ஏனையவை செய்திகள்

இன்றைய ஆரோக்கிய ஆலோசனை

சதையியை பாதிக்கும் செயற்பாடுகள்

வயிற்றில் இரைப்பைக்குக் கீழே இடப்பக்கமாக, ஒரு வாழை இலையை விரித்ததுபோல் இருப்பது தான் கணையம் அல்லது சதையிஆகும். குடலில் சமிபாட்டுக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் அடங்கிய கணைய நீரை இது சுரக்கிறது. இந்நீர் கணையக் குழாய் வழியாகக் குடலுக்குள் வந்துசேருகிறது. அத்தோடு இன்சுலின், குளுக்ககான் ஆகிய ஹோர்மோன்களைச் சுரப்பதும் கணையமே.  

இன்சுலின் குருதியில் குளுக்கோஸைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. குளுக்ககான், குருதியில் குளுக்கோஸ் குறையும்போது, ஈரலில் சேமிக்கப்பட்டுள்ள குளுக்கோஸை எடுத்து வந்து குருதியில் கலக்கிறது. இந்த இரண்டு ஹோர்மோன்களும் ஒன்றுக்கு ஒன்று ஏற்ப செயல்படுவதால், குருதியில் குளுக்கோஸ் உரிய மட்டத்தில் பேணப்படுகின்றது. எனினும் ஏதாவது ஒரு காரணத்தால் கணையம் பாதிக்கப்படுமாயின் நீரிழிவு நோய் ஏற்படும்.  

சதையி எவ்வாறு பாதிக்கப்படும்?  

மனிதனின் கணையம் திடீரென்றோ சிறிது சிறிதாகவோ பாதிக்கப்படலாம். அதன் விளைவாக கணையம் வீங்கிவிடும். அந்நிலை ‘கணைய அழற்சி’ (Pancreatitis) எனப்படுகின்றது.

இப்பிரச்சினைக்கு மது அருந்துதல் முக்கிய காரணமாக விளங்குகின்றது. அதாவது அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்குக் கணையக் குழாயில் ஒருவகைப் புரதப்பொருள் படிந்து நாளடைவில் அக்குழாயை அடைத்துவிடும்.  

அப்போது கணையத்தில் சுரக்கும் சமிபாட்டு நீர் குடலுக்குள் செல்லாமல் அங்கேயே தங்கிவிடும். அது கணையத்தின் கலங்களை அழித்துவிடும். இதன் விளைவாக கணைய அழற்சி ஏற்படும். இது பெரும்பாலும் தினமும் மது அருந்தும் பழக்கமுள்ள ஆண்களுக்கே ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இப்பாதிப்புக்கான அச்சுறுத்தல் மிக அதிகமாகும்.  

அதேநேரம், பித்தப்பையில் கற்கள் உண்டாகி பித்தக்குழாயை அடைத்துக்கொள்ளுமாயின் ஈரலில் சுரக்கப்படும் பித்தநீர் மற்றும் முன்சிறுகுடலில் சுரக்கின்ற சமிபாட்டுரிய நீர் என்பன கணையத்துக்குள் பிரவேசித்து அங்குள்ள கலங்களை அரிக்கும் அதன் விளைவாகவும் கணையத்தில் அழற்சி தோன்றும்.  

இக்காரணங்களை விடவும் அம்மை, மஞ்சள் காமாலை, எயிட்ஸ் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் கிருமிகளும் சிலவகை பக்றீரியாக்களும் கூட கணைய அழற்சியை ஏற்படுத்தும். இவை தவிர, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரைக்கிளிரைசைட் மிகைக் கொழுப்பு, பரம்பரைக் கோளாறு, புற்றுநோய், தன் தடுப்பாற்றல் நோய், தேள்கடி உள்ளிட்ட விஷக்கடிகள், வயிற்றில் அடிபடுதல், சில மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம். ஆனால், இவை எல்லாமே மிகவும் அரிதாகவே கணைய அழற்சிக்கு வழி அமைக்கும் என்பதை மறந்து விடலாகாது.  

