கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை

அன்பே அரண்! தன்னிலை உயர்த்து!

ஒரு குருவும் அவரது சீடரும் குளக்கரையில் அமர்ந்திருந்தார்கள். சீடன் குருவிடம் அன்பினைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டார். குருவும் நிதானமாக பதில் அளித்தார். சீடன், “”குருவே… அன்பில் சுயநலமிக்க அன்பு, சுயநலமற்ற அன்பு என உண்டா?” என்று கேட்டார். குருவும், சீடனுக்கு பதிலை விளக்க அவரை அழைத்து கொண்டு அருகிலே தூண்டிலோடு இருந்த இளைஞரிடம் சென்றார். அங்கே கூடையில் அவன் பிடித்து வைத்திருந்த மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. குரு அந்த இளைஞனிடம், “தம்பி! மீன் உனக்கு பிடிக்குமா?” என்றார். இளைஞனும் “ஆமாம் ஐயா… மீன் என்றால் எனக்கு உயிர். எனக்கு மிகவும் பிடிக்கும். பிடித்து வைத்த இந்த மீன்களை எல்லாம் நன்கு சமைத்து ருசித்து சாப்பிடப் போகிறேன்” என்றார்.


அதே நேரத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் குளக்கரைக்கு வந்தார். அவர் கையில் இருந்த பையில் மீன்கள் விரும்பி உண்ணும் பொரி இருந்தது. கையில் இருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிவந்து பொரியினை தங்களுக்கு இரையாக்கின. குரு அப்பெரியவரிடமும், “பெரியவரே! மீன் உங்களுக்கு பிடிக்குமா?” என்றார். பெரியவரும், “ஆமாம் ஐயா… மீன் என்றால் எனக்கு உயிர்; அதனால் தான் தினமும் இங்கு வந்து மீன்களுக்கு உணவு அளிக்கிறேன்” என்றார். 


இப்போது குரு சீடனிடம், “”பார்த்தாயா! இருவரும் மீன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த இளைஞன் தனது பசியாற்ற மீன்கள் மீது அன்பு செலுத்துகிறான். அது சுயநலமிக்க அன்பு. ஆனால், இந்த பெரியவரோ, மீன்களின் பசியாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்வோடு உணவு அளிக்கிறார். இது சுயநலமற்ற அன்பு” என்றார்.

அன்பானது மனதினில் உருவாகின்ற அற்புதமான உணர்வு. ஓர் ஆழமான உணர்வு.
சுயநலமில்லாத அன்புதான் இரக்கம். அது மனிதத்தில் உருவாகின்ற ஆழமான உணர்வு. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற மகான் வள்ளலாரின் உணர்வு; காற்றில் வளைந்து, நெளிந்து, ஒரு பிடிப்புக்காக ஏங்கிய முல்லைக்கொடிக்கு தான் சென்ற தேரினைக் கொடுக்கும் பாரியின் உணர்வு; தன் தோகை விரித்தாடும் ஆடும் மயிலினைக் கண்டு, தன்னைப்போல் குளிரில் நடுங்குகிறதோ என உள்ளம் சிலிர்த்து, தான் போர்த்தியிருந்த போர்வையைப் போர்த்தும் பேகனின் உணர்வு; துரத்தி வந்த பருந்திற்காக, தனது தொடையின் தசையினைத் தருகின்ற மன்னன் சிபியின் உணர்வு; இவை மனிதத்தின் புனிதமான உணர்வு.

அன்பினில் உயர்ந்திருக்கின்ற மனிதனுக்கு, எதிரியென எவருமில்லை. உண்மையில் மனிதனின் எதிரி வெளியே இருப்பதில்லை. அவனுக்குள்ளேதான் இருக்கின்றான்.
நல்லவர்களுக்கு இரங்குவது இயற்கை. “பகைவனுக்கு அருள்வாய்! நன்னெஞ்சே! பகைவனுக்கு அருள்வாய்!’ என்று எதிரிக்காக பிரார்த்திக்கும் மகாகவி பாரதி, அன்பின் மணிமகுடம். நமக்கு பகைவரே இல்லை. மனதில் பகைமையும் இல்லை என்ற அன்புள்ளம் கொண்ட மனிதருக்கு”யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ தான். 

