மக்­களை ஏமாற்­று­வ­தற்கு பெயர்­தான் இரா­ஜ­தந்­தி­ரமா?

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லு­டன் எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யும் செய்­து­கொள்­ள­வே­யில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

“ரணி­லு­டன் கூட்­ட­மைப்­புப் பேசி­யது. அதில் முக்­கி­ய­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய 10 விட­யங்­களை அவ­ரி­டம் முன்­வைத்­தது. அவற்றை நிறை­வேற்­று­வ­தாக அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால் இது தொடர்­பாக அவ­ரு­டன் நாம் (கூட்­ட­மைப்பு) எந்­த­வொரு எழுத்­து­மூல உடன்­ப­டிக்­கை­யை­யும் செய்­து­கொள்­ள­வில்லை” என்­கி­றார் சுமந்­தி­ரன்.

ஆனால் ஏப்­ரல் மாதம் 4ஆம் திகதி நடை­பெற்ற கூட்­ட­மைப்­பின் கோரிக்­கைகளை ஏற்று தலைமை அமைச்­ச­ரின் கடி­தத் தலைப்­பில் ரணில் ஒப்­ப­ மிட்­டார் என்று கூறப்­பட்ட ஆவ­ணம், எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னால் அன்­றைய கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் காண்­பிக்­கப்­பட்­டது.

அந்த ஆவ­ ணத்­தின் பிரதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்­லை­யா­யி­னும் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த ஆவ­ணத்­தைத் தொட்­டு­ணர்ந்து தமது புறக்கண்களாய் நேரில் காணும் வகை­யில் அவர்­க­ளின் கைக­ளில் வழங்­கப்­பட்­டது.

அதன் பின்­னரே ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கான முடிவை ஒரு சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அரை மன­தா­க­வா­வது ஏற்­றுக்­கொண்­டார்­கள். அதற்கு முதல் நாளில் அந்த முடி­வைக் கடு­மை­யாக எதிர்த்­த­வர்­கள் அவர்­கள்.

அந்­தக் கூட்­டத்துக்கு உரிய நேரத்துக்கு வருகை தராத நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்த விட­யம், அதா­வது ரணி­லின் ஆவ­ணத்­தைத் தாம் தொட்­டு­ணர்ந்து கண்­ணா­ரக் கண்ட காட்­சியை கூட்­டத்­தில் இருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எடுத்து விளக்­கி­யும் இருந்­தார்­கள்.

இருந்­தா­லும் ரணில் அத்­த­கைய உடன்­ப­டிக்கை எத­னை­யும் செய்­து­கொள்­ள­வில்லை என்று ஆணித்­த­ர­மா­கப் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்திருக் கிறார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன். அவ­ரது இந்­தக் கூற்று எழுப்­பும் கேள்­வி­களோ பல.

ரணில் ஒப்­ப­மிட்­டார் என்று கூறி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்குக் காட்­டப்­பட்ட ஆவ­ணம் என்ன? கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­களை ஏற்று அவற்றை நிறை­வேற்­று­வேன் என்று கூறும் ஆவ­ணம் என்று அதனை எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் கூறி­யமை பொய்யா?

அல்­லது உண்­மை­யி­லேயே ரணில் அத்­த­கைய ஆவ­ணம் ஒன்­றைக் கைய­ளிக்­காத நிலை­யில், போலி­யான ஆவ­ணம் ஒன்று தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குக் காண்­பிக்­கப்­பட்­டதா?

அந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 13 பேரில் 10 பேர் ஏமாற்­றப்­பட்­டார்­களா? கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கச் செய்­வ­தற்­காக இத்­த­கைய நாட­கம் ஒன்று திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­பட்­டதா?

அப்­ப­டி­யா­னால் அதன் சூத்­தி­ர­தாரி யார்? எந்த நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் அல்­லது இர­க­சிய உடன்­ப­டிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஏமாற்­றப்­பட்­டார்­கள்? மக்­கள் பிர­தி­நி­தி­களை ஏமாற்­று ­வது அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளையே ஏமாற்­று­வ­தா­காதா?

