பறவைகளின் வினோதச் செயல்கள்

பறவைகள் தங்களின் இருப்பிடத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும், தன் இணைப் பறவைக்குத் தெரிவித்து அவற்றை கவர்ந்திழுக்கவும் அவை ஏற்படுத்துகின்ற இனிய ஓசைதான் பறவைகளின் பாட்டு என்று வழங்கப்படுகிறது.

அவை தங்கள் தொண்டையில் இருகின்ற ஸைரின்க்ஸ் (syrinx) எனும் உறுப்பின் உதவியுடன்தான் பாடுகின்றன. தனித்துவமான இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டும்தான் உள்ளது.

பறவைகள் சில சமயம் வித்தியாசமாகக் குரல் எழுப்பும். அதில் உணவு வேண்டி பறவைக் குஞ்சுகள் கொடுக்கும் குரலும், அபாய எச்சரிக்கை செய்வதற்காக எழுப்புகின்ற குரலும் வழக்கமான குரலைவிட சற்று வித்தியாசமாக இருக்கும்.

பறவைகளில் ஆண், பெண் வித்தியாசத்தை மிகப் பொதுவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கலாம். தன் வண்ணத் தோகையை விரித்து அழகாக நடனமாடுபவை ஆண் மயில்கள்.

பல நிறங்களுடைய இறகுகளும் கொண்டையுமுடைய சேவல்தான் பெட்டைக் கோழியைவிட அழகாக இருககிறது.

பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சிலவகைப் பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ, அல்லது இளம் நிறமுடையதாகவோ இருக்கும்.

புறாக்கள், ஆந்தைகள், மரம் கொத்திகள், மீன் கொத்திகள் ஆகியவற்றின் முட்டைகள் இவ்வகையைச் சேர்ந்தவை.

இப் பறவைகள், பொந்துகளிலோ மரக் கிளைகளிலோ கூடு கட்டி முட்டையிடுகின்றன. எனவே எதிரிகளால் அவ்வளவு விரைவாக கூட்டில் உள்ள முட்டைகளைக் கவர்ந்துவிட முடியாது.

எனவே, இப் பறவைகளின் முட்டைகளின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் நிறம் அவ்வளவு முக்கியமானதல்ல என்று சொல்லலாம்.

வேறு சில பறவைகளின் முட்டைகள் அடர்ந்த நிறமுடையதாகவோ, புள்ளிகளுடையதாகவோ இருக்கும்.இவ்வகையான முட்டைகள் தரையிலோ, திறந்த வெளிகளிலோ பொரிக்க வேண்டியவையாக இருக்கும்.

எனவேதான் இவை சுற்றுச்சூழலிருந்து எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடர்ந்த நிறங்களுடனோ, புள்ளிகளுடனோ இருக்கின்றன. எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்குதான் இந்த ஏற்பாடு.

விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலவகைப் பறவைகள் மட்டுமே முட்டைகளின்மீது அமர்ந்து அடைகாப்பதில்லை.

கரு வளரும் சமயத்தில் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் நோக்கில்தான் பறவைகள் தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன.

ஆனால் சில இடங்களில் பறவைகள் அடைகாக்காமலேயே தங்கள் முட்டைகளின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கின்றன.

ஆஸ்திரேலியா, நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள ‘Scrub fowl’ எனும் ஒருவகைப் பறவைகள் புற்களையும், இலைகளையும், சிறிய செடிகளையும், மண் துகள்களையும் ஒன்று சேர்த்து பதினைந்தடி உயரமும் முப்பத்தைந்தடி பரப்பளவும் உள்ள ஒரு வகையான குவியலை உருவாக்குகின்றன.

சில சமயம் பல பறவைகள் சேர்ந்து தங்களுக்கான ஒரே குவியலை உருவாக்கின்றன. பிறகு குவியலில் மூன்றடி நீளமுள்ள சிறு சுரங்கங்களை உருவாக்கி அதனுள் முட்டையிடுகின்றன.

அந்த தாவரக் குவியலிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் முட்டைகள் பொரிகின்றன. வேறொரு வகை பறவையான ‘mallee fowl’ இலைகளுக்குப் பதிலாக மண்ணைப் பயன்படுத்தி குவியல் அமைக்கின்றன.

தங்கள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்காத சில பறவைகள் உள்ளன. மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு அவை பறந்துவிடும்.

அந்தக் கூட்டில் வசிக்கும் பறவை அது தன் முட்டைதான் என்று தவறாகக் கருதிக்கொண்டு அந்த முட்டையையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். வெளிவந்த குஞ்சை தன் சொந்தக் குஞ்சுபோல வளர்க்கும். காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயில் (indian cucoo) இதற்கு ஒரு உதரணம்.

தங்கள் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கும், ஒரு அளவு வரை இறகுகளின் ஈரம் சேராதிருக்கவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன.

இப்படி இறகுகளைத் தூய்மையாக வைத்திருப்பதனால் அவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இறகுகள் வளரத் தொடங்கும்போதே பறவைக் குஞ்சுகள் கோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றன. சிறுவயதில் இதற்காக நிறைய நேரம் செலவிடுகின்றன பறவைகள்.

முதிர்ந்த பறவைகள் இந்தப் பழக்கத்தை கடைசிவரை தொடர்கின்றன. அவற்றின் உடலின் பின் முனையில் வாலுக்குச் சற்று மேலுள்ள எண்ணெய்ச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் கொத்தியெடுத்து இறகுகளில் தடவிக் கொள்கின்றன.

இந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பு இறகுகளில் திடிரென்று நீர் சேராமலும், இறகுகளின் மென்மையையும் காக்கிறது. இறகுகளின் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

இறகுகளைக் கோதிக்கொள்வதுடன் இவை மண்ணில் புரளவோ அல்லது தண்ணீரில் குளிக்கவோ செய்கின்றன.

வாத்துக்கள் தலையைத் தண்ணீரில் மூழ்க விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு சிறகு விரித்து உடம்பை உதரிக் கொள்கின்றன.

முதுகைச் சொறிந்து கொள்ளவேண்டும் என்று தோன்றும்போது, நமக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதல்லவா.

அதைப் போல பறவைகளுக்கும் தங்கள் உடலில் அலகு எட்டாத இடத்தில் எண்ணெய்த் தேய்ப்பதற்கு இணைப் பறவையின் உதவியை நாடுகின்றன.

You might also like