­னிஸ்­தா­னை­யும், கடா­பி­யின் நாடான லிபியா போன்ற நாடு­க­ளை­யும், பயங்­க­ர­வா­தத்­துக்­குள் தள்ளி, அதன் போர்­வை­யில் பின்­னர், தானே தனது படை­களை அனுப்பி அந்த நாடு­க­ளைத் தனது ஆளு­கைக்­குள் கொண்டு வந்­த­தும் வர­லாறு.

அவ்­வா­றா­ன­தொரு பாணி­யில் தற்­போது சிரியா எனும் விட­யத்தை அரங்­கேற்றி வரு­கின்­றன வல்­ல­ரசு ஆதிக்­கச் சக்­தி­கள்.

இந்த விட­யத்­தில் நாம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­புப் பற்­றி­யும் நோக்க வேண்­டி­யுள்­ளது. ஏனெ­னில் இந்த ஐ.எஸ். ஐ.எஸ் எனும் அமைப்பு, சிரியா மற்­றும் ஈராக் பகு­தி­களை இஸ்­லா­மிய நாடா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்தி பல வன்­செ­யல்­களை மேற்­கொண்ட அமைப்­பென்­பது ஊட­கங்­க­ளின் பார்­வை­யூ­டாக நாம் நம்­பிய உண்­மை­கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பைக்  கார­ணம் காட்­டித் தலையை நுழைத்த அமெ­ரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­பின் அட்­டூ­ழிய, பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்­காக அதன் மீது நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றோம் என்ற போர்­வை­யில், அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யம் அங்கு பெரும் படை நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கி­யமை சக­ல­ரும் அறிந்­த­தொன்று.

ஆக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­புக்­கெ­தி­ராக பொது மக்­க­ளைக் காப்­பாற்ற, மனி­தா­பி­மா­னத்­து­டன்­தான், அமெ­ரிக்கா அந்த அமைப்­புக்­கு­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தது என நாம் நம்­பிக்­கொண்­டி­ருக்­க­லாம்.

ஆனால் எம்­மில் பலர் மறு­தலை உண்­மை­களை அலசி ஆரா­யா­மல் ஊட­கங்­க­ளது பொய்­களை, உண்­மை­கள் என்று நம்பி, அர­சி­யல் புரி­வில்­லாது கடப்­பதே எமது வாழ்­வா­கி­விட்­டது.

உண்­மை­யில் இதை இன்­னும் ஆழ­மாக இப்­படி யோசித்து பாருங்­கள்.
எப்­போ­தும் மத்­திய கிழக்கு முஸ்­லிம் நாடு­களை எரி­பற்று நிலைக்­குள் வைத்­தி­ருக்­கவே அமெ­ரிக்கா விரும்­பு­கி­றது.

ஈராக். லிபியா,ஆப்­கா­னிஸ்­தான் எனப் பல அரங்­கேற்­றங்­க­ளின் பின் எவ்­வாறு அடுத்த ஆளு­கை­களை மேற்­கொள்­வது என்று சிந்­தித்­தால் அதற்­கான நிகழ்ச்சி நிர­லாக சிரி­யா­வின் ஐ.எஸ்.ஐ.எஸ்­ஸின் எழுச்சி கண்­முன் தெரி­கி­றது.

உண்­மை­யில் அந்த அமைப்­புக்கு எவ்­வாறு போர்ப் பயிற்­சி­கள் மற்­றும் நவீன ஆயு­தங்­கள் கிடைக்­கப்­பெறு ­கின்­றன என்­பது புரி­யாத புதிர்­தான்.

அதா­வது தமது ஆளு­கைக்­குள் உட்­ப­டுத்த வேண்­டிய நாட்­டில் அல்­லது தேசத்­தில் செயற்­கை­யாக பிரச்சி னைக­ளைத் தோற்­று­வித்து, அதை­யொரு சாட்­டா­கக் கொண்டு அதற்­குள் ஊடு­ரு­வு­வதே தந்­தி­ர­மான நிகழ்ச்சி நிரல்­கள்.