இந்­தக் கேள்­வி­க­ளில் ஒன்­றைக்­கூ­டப் புற­மொ­துக்­கி­வி­ட­மு­டி­யாது. ஏனெ­னில் ரணி­லின் கையெ­ழுத்­து­டன் தமக்கு ஒரு ஆவ­ணம் காட்­டப்­பட்­டது என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் அடித்­துச் சத்­தி­யம் செய்­கி­றார்­கள். ஆக, முழுப் பூச­ணிக்­காயை சோற்­றுக்­குள் மறைப்­ப­வர்­கள் யார் என்­ப­தைத்­தான் கண்­ட­றிந்­தா­க­வேண்­டும்.

அது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களா? சுமந்­தி­ரனா?
கூட்­ட­மைப்­புக்கு ரணில் வாக்­கு­றுதி வழங்­கி­விட்­டார் என்­கிற செய்தி வெளி­யா­கி­ய­துமே, தமி­ழீ­ழத்­தைப் பிரித்­துக்­கொ­டுக்க ரணில் இணங்­கி­விட்­டார் என்று தெற்­கில் பரப்­புரை செய்ய ஆரம்­பித்­து­விட்­டார்­கள், இத்­த­கைய சிக்­கல்­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே சுமந்­தி­ரன் அப்­ப­டி­யொரு ஒப்­பந்­தமே இல்லை என்று சொல்­லி­யி­ருக்­கக்­கூ­டும் என்­றும் ஒரு நியா­யம் சொல்­லப்­ப­டு­கி­றது.

அப்­ப­டியே வைத்­துக்­கொண்­டா­லும், 2015ஆம் ஆண்­டில் அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­யும்­போ­தும் கூட்டு அரசை ஏற்­ப­டுத்­தும் போதும் இது­போன்­று­தானே நியா­யம் சொல்லி எந்­த­வொரு எழுத்­து­மூல ஒப்­பந்­தத்­தை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிரா­க­ரித்­தது.

அப்­ப­டிப் பொத்­திப் பொத்­திப் பாது­காத்து உரு­வாக்­கிய இந்த அர­சின் தலை­வர்­க­ளான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் தமி­ழர்­க­ளுக்கு என்ன செய்­து­விட்­டார்­கள்?

குறைந்­த­பட்­சம் தீர்­வில் எந்­த­ள­வுக்கு அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டப்­போ­கின்­றன என்­ப­தைக்­கூட தீர்­மா­னிக்க முடி­யா­த­வர்­க­ளா­கத்­தானே நிற்­கி­றார்­கள். போர்க்­குற்ற விசா­ர­ணையை நடத்த முடி­யா­த­வர்­க­ளாக, போர்க்­குற்­ற­வா­ளி­க­ளைப் பாது­காக்­கும் நாய­கர்­க­ளா­கத்­தானே நிற்­கி­றார்­கள்.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது இப்­போ­தும் அவர்­க­ளின் பாது­காப்­புக்­காக, தேவைக்­காக, நல­னுக்­காக தமி­ழர்­க­ளு­ட­னான உடன்­ப­டிக்­கையை மறைப்­பது தமி­ழர்­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு உத­வப்­போ­வ­தில்லை.

தமி­ழர்­க­ளுக்கு அர­சி­யல் தீர்வு ஒன்­றைத் தரு­வ­தற்­கான செய்­மு­றையை மீள ஆரம்­பித்­துத் துரி­தப்­ப­டுத்­து­வேன் என்­ப­தையே சிங்­கள மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­லத் தைரி­ய­மில்­லாத, அத­னால் வரும் எதிர்ப்­பைச் சரி­வ­ரக் கையாண்டு சிங்­கள மக்­களை தன்­வ­சப்­ப­டுத்த முடி­யாத ஒரு தலைமை, தலை­வர் எப்­படி உச்ச அதி­கா­ரங்­க­ளைத் தமி­ழர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்டு அதற்­குச் சிங்­கள மக்­க­ளின் ஆத­ர­வை­யும் பெறு­வார் என்று எதிர்­பார்ப்­பது? அத்­த­கைய எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில் அவ­ரைக் காப்­பாற்ற முயற்­சிப்­பது நியா­யமா?

இதில் எது­வாக இருந்­தா­லும் ஒன்று மட்­டும் நிச்­ச­யம். கூட்­ட­மைப்­பின் இரு தரப்­பி­ன­ரில் ஒரு­வர் வாக்­க­ளித்த மக்­களை ஏமாற்­று­கி­றார்­கள். இவர்­கள் இது­வ­ரை­யில் சொல்லி வந்த இரா­ஜ­தந்­தி­ரம் என்­பது இப்­படி மக்­களை ஏமாற்­று­வ­து­தானா?

You might also like