வலி.வடக்குக் காணிகளின் விடுவிப்பில் திடீர் மாற்றம்!!

வலி.வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என்று தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து அறியமுடி கின்றது.

தமிழ், சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க, நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார். வறுதலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் பொ.சுரேஷ் பங்கேற்றிருந்தார். எதிர்வரும் 16ஆம் திகதி வலி.வடக்கில் 650 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், வலி.வடக்கில் 16ஆம் திகதி 500 ஏக்கரே விடுவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனால் காணி விடுவிப்புத் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், 16ஆம் திகதி விடுவிக்கப்படும் என்று கூறப்பட்ட காணிகளை 13ஆம் திகதி விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர்.

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தென்மயிலை, தையிட்டி கிழக்கு, மயிலிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் நிலப் பரப்பு விடுவிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொள்ளவுள்ளார்.

You might also like