செய்திகள்

அலட்சியமான அறுவைச் சிகிச்சை கிருமித்தொற்றுள்ளாகி பெண் சாவு!

வடமராட்சி, நெல்லியடியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்,கர்ப்பப்பையை அகற்றுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் போது, தவறுதலாக வயிற்றுக்குள் 50 செ.மீ நீளமான துணியையும் வைத்து தையல் போடப்பட்டதால், கிருமித் தொற்றுக்குள்ளாகி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை யாக்கரு பகுதியைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புற்றுநோய் காரணமாக அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டுள்ளது. அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, அந்தப் பெண் உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. எனவே அவரது கர்ப்பப்பையை உடனடியாக அகற்றுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் நெல்லியடியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரால் , குறித்த பெண்ணின் கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆயினும் இதன்போது குறித்த சத்திரசிகிச்சை நிபுணரும், அவரது குழுவினரும் தவறுதலாக பெண்ணின் வயிற்றுக்குள் , அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய 50 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் கொண்ட துணியையும் அவரது உடலுக்குள் வைத்து தைத்துவிட்டனர். இதனையறியாத குறித்த பெண் அறுவைச் சிகிச்சை முடிந்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், அந்தப் பெண்ணுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்போது, பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.அவரது உயிரிழப்புக்கு அந்தத் துணியால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940