பெறுமதிமிக்க யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீர்மானம்!!

யாழ். மாநகர சபைக்கு உறுப்பினர்கள் தெரிவாகிய கையோடு தியாகத்தின் இமயம் திலீபனின் நல்லூர்த் தூபியை புனரமைக்க முன்வந்த மாநகர முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், ஆணையாளருக்கும் பாராட்டுக்கள்.

மேலும் அந்தத் தூபியை இடித்து வீழ்த்திய ஈனர்களின் செயற்பாட்டை வௌிப்படுத்தும் வண்ணம் உடைந்து எஞ்சியிருக்கும் தூணின் எச்சம் அப்படியே இருக்கத்தக்கதாக அதன் அருகிலேயே புதிய தூபியை அமைப்பது சாலச்சிறந்தது.

தேச விடுதலைக்காக உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈகச் சாவடைந்த ஐரிஸ் போராளி ஒருவரின் பெயர் உலக வரலாற்றில் இருக்கிறது. ஆயினும் ஒரு துளி நீர்கூட அருந்தாமல் தன்னுயிரை எமக்காக தியாகத் தீயில் உருக்கி உயிர்துறந்தவர் எங்கள் திலீபன் மட்டும் தான்.

இப்படியானதொரு தியாகத்தை இன்றைய சிறார்களும், வருங்கால சந்ததியினரும் மற்றும் உள்நாட்டு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் தியாகி திலீபனின் உருவப்படத்தையும் அதனுடன் சேர்த்து அவர் குறித்த விபரங்களையும் அவர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டமைக்கான காரணங்களையும் கருங்கல்லில் மும்மொழிகளிலும் பொறித்து வைத்தல் அவசியமாகும்.

அத்துடன் அந்த இடத்தில் அழகுத் தாவரங்கள், நீர் பாயும் ஊற்று (Fountain ) மற்றும் சுற்றிவர இரும்புக் கம்பி வேலியமைத்து இரவில் மின் ஔி பாய்ச்சிப் பேணி வருதல் சிறப்பாக இருக்கும்.

மேலும் தியாகி திலீபனின் நினைவு நாள்கள், மாவீரர் நாள்களில் மட்டுமல்லாது, தினமும் அவ்விடத்தை ஒரு வணக்கத்திற்குரிய தூய இடமாக பராமரித்து வர யாழ். மாநகர சபையினரும், அச்சுற்றாடலில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களது உரிமையாளர்களும், ஏனையோரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மா. பிறேமா
ஊரெழு

You might also like