சந்தேகநபர் தப்பியோட்டம் – பொலிஸார் பணி இடைநிறுத்தம்!!

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோடியதை அடுத்து, பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் இருவர் உடனடியாக பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலி திருடப்பட்டமை தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்று, நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பாதுகாப்பில் வைத்திருந்தனர். சந்தேக நபர் தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பொலிஸாரிடம் கூறிவிட்டு, நேற்று அதிகாலை 5 மணியளவில் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் குறித்த சந்தேக நபரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகக் கடமையில் நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உடனடியாக கடமையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டனர்.

தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர். அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏறாவூர் தாமோதரம் வீதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like