சதையி பாதிப்புக்கான அறிகுறிகள்  

சதையி(கணையம்) அழற்சியில் இரு வகை உண்டு. அதனால் வகைக்கு ஏற்ப அறிகுறிகள் வெளிப்படும். அதாவது,  

1. ‘திடீர்க் கணைய அழற்சி’ (Acute Pancreatitis): வயிற்று வலி திடீரென்று தொடங்கும். மேல் வயிற்றில் வலி ஆரம்பித்து முதுகுப் பக்கம் வரையும் பரவும். குனிந்தால் வலி சிறிதளவு குறையும். படுத்தால், உணவு சாப்பிட்டால் வலி கடுமையாகிவிடும். சிலர் வலி தாங்க முடியாமல், தரையில் உருளுவார்கள். அதிக வாந்தி ஏற்படும். அதேநேரம் கடுமையான இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கும் இதே போன்றுதான் வயிறு வலிக்கும். ஆனால், அவர்களுக்கு வாந்தி எடுத்த பின்னர் வயிற்று வலி குறைந்துவிடும். கணைய அழற்சி உள்ளவர்களுக்கு வாந்தி எடுத்தாலும் வயிற்று வலி குறையாது. கடுமையான கணைய பாதிப்பு என்றால் குருதி வாந்தியும் ஏற்படும். மலம் கறுப்பாகப் போகும். இலேசான காய்ச்சலும் காணப்படும். இது குணமடைய முடியும்.  

2. நாட்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis): இது சிறிது சிறிதாகக் கணையம் பாதிக்கப்பட்டு நாளடைவில் நோய் தோன்றும். ஒருவர் சுமார் ஐந்து வருடங்கள் தொடர்ந்து மது அருந்துபவராக இருந்தால் அந்நபருக்கு நாட்பட்ட கணைய அழற்சி ஏற்பட்டு விட்டதாகக் கருதலாம். இது மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் நோயாகும். முதலில் அஜீரணம் ஆக்கிரமிக்கும். சாப்பிடவே பிடிக்காது. குமட்டல் காணப்படும். அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்படும். அத்தோடு மிகுந்த நாற்றத்துடன் மலம் நுரை நுரையாக வெளியாகும். ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும். உடல் மெலியும். மஞ்சள் காமாலையும் ஏற்படும். நூற்றுக்கு இருபது பேருக்கு நீரிழிவும் ஏற்படலாம். என்றாலும் நாட்பட்ட கணைய அழற்சியைக் குணப்படுத்த வழியில்லை. இந்நோய்களால் கணையப் பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும் என்பதுதான் அதற்குக் காரணமாகும். இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். அதற்காகத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.  

குறிப்பாக கணையம் வீங்கி இருந்தால் மருந்துகள் மூலம் குணப்படுத்தி விடலாம். நோயின் மூல காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கும் போது நோய் குணமாகிவிடும். அதேநேரம் மதுவை மறப்பதற்கு வழி தேடினால்தான் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாக இருக்கும். கணையம் பெரிதும் பாதுக்கப்பட்டு விட்டாலோ, அதில் குருதிப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ, கல் அடைப்பு இருந்தாலோ சத்திர சிகிச்சை அளிக்க வேண்டி ஏற்படலாம்.  

நாட்பட்ட கணைய அழற்சியின் போது வயிற்று வலி நிரந்தரமாக இருக்காது. எப்போதாவது இருந்துவிட்டு வந்துபோகும். என்றாலும் வயிற்று வலி ஏற்கனவே சொன்னதுபோல் கடுமையாகவே இருக்கும். ஆயினும் பலரும் இதை குடல் புண் எனத் தப்பாகப் புரிந்துகொண்டு கடைகளில் மருந்துகளை வாங்கி பாவிக்கின்றனர். ஆனாலும் வலி குறையாது. ஆனால் இந்நோய் ஏற்பட்டு நாட்கள் செல்லச்செல்ல வயிறு உப்பி மூச்சுவிட முடியாத நிலைமை ஏற்படும்.  

இதற்கு பித்தநீர் துளிகூடக் குடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதே காரணமாகும். அதன் காரணத்தினால் இது தொடர்பில் கவனயீனமாக நடந்து கொள்ளக்கூடாது. மருத்துவர்களை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நோயைத் தவிர்த்துக்கொள்ள முடியும். அதற்கு மது அருந்துவதை முற்றாகக் கைவிட வேண்டும்.

புகைபிடிக்கக் கூடாது. பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி பெற்றுக்கொள்வதும் நல்லது. வயிற்றில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெறாது ஒருபோதும் மருந்துகளைப் பாவிக்கக்கூடாது. 

Related posts

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

Tharani

கோப்பாய் பாலம் அருகே விபத்து; இருவர் காயம்!

G. Pragas

யானை அல்லது அன்னம்; முடிவு விரைவில்! – இராதா

G. Pragas

Leave a Comment