சாக்குப் பையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்!!

ஹரியாணா மாநிலம், ரோடக் நகரில் 9 வயது சிறுமியின் உடல் சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஓடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் ஒரு கை துண்டிக்கப்பட்டது இருந்தது. சிறுமி இறந்து 5 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று பொலிஸா் தெரிவித்தனர்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட சோகம் மறைவதற்குள் குஜராத்தின் சூரத் நகரில் 86 காயங்களுடன் 11 வயது சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஹரியாணா ரோடக்கில் 9 வயது சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

”ரோடக் நகரின் புறநகரான தித்தோத் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதாக மக்கள் தகவல் வழங்கினர். அந்தச் சாக்கு மூட்டையைத் தூக்கி, பிரித்த போது, அதில் 9 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் உடல் அதில் இருந்தது. சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால், கொல்லப்பட்டு, சாக்குப்பையில் தூக்கி வீசப்பட்டு இருக்கலாம்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பின்னர் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்துக்கூற முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like