அமெரிக்காவினுடைய பதினாறாவது ஜனாதிபதியாக இருந்தவர் ஆப்ரகாம் லிங்கன். அவரை எதிர்த்து தேர்தலிலே எட்டு பேர் பேட்டியிட்டார்கள். அவர்கள் லிங்கன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பல கெடுதல்கள் செய்தார்கள். அத்தனையும் மீறி அவர் ஜெயித்துவிட்டார். அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக தனது தனிச் செயலாளரை அழைத்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டஎட்டு பேர்களின் முகவரியைப் பெற்றார். உடனே அவர்களின் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுத் திரும்பினார் ஆப்ரகாம் லிங்கன்.
தனிச் செயலாளர் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் லிங்கனிடம், “”நீங்கள் இந்த நாட்டின் முதல் குடிமகன். உங்களுடைய அதிகாரத்தால் இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடலாமே. அதைவிட்டுவிட்டு அவர்களின் வீட்டிற்குச் சென்று ஏன் வாழ்த்தினைப் பெறுகிறீர்கள்?” என்றார். அதற்கு ஆபிரகாம் லிங்கன், “அந்தக் காரியத்தை தான் இப்பொழுது நான் செய்து வந்தேன். பகைவர்களை பொறாமையால் அழிப்பதற்குப் பதிலாக அன்பினால் அவர்களது பகைமையை அழித்தேன்” என்றார்.

“அன்பு பொறுமையானது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பு ஒருபோதும் அழியாது” என்ற பைபிளின் வரிகளை வாழ்க்கையில் பிரதிபலித்தார் ஆபிரகாம் லிங்கன். 
“கருணையோடும் அன்போடும் செயல்பட்ட பெயரற்ற, நினைவற்ற செயல்கள் தான் ஒரு நல்லவனின் வாழ்வில் மிகச்சிறந்த பகுதி” என்கிறார் இங்கிலாந்து நாட்டு கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ் வர்த்.

இரண்டு சாதுக்கள் வட இந்திய பனிமலைப் பாதையில் ஓர் ஆலயம் நோக்கி பயணித்தனர். திடீரென பனி மழை பெய்தது. பனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகோர்த்து நடந்தனர். அவர்களது பயணத்தில் சாலை ஒரத்தில் ஒரு மனிதன் சாகும் தறுவாயில் இருந்தான். ஒரு சாது, தன்னுடன் வந்த சாதுவிடம், “”நாம் இருவரும் கைதாங்கலாக இவரை அழைத்துக்கொண்டு பக்கத்து கிராமத்திற்குச் சென்று விடலாம். அங்கு மருத்துவம் பார்த்து இவர் பிழைத்து கொள்ளட்டும்” என்றார். “இல்லை… இல்லை… என் உடம்பெல்லாம் நடுங்குகிறது, பனியும் பொழிகிறது. கோயிலுக்குச் செல்ல நேரமாகிவிட்டது. நான் முன்னே செல்கிறேன்” என்று சொல்லி அவர் பயணத்தைத் தொடர்ந்தார். 

“இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன். எனவே யாருக்காவது அன்பை என்னால் காட்ட முடிந்தால், எந்த நன்மையாவது செய்ய முடிந்தால், நான் இப்போதே செய்து விடுகிறேன். அதைத் தள்ளிப் போடவோ, ஒதுக்கவோ மாட்டேன். ஏனெனில் இந்த வழியே நான் மறுபடியும் வரமுடியாமல் போகலாம்’ என்ற பழமையான வரிகள் சாதுவின் மனதில் நிழலாட, சாது படுத்திருந்தவரிடம் சென்று அவர் கால்களிலும், கைகளிலும் தனது கைகளால் அழுத்தி தேய்த்தார். மெதுவாய் அந்த மனிதன் கண் திறந்தார். சாது தனது தோளிலே அவரைச் சுமந்தார். இருவரது உடலின் வெப்பமும் இருவரது இரத்த ஒட்டத்தை மெதுவாய் அதிகரிக்கச் செய்தது. பனியின் தாக்கம் குறைந்தது. 
ஒரு மைல் தூரம் கடந்த பின்பு அவ்வழியில் இன்னொருவர் படுத்திருந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அவர் முன்னால் சென்ற சாது எனத் தெரிந்தது. 

“புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு”
என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப அச்சாது அன்பில்லாத வெற்றுடம்பாய் கிடந்தார்.
தன்னலம் கொண்ட அன்பு தனித்துவிடப்பட்டது. சுமைகளைத் தாங்கும் அன்பிற்கு ஆற்றல் கூடியது. தன் சக மனிதர்களை நேசிப்பவனை உலகம் புகழ்கிறது” என்றார் அரிஸ்டாட்டில். அன்பு அழகாகவே மனிதர்களைப் புரிந்து கொள்கிறது.

“அன்பும், சிவமும் இரண்டு” என்பார் அறிவிலார், “அன்பே சிவம்’ என்பதை அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார் என்று உலகம் தேடும் உன்னத நிலையை அடைய நினைப்பவருக்கு 
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்…
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே 
என்று மனிதர்களிடம் “அன்பை பெருக்குங்கள், அன்பில்தான் இறைவன் வெளிப்படுவார்’ என்கிறது திருமூலரின் திருமந்திரம்.

