கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

அரசின் போக்கு தமிழ் மக்களை அரசிடமிருந்து இன்னும் அந்நியப்படுத்தும்

தமிழில் தேசியகீதம் பாடுவது தொடர்பான மத்திய அரசின் போக்கு தமிழ் மக்களை அரசிடமிருந்து இன்னும் அந்நியப்படுத்தும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (31) வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். மேலும்,

இலங்கை அரசியல் அமைப்பில் 1956ம் ஆண்டு 33ம்இலக்கச் சட்டத்தின் மூலம் சிங்கள மொழி இலங்கையின் ஆட்சி மொழியாக பிரகடணப்படுத்தப்பட்டது. இதை அடுத்து எழுந்த சூழ்நிலை காரணமாக அன்றைய அரசாங்கம் 1958ம் ஆண்டு 28ம் இலக்க சட்டத்தின் மூலம் தமிழ் மொழியை அரசகரும மொழியாக ஏற்றுக் கொண்டது.

இவ்வகையில் தமிழும் ஆட்சி அதிகாரத்திற்குரிய நிருவாக மொழி அந்தஸ்தைப் பெற்றது. ஆயினும் தொடர்ச்சியான இனவாத புறக்கணிப்பு காரணமாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த தொடர் நிலைமை காரணமாகவே இனமுரண்பாடுகளும் வலுப் பெற்றிருந்தன.

1956ம் ஆண்டு ஏற்பட்ட மொழி உரிமை போராட்டத்தைத் தொடர்ந்து அரசகரும மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்ட போதும் இனமுறுகலும், முரண்பாடுகலும் வலுப்பெற்றன. இத்தகைய சூழலில் 1972ம் ஆண்டு பிரகடணப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசின் யாப்பின் மூலம் அரசகரும மொழியாக சிங்களத்தையே மேலும் உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 1978ல் பிரகடணப்படுத்தப்பட்ட மக்கள் குடியரசின் யாப்பின் நான்காவது அத்தியாயம் அரச கரும மொழிகள் பற்றி குறிப்பிட்டும் அதன் அதிகாரத்தை வெளிப்படுத்தியும் இருந்தது.

இதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் 13வது திருத்தச் சட்டமும் இலங்கைக்கான மாகாண தீர்வுகளை கூறியிருந்த போதும் இலங்கை 16வது திருத்தச் சட்டமானது தமிழ் மொழிநிருவாகத்திற்குரிய அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்த வகையிலயே கடந்த நல்லிணக்க அரசாட்சியில் தமிழிலேயே தேசிய கீதம் பாடப் பட்டமை அனைத்து மக்களின் மனஉணர்வுகளிலும் எமது தாய் நாட்டின் மீதான பக்தியும், பற்றுதியையும் உணர்வு ரீதியாக வெளிக்காட்டியிருந்தது.

இலங்கை சட்டவாக்க அதிகாரங்கள் பன்முகச் சமூகத்திற்குரிய ஜனநாயகத்தின் ஊடாக சோசலிசத்தை வென்றெடுப்பதே. என்ற உயரிய குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்புலத்தில் நடைமுறை சாத்தியப்பாட்டுக்கு முரணனான வகையில் இலங்கை ஜனநாயகப் போக்கானது சிறுபான்மைச் சமூகத்தை புறக்கணிக்கும் முறைமையில் தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழி நிருவாக மொழியாக அங்கீகரிக்கப்பட்டும, தேசியகீதத்தை தேசிய தினத்தில் தமிழில் பாடுவதற்கு மறுக்கப்படுவதென்பது இலங்கை சிறுபான்மை சமூகத்தினிடையே மறுதலையான சிந்தனை வெளிப்பாடுகளை வெளிப்படுத்து வதாகவே அமையும். இதுபோன்ற கடந்த கால செயற்பாடுகளே இலங்கை அரசை தமிழ்மக்கள் வேண்டா வெறுப்புடன் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு நிர்ப்பந்தித்தது.

எனவே நாட்டின் பாதுகாப்பு, சுவீட்சம் நிறைந்த நாடு என்ற தொணிப்பொருளில் அமையும் 72வது சுதந்திர தினம் சிறுபான்மையினரின் மொழி உரிமையை மறுப்பதன் மூலம் தோல்வியையே தழுவும் ஏனனில் தொடர்ச்சியான முரண்பாட்டுக்குள் இருந்து கொண்டு அந்த சிந்தனையில் இருந்து விடுபடாது தேசிய பாதுகாப்பபையும், சுவீட்சம் நிறைந்த நாடென்பதை கட்டியெழுப்புதல் என்பது அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்கும்.

இலங்கை வாழ்பன்முகசமூகத்தின் உரிமைகளை வழங்குவதன் மூலமே சுவீட்சத்தையும், பாதுகாப்பையும் கட்டியெழுப்ப முடியும். – என்றார்.

Related posts

இலங்கையில் பணிபுரியும் சீனர்களுக்கு வைரஸ் பரிசோதனை

reka sivalingam

மாேதலில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் 12 பேர் கைது!

reka sivalingam

சதாசிவ மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

கதிர்