அதற்­காக வல்­லா­திக்­கச் சக்­தி­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட அமைப்­பா­கக் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். இருக்­க­லாம்.

அந்த அமைப்­பைக் கொண்டு பல அட்­டூ­ழி­யங்­கள், பயங்­க­ர­வாத செயல்­களை நிகழ்த்­திக்­கொண்டி ­ருக்க, அதைத் தடுக்­க­வும், பயங்­க­ர­வா­தத்தை அழிக்­க­வும், பாசத்­தோ­டும் , நேசத்­தோ­டும் ,அக்­க­றை­யோ­டும் வல்­லா­திக்­கச் சக்­தி­கள், குறித்த அந்த நாடு­க­ளுக்­குள் விமா­னத் தாக்­கு­தல்­கள் மற்­றும் பிற தாக்­கு­தல்­க­ளைத் தொடுக்­கும் அல்­லது அந்த நாடு­க­ளது கிளர்ச்­சி­யா­ளர்­கள் அல்­லது அர­சுக்கு ஆயுத, நிதி, படை உத­வி­களை முன்­வந்து வழங்­கும்.

இத­னால் அந்த நாடு­களை எப்­போ­தும் எரி­பற்று நிலை­மை­க­ளுக்­குள் வைத்­துக்­கொள்ள வல்­லா­திக்­கச் சக்­தி­க­ளால் முடி­கி­றது.

வல்­லா­திக்­கச் சக்­தி­க­ளின் ஆக்­கி­ர­மிப்­புப் பாணி அது

அவ்­வா­றா­ன­தொரு பாணி­யில் தான், பல பயங்­க­ர­வாத அமைப்­புக்­களை தனக்­குத் தேவை­யான பிராந்­தி­யங்­க­ளில் வல்­லா­திக்­கச் சக்­தி­கள் உரு­வாக்கி வைத்­துக்­கொள்­ளும்.

பின்­னர் பல கொலை­கள் நிகழ்ந்­தேற வழி வகுத்து, அதன் பின்­னர் அந்த நாடு­க­ளுக்கு மனி­தா­பி­மான உத­வி­கள், ஐ.நா பிரே­ர­ணை­கள், உணவு­ உத­வி­கள், வாழ்­வா­தார உத­வி­க­ளைச் செய்து தனது பாவங்­க­ளைக் கழு­விக்­கொள்ள முயற்­சிக்­கும்.

இப்­போது சிரியா விட­யத்­தில் சிரிய அதி­பரை பதவி வில­கக் கோரி அந்த நாட்­டுக் கிளர்ச்­சி­யா­ளர்­கள் அரச படை­க­ளு­டன் போரிட்டு வரு­கி­றார்­கள்.

கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­குச் சார்­பாக அமெ­ரிக்கா பல்­வேறு உத­வி­களை மேற்­கொண்டு வந்­தது; வரு­கி­றது.இத­னால் போர் பல பரி­ணாம வடி­வங்­க­ளைச் சந்­தித்­தது.
ஆனால் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யம் போட்ட கணக்கு தப்­பி­த­மா­கிப் போனது.

தற்­போது மீண்­டெ­ழும் மிகப்­பெ­ரும் வல்­லா­திக்­கச் சக்­தி­யும் சிறந்த ஆளு­மை­யும் கொண்ட விளா­மி­டிர் புடின் தலை­மை­யி­லான ரஷ்ய நாடு, அமெ­ரிக்­கா­வுக்­கெ­தி­ராக சிரியா அர­சுக்கு சார்­பாக சிரி­யா­வில் வான் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு­ வரு­கி­றது.

ஆக, இதனை உன்­னிப்­பா­கப் பார்த்­தால் சிரிய அரசா அல்­லது கிளர்ச்­சி­யா­ளர்­களா என்ற ஆட்­டம் என்­ப­தற்­கப்­பால், உண்­மை­யாக அமெ­ரிக்­காவா அல்­லது ரஷ்­யாவா என்ற  பனிப்­போர் தந்­தி­ர­மாக அமைந்­துள்­ளது சிரிய விவ­கா­ரம்.

அதில் உண்­மை­யில் பற்­றி­யெ­றி­வது என்­னவோ சிரி­யா­வும், அதன் மக்­க­ளும், வளங்­க­ளு­மே­யா­கும்.

அங்கு இடை­வி­டாத போரால் பச்­சி­ளம் குழந்­தை­கள், பெண்­கள் , வயோ­தி­பர்­கள் எனப் பல பொது­மக்­கள் கொல்­லப்­ப­டு­கி­றார்­கள். உண்­மை­யில் குழந்­தை­கள் கொல்­லப்­ப­டும் வீதமே அங்கு அதி­க­மா­க­வுள்­ளது.

சிரி­யப் போரும் கூட  எண்­ணெய்­கான  அதி­கா­ரப் போட்­டி­யின்  ஒரு அங்­கமே

சிரியா ஒரு முஸ்­லிம் நாடு. அங்கு அழிந்­து­கொண்­டி­ருப்­பது இஸ்­லாத்தை பின்­பற்­றும் முஸ்­லிம்­கள் தான்.

மத்­திய தரைக்­க­ட­லில் அமைந்­துள்ள மத்­தி­ய­கி­ழக்­கா­சிய நாடு­கள் எல்­லா­முமே முஸ்­லிம் நாடு­கள்­தான். எண்ணை வளத்­தைக் கொண்­டுள்ள நாடு­கள் அவை.
அந்த நாடு­கள் அனைத்­தும் ஒற்­று­மை­யாக, ஓர­ணி­யாக, ஒரு குடை­யின் கீழ் செயற்­பட்­டால், எந்­த­வொரு வல்­லா­திக்­கச் சக்­தி­யா­லும் அந்த நாடு­க­ளில் ஒன்­றை­யே­னும் சீண்ட முடி­யாது என்­பதே உண்மை.

ஆனால், இன்று இஸ்­லா­மிய நாடு­கள் பல சூறை­யா­டப்­பட்டு பற்­றி­யெ­ரி­கின்­றன. இதற்கு பைபிள், குர் ஆன் மற்­றும் யூத மத நூல்­க­ளில் விடை தேடி­னால் கிடைக்­கும். அவை குறித்து வர­லாற்­றுப் பதி­வு­கள் பல­வுள.

அன்று ஹிட்­லர் எனும் ஆளு­மை­யால் யூதர்­கள் அழித்­தொ­ழிக்­கப்­பட்ட போது, உத­வி­பு­ரிந்த அமெ­ரிக்கா, அதே யூதர்­கள் இன்று வளர்ந்து இஸ்­ரேலை உரு­வாக்­கி­ய­போது, அதை நட்பு நாடாக்­கிக் கொண்­டுள்­ளது.

இஸ்­ரே­லின் எதிரி நாடு சவுதி அரே­பியா. அதை­யும் அமெ­ரிக்கா நட்பு நாடாக்­கிக் கொண்­டுள்­ளது. இது தான் பூகோள உலக ராஜ­தந்­திர அர­சி­யல்.

ஆனால் இதில் சோகம் என்ன­வெனில், உல­கில் ஒரு யூதன் எந்த நாட்­டில் கொல்­லப்­பட்­டா­லும், இஸ்­ரேல் அவ­னுக்­காக முன்­னிற்­கும் . ஆனால் உல­கில் ஒரு முஸ்­லிம் தேசமே பற்­றி­யெ­ரி­யும்­போது, மற்­றைய முஸ்­லிம் நாடு­கள் வேடிக்கை பார்க்­கவே செய்­கின்­றன.

You might also like