“இந்த உலகம் அன்பினால் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. அன்பில்லாத வாழ்க்கை பூவும், பழமும் இல்லாத மரத்தை போன்றது” என்கிறார் கலீல் ஜிப்ரான்.

மனித மகிழ்ச்சிக்கு அன்புதான் அடிப்படை ஊற்று, பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள அன்புதான் மகிழ்ச்சிக்கு அடிப்படை.
மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றபோது அவர்களின் நடை உடை பாவனைகள் மற்றவர்கள் மீது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அது சில காலம் மட்டுமே நிற்கும். அவர்கள் காட்டுகின்ற அன்பு தான் நெடுங்காலம் கல்லில் செதுக்கிய சிற்பம் போல் அவர்கள் மனதில் அழகாய் நிலைபெறும். தியானிக்கின்றபொழுது மூளையில் உருவாகும் ஆல்பா அலைகள் மூளையினுடைய செயல்திறனைத் தூண்டுவது பிறர் மீது அன்பினை மலரச் செய்கிறது என்கிறது ஆராய்ச்சியின் முடிவுகள். 

ஒரு கிராமத்து மனிதன் நள்ளிரவில் சட்டென்று விழிந்தெழுந்தான். அவன் மிகவும் அன்பானவன். சக மனிதர்களை நேசிப்பவன். கடவுள் பக்தன். நிலவொளியில் அவன் கண்களில் ஒரு தேவதை பளிச்சிட்டாள். அவள் கையில் ஒரு தங்க புத்தகம். அவன் மெல்ல அருகில் சென்று, “”தேவதையே! இப்புத்தகத்தில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். 

“கடவுளை நேசிப்பவர்களின் பெயர்கள் இருக்கின்றன” என்றது தேவதை. “எனது பெயர் இருக்கிறதா?” என்று ஆவலாய்க் கேட்டான். புத்தகத்தை புரட்டி பார்த்துவிட்டு “இல்லை” என்றது தேவதை. “இன்னொரு புத்தகம் கடவுளிடம் இருக்கிறது. அதில் உமது பெயர் இருக்கிறதா? என்று பார்ப்போம். அதை நாளை எடுத்து வருகிறேன்” என்று சொல்லி பறந்தது தேவதை.

மறுநாள் விடியலுக்கு பதிலாக இரவுக்காக காத்திருந்தான். சொன்னபடியே தேவதை புதிய புத்தகத்தோடு வந்தது. “இதில் என் பெயர் இருக்கிறதா?” என்றான். “இருக்கிறது, இப்புத்தகத்தில் உனது பெயர் மட்டும்தான் இருக்கிறது” என்றது தேவதை. “அப்படியென்றால் இது என்ன புத்தகம்?” என்றான். “இது கடவுளால் நேசிக்கப்படுபவர்களின் பெயர்களை கடவுளே எழுதி வைப்பது” என்றது தேவதை. அன்பானவர்கள், கடவுளின் வடிவங்கள். காட்சியில் சாதாரணமானவர்கள், இயல்பானவர்கள், இயற்கையானவர்கள், இதமானவர்கள், நல்லவர்கள், பாசமிக்கவர்கள், தன்னலமற்றவர்கள், உண்மையாய் உழைப்பவர்கள், உலகை விரும்புபவர்கள், குடும்பத்தை நேசிப்பவர்கள், பணியில் புனிதமானவர்கள். மொத்தத்தில் மனிதத்தின் மாண்பானவர்கள்.

அவர்களின் கைகள், உதவி கரம் நீட்டும் ஏழ்மையின் வாய்க்கு உணவளிக்கும். அவர்களின் கால்கள் துயரப்படுபவர்களை நாடிச் செல்லும். அவரது கண்களில் துயரமானவர்களே தென்படுவார்கள். அவரது செவிகளில் துயரப்படுபவர்களின் ஓலங்களே கேட்கும். மொத்தத்தில் அவரது உடலும், உள்ளமும் இயலாதவர்களுக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும். அவர்களது அன்பினில் இவ்வுலகம் நிலைக்கும். அவர்களது பெயரை இறைவன் உச்சரித்துக் கொண்டிருப்பார்.

அன்பு மனிதனை கடவுளிடம் சேர்க்கும்!
அன்பே மனிதனை கடவுளாக்கும்! 

Related posts

வில்லிசைக் கலையின் முடிசூடா மன்னர் சின்னமணி

Tharani

மாணவர் அனுமதிக்காக இலஞ்சம் காேரல்

Tharani

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்

G. Pragas