பன்­னாட்டு அழுத்­தம்; அது அவ­சி­ய­மும்­கூட

கூட்டு அர­சில் ஏற்­பட்­டுள்ள குழப்­பங்­கள் கார­ண­மாக அர­சி­யல் தீர்­வில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை குறித்து பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு எடுத்­துக்­கூறி அதன் உத­வியை நாடு­வ­தற்கு மீண்­டு­மொரு தடவை முன்­வந்­துள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அரசு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டு­வந்த போதி­லும் அதன் நகர்­வு­கள் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்று வந்­தன.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பான முயற்­சி­கள் முழு­வ­து­மா­கத் தேங்­கிப் போய்­விட்­டன. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரா­கக் கொண்­டு­வந்த நம்­பிக்கை இல்­லாத் தீர்­மா­னம் தோற்­க­டிக்­கப்­பட்டு கூட்டு அர­சின் ஆயுட்­கா­லம் நீடிக்­கப்­பட்ட போதி­லும், இனி­வ­ரும் காலங்­க­ளில் இந்த அர­சில் ஆத்­மார்த்­த­மான உறவு இருக்­குமா என்­றால் அது சந்­தே­கமே.

அத்­த­கைய உறவு இல்­லா­த­போது என்ன அடிப்­ப­டை­யில் அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்ந்து நடை­பெ­றப் போகி­றது?. ஆக, தேக்­க­நிலை கண்­டுள்ள அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் மீண்­டும் புத்­து­யிர் பெறாது என்று ஓர­வுக்­கே­னும் அழுத்­தம் திருத்­த­மா­கச் சொல்­லி­வி­ட­லாம். இத்­த­கைய பின்­ன­ணி­யில் தீர்வு விட­யத்­தில் பன்­னாட்டு அழுத்­தம் அவ­சி­யம் என்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது.

பன்­னாட்டு அழுத்­தம் கொடுப்­ப­தன்­மூ­லம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால், தமி­ழர்­க­ளின் அபி­லா­சை­கள், கோரிக்­கை­கள் என்ற இலக்குகளை அடைந்­து­விட முடி­யுமா என்ற கேள்வி எழு­வது இங்கு தவிர்க்க இய­லா­த­தா­கி­றது.

ஏனெ­னில் இதற்கு முன்­னர் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் கொழும்­பின் மீது தாரா­ள­மா­கவே முன்வைக்­கப்­பட்­டுள் ளது. இதற்கு ஆகச் சிறந்த எடுத்­துக்­காட்டு, ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் கடந்த வரு­டக் கூட்­டத்­தொ­டர்.

சுவிற்­சர்­லாந்­தின் ஜெனீவா நக­ரில் கடந்த வரு­டம் மார்ச் மாதம் நடை­பெற்ற இந்­தக் கூட்­டத் தொட­ரில், இலங்­கை­யில் இடம்­பெற்­ற­தா­கச் கூறப்படும் போர்க் குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரிக்க வேண்­டும், அது தொடர்­பான நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி இலங்­கைக்கு இரண்டு வரு­ட­கால அவ­கா­சம் வழங்­கி­யது ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை.

ஆனால், ‘நல்­லாட்சி அரசு’ என்று தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக் கொண்­டுள்ள கூட்­டு­அ­ரசு, அது தொடர்­பில் எந்­த­வி­த­மான நகர்­வு­க­ளை­யும் எடுக்­கா­ம­லேயே அண்­மை­யில் நடை­பெற்ற மற்­றொரு கூட்­டத் தொடரை எதிர்­கொண்­டது.

ஆக, பன்­னாட்­டுக்கு இலங்கை பணி­யுமா என்ற கேள்­விக்கு இங்கு விடை கிடைக்­கி­றது. எனி­னும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தா­லேயே தமி­ழர் தாய­கத்­தின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முடி­யும் என்­பது யதார்த்தம்.

இலங்­கை­யில் மட்­டு­மல்ல மியன்­மார், இந்­தியா, பாகிஸ்­தான், பங்­க­ளா­தேஷ், ஆப்­கா­னிஸ்­தான், சீனா, ஏமன், சூடான், சோமா­லியா, எத்­தி­யோப்­பியா, சிரியா, லிபியா, ஈராக், ஈரான், பலஸ்­தீ­னம், இஸ்­ரேல், கொசோவோ என்று ஏகப்­பட்ட நாடு­க­ளில் வாழும் ஒரு குறிப்­பிட்ட மக்­கள் கூட்­டத்­தி­னர், தத்­த­மது அரசியல் விடி­வுக்­கும், விடு­த­லைக்­கும், சுய­நிர்­ணய வாழ்­வுக்­கும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தத்­தை­யும் நேர­டித் தலை­யீட்­டை­யும் எதிர்­பார்த்­துக் காத்­துள்­ளனர்.

ஆக, ஐ.நா. உள்­ளிட்ட பன்­னாட்டு அமைப்­புக்­கள் வெறும் கண்­டன அறிக்­கை­க­ளு­ட­னும், சட்ட ஆலோ­ச­னை­க­ளு­ட­னும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­க­ளை­யும் கடந்து செல்­லாது நடை­மு­றைச் சாத்­தி­யங்­க­ளைப் பரி­சீ­லிக்க வேண்­டும்; தீர்வை வழங்க வேண்­டும்.

அதுவே மேற்­போந்த நாடு­க­ளில் வாழு­கின்ற சிறு­பான்மை மக்­க­ளி­னது எதிர்­பார்ப்­பா­கும்; தமி­ழர் தாய­கத்­தி­ன­தும்­கூட.

You might also like