செய்திகள்

அருகிச் செல்லும் மட்பாண்டத் தொழில்

இன்றைய சமுதாயத்தில் படிப்படியாக மருவி வருகின்ற மட்பாண்டத் தொழில் சிலரால் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்ற போதும், மட்பாண்டத் தயாரிப்புக்கான மூலப்பொருளான களிமண் பெறுவதில் கஷ்டங்களை எதிர்கொள்வதாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப காலங்களில் வசதி குறைந்த மக்களின் குடிசைக் கைத்தொழிலாக முன்னெடுக்கப்பட்டு வந்த மண்பாண்ட உற்பத்தி, பாய் பின்னும் தொழில் போன்றவையெல்லாம் நவீன பொருட்களின் வருகையால் படிப்படியாக எமது பயன்பாட்டில் இருந்து அருகி வருகின்றன. குடிசைக் கைத்தொழிலாக முன்னெடுக்கப்பட்ட மட்பாண்ட உற்பத்திப் பொருட்களுக்குப் பதிலாக அலுமினியம் மற்றும் பிளாஸ்ரிக் போன்றவை வந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. புதியனவற்றின் வருகையால் பழையவற்றின் பயன்பாடுகள் மக்கள் மத்தியில் மருவிப் போயுள்ளன.

இருந்தபோதும் குறிப்பிட்ட தொகை மக்கள் இன்றும் கூட மட்பாண்டங்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் பலர் இன்றும் கூட தொடர்ந்து மட்பாண்ட உற்பத்தியை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் தமது மட்பாண்ட உற்பத்திக்கான களிமண்ணைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தமக்குத் தேவையான களிமண்ணை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள பிராமணக்குளம் பகுதியிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், அந்த களி மண்ணை எடுத்து வருவதற்கான உரிய அனுமதிகள் தமக்கு வழங்கப்படுவதில்லை என்றும் இத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

வருடத்தில் உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டி ஒன்றின் மூலம் பெறப்படுகின்ற ஒரு இழுவைப் பெட்டி களிமண்ணுக்கே அனுமதி வழங்கப்படுவதாக அவர்கள் கவலைப்படுகின்றனர்.

அதற்கு மேல் களிமண் ஏற்றி வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் இதனால் களிமண் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதுடன், தங்களது வாழ்வாதாரத்துக்கான தொழிலை மேற்கொள்ள முடியாது இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் கள் உற்பத்திக்கான களிமண் முட்டிகள், பொங்கல் பானை போன்ற மட்பாண்டங்கள் அதிகளவில் விற்பனை செய்பப்படுகின்ற காலமாக இருந்தாலும் அதற்கான களிமண் இல்லாததால் போதிய மட்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுபவர்களும் தமக்கான களிமண்ணைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் உள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சூரிய கிரகணத்தின் தோற்ற மாற்றங்கள்

reka sivalingam

கிளிநொச்சியில் ஒருவர் கைது!

reka sivalingam

போதை பொருளுடன் மலைக்கு சென்ற 20 பேர் கைது!

G. Pragas

Leave a Comment