வாக்­கு­று­தி­களை எப்­போது நிறை­வேற்­று­வார்­கள்?

தேர்­த­லின்­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சித்­தி­ரைப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம் கடந்த சனிக்­கி­ழமை அரச தலை­வர் மாளி­கை­யில் நடை­பெற்­ற­போது இந்­தக் கருத்­துப் பரி­மா­றல் நடந்­துள்­ளது.

அவர்­கள் இரு­வ­ரும் பேசிய விட­யங்­கள் தொடர்­பில் விரி­வான, விளக்­க­மான தக­வல்­களை எதிர்க் கட்­சித் தலை­வர் வெளி­யிட வில்லை என்­றா­லும் , புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வது தொடர்­பி­லேயே அவர்­க­ளது உரை­யா­டல் முக்­கி­ய­மாக அமைந்­தி­ருந்­தி­ருக்­கும் என்­பது ஊகிப்­ப­தற்­குக் கடி­ன­மான தல்ல. ஏனெ­னில், நாட்­டின் தேசி­யப் பிரச்­சி­னை­யான இனப் பிரச்சி னைக்கு நியா­ய­மான தீர்வு காணப்­ப­டும் என்­ப­தும் தேர்­தல் காலத்­தில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளில் ஒன்று. அப்ப டிப்­பட்ட ஒரு தீர்வை புதிய அர­ச­மைப்பு ஊடா­கவே காண முடி யும் என்­கிற குறைந்­த­பட்­ச சாத்­தி­யம் இருப்­ப­தால், இரு­வ­ரும் அது பற்றி நிச்­ச­யம் கலந்­து­ரை­யாடி இருப்­பார்­கள்.

அதி­லும், உள்­ளு­ராட்­சிச் சபைத் தேர்­தல்­க­ளுக்­குப் பின்­ன­ரான அர­சி­யல் களச் சூழ­லில் முடங்கி, மூலைக்­குத் தள்­ளுப்­பட்டு விட்ட புதிய அர­ச­மைப்பு முயற்­சியை மீண்­டும் பழை­ய­படி சரி­யான தடத்­துக்­குக் கொண்டு வர­வேண்­டிய தேவை சம்­பந்­த­ருக்கு இருக்­கின்­றது. அவர் சார்ந்த கட்­சி­யின் அர­சிய லுக்­கும், அவ­ரது தனிப்­பட்ட அர­சி­ய­லுக்­கும்­கூட அது மிக­வும் முக்­கி­ய­மா­னது.

என­வே­தான் நிறை­வேற்­று­வேன் என்று சம்­பந்­த­ருக்கு மைத்­தி­ரி­பால வழங்­கிய வாக்­கு­று­தி­யில் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­களை மீண்­டும் சரி­யான தடத்­தில் பய ணிக்க வைப்­ப­தும் ஒன்­றாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­க­லாம். கொழும்­பின் அர­சி­யல் கள­நி­ல­வ­ரத்துக்குள் அந்த வாக்­கு­று­தியை அவர் நிறை­வேற்­று­வது சாத்­தி­யம்­தானா? அல்­லது எப்­போ­து­தான் அந்த வாக்­கு­று­தியை அவர் நிறை­வேற்­று­வார்?

பதில் சொல்­வ­தற்­குக் கடி­ன­மான கேள்­வி­கள் இவை. ஏனெ­னில் உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தல் மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மான முயற்சி என்­ப­வற்­றுக்­குப் பின்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எண்­ணிக்கை மிக மெலிந்­து­விட்­டது. ஆரம்­பத்­தில் 95ஆக இருந்த அந்த எண்­ணிக்கை , மகிந்­த­வு­டன் 54 பேர் சென்­று­விட்­ட­த­னால் 41ஆகக் குறைந்­தி­ருந்­தது.

ரணி­லுக்கு எதி­ரான தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­தன் மூலம் மேலும் 16 பேரும் சு.கட்­சி­யில் இருந்து வில­கிச் சென்­று­வி­டும் சூழல் இருக்­கை­யில், கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் தனது பிடியை, கிட்­டத்­தட்ட முற்­றி­லு­மா­கத் தளர விட்­டி­ருக்­கி­றார் அரச தலை­வர்.

மறு­பு­றத்­தில், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைத் தோற்­க­டித்து நாடா­ளு­மன்­றத்­தில் தனது பத­வி­யைத் தக்க வைத்­துக் கொண்­டா­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள் தலை­மைப் பத வியை இழக்­கும் ஆபத்­தோ­டு­தான் தொடர்ந்­தும் பய­ணிக்­கி­றார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

மொத்­தத்­தில், இரு தலை­வர்­க­ளுமே தத்­த­மது கட்­சி­க­ளுக்­குள் உறு­தி­யான, தெளி­வான, தீர்க்­க­மான பிடி­யைக் கொண்டிருக்­கா­த­ நிலையில், புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யின் சரி­யான தடத் துக்கு இந்த இரு கட்­சி­க­ளை­யும் திருப்­பிக் கொண்­டு­வ­ரு­வது கடும் சவால் நிறைந்­தது.

இரு தலை­வர்­க­ளுமே உளச்­சுத்­தி­யோடு விரும்­பி­னா­லும்­கூட, அர­சி­யல் களச் சூழ்­நி­லை­கள் அவர்­க­ளுக்­குச் சாத­மாக இருப்ப து போ­லத் தோன்­ற­வில்லை. அடுத்­த­டுத்து தேர்­தல்­க­ளும் வர­வி­ருக்­கும் நிலை­யி­லும், அதற்­கா­கத் தேர்­தல்­கள் சட்ட மறு­சீ­ர­மைப்­பு­களை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ர­வேண்டியிருக்­கும் சூழ்­நி­லை­யி­லும், புதிய அர­ச­மைப்பு மீது மீண்­டும் முக்­கிய கட்­சி­க­ளின் கவ­னத்­தைத் திசை திருப்­பு­வது கல்­லில் நார் உரிப்­ப­தற்­குச் சம­மா­னதே!

என­வே­தான் , அரச தலை­வர் கூறி­ய­து­போல அவ­ர் வழங்­கிய வாக்­கு­று­தியை அவ­ரது பத­விக் காலத்துக்குள் அவரால் நிறை­வேற்ற முடி­யுமா? என்­கிற கேள்வி எழு­கி­றது. எனி­னும், எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் எப்­போ­துமே கூறு­வ­தைப் போன்று ‘‘இந்த வர­லாற்­றுச் சந்­தர்ப்­பத்தை’’ தவ­ற­வி­டா­மல் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்கு வெறும் வார்த்­தை­க­ளில் இல்­லா­மல், உளச்­சுத்­தி­யோடு அரச தலை­வர் முயற்­சிக்­க­வேண்­டும் என்­பதே சிறு­பான்மை மக்­கள் அனை­வ­ரி­ன­தும் விருப்­பும் எதிர்­பார்ப்­பும்.

